சிறப்புச் செய்தியாளர் …
மாநில அரசு பதவியில் இருந்து மத்திய அரசு பதவிக்குக் சென்ற ஒரு உயரதிகாரியிடம் பேசியபோது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்துப் பேசியதன் பின்னணியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் குணநலன்களை டெல்லி பாஜக மேலிடம் பல்ஸ் பார்த்த அம்சமும் அடங்கியிருக்கிறது என்று பகீர் தகவலை தெரிவித்தார்.
அதிர்ச்சியுடன் என்ன சார் சொல்கிறீர்கள் என்று வினா எழுப்பினோம். பொறுமையாக கேளுங்கள் என்று கூறிவிட்டு, நிதானமாக பேச தொடங்கினார்.
மே 7 ஆம் தேதி தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின், 40 நாட்களுக்குப் பிறகு கடந்த 17 ஆம் தேதி காலை டெல்லி வந்தார். அன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான கோரிக்கைகளை வழங்கி, பேசினார். முதல் அமைச்சராக டெல்லி வருவதும், அதிகாரப்பூர்வமாக பிரதமர் மோடியை சந்திப்பதும் மு.க.ஸ்டாலினுக்கு இதுவே முதல்முறை.
தமிழ்நாட்டைப்போல மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய 4 மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்று, அந்தந்த மாநிலங்களில் முதல்வர்கள் பதவியேற்றுள்ளனர். அசாம் மாநில முதல்வர், டெல்லியில் ஜுன் 2 ஆம் தேதி பிரதமரை சந்தித்துள்ளார். எஞ்சிய மாநில முதல்வர்களான கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த முதல் அமைச்சர்கள் இன்னும் பிரதமர் மோடியை சந்திக்கவில்லை.
எந்த நோக்கத்திற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி வந்தாரோ, அந்த நோக்கம், பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போதே முழுமையடைந்துவிட்டது. ஆனால், முந்தைய அதிமுக அரசின் முதல்வர்களுடான நெருக்கம் போல, பிரதமருக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையேயான சந்திப்பு, இரண்டு பதவிகளுக்குரிய அந்தஸ்தை கடந்து நட்பின் அடிப்படையில், தனிப்பட்ட முறையிலான நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொள்ளும் வகையிலான எந்தவொரு சமிக்ஞைகளும் ஏற்பட்டுவிடவில்லை.
இருந்தாலும் கூட, பிரதமருடனான சந்திப்பு குறித்து டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் அமைந்திருந்ததாக கூறினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அன்று மாலை கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை சந்தித்தார். மறுநாள் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்துவிட்டு, சென்னை திரும்பிவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவரைப் பொறுத்தவரை, டெல்லி பயணம் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், பாஜக மேலிடம்தான், முதல்வர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணத்தையொட்டி, பயந்து போய் இருப்பதைப் போல தெரிகிறது என்று கூறி விட்டு சில விநாடிகள் மௌனம் காத்தார். இதயத்துடிப்பு அதிகமாகிவிட்டது.
தனது மௌனத்தை கலைத்துவிட்டு மீண்டும் பேசத் தொடங்கினார்.
தமிழகம் வரலாறு காணாத கடன் சுமையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற, தற்போது உள்ள வழக்கத்தைவிட வருவாய் பன்மடங்கு அதிகரித்தால்தான், ஆட்சியை குறைந்த பட்ச நிம்மதியோடு நகர்த்திச் செல்வது சாத்தியமாகும். ஆனால், கொரோனோ காலத்தில், இந்தாண்டு இறுதி வரை, தமிழகத்தில் வருவாயை அதிகரிக்க வாய்ப்பு இல்லை.
தமிழக அரசுக்கு செலவினங்கள் கூடிக் கொண்டே போகும் இந்த நேரத்தில், மத்திய அரசின் உதவி பெருமளவில் தமிழக அரசுக்கு தேவைப்படும். அதற்கு ஏற்ப, தமிழக அரசு, மத்திய அரசுடனான இணக்கத்தை அதிகரித்துக் கொள்ளும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணத்திட்டம் அமைந்திருக்கும் என்று பாஜக மேலிடம் எதிர்பார்த்திருக்க, உனக்கும் பெப்பே, உங்கப்பனுக்கும் பெப்பே என்கிற வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணத்திட்டம் அமைந்துவிட்டதால், திமுக அரசின் மனவோட்டத்தை புரிந்து கொள்ள முடியாமல் டெல்லி பாஜக அரசு தலையை பியத்துக் கொண்டிருக்கிறது.
டெல்லியில் இரண்டு நாள் தங்கியிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழரும், மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமனை சந்திப்பது தொடர்பாக துளியளவும் ஆர்வம் காட்டாததுதான், மத்திய பாஜக தலைவர்களிடம் விவாதமாக மாறியிருக்கிறது. இத்தனைக்கும் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையேயான காணொளி வாயிலான முதல் சந்திப்பிலேயே சரியான புரிதல் இல்லாமல் போய்விட்ட நிலையில், நிர்மலா சீதாராமனுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்து, மத்திய, மாநில அரசுகளிடையேயோன இணக்கத்தை அதிகரித்துக் கொள்வார் மு.க.ஸ்டாலின் என்ற எதிர்பார்ப்பு, மத்திய பாஜக தலைவர்களிடம் இருநதது.
ஆனால், மாநில சுயாட்சிக் கொள்கையில் உறுதியாக இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தான் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற அடிப்படையில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசோடு இணக்கமாக போக தயாராக இருக்கிறோம் என்பதை காட்டும் விதமாக மட்டுமே தனது டெல்லி பயணத்தை அமைத்துக் கொண்டதுதான், மத்திய பாஜக அரசில் உள்ள மூத்த தலைவர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துவிட்டது.
இரண்டு அரசுகளுக்கு இடையேயான நல்லிணக்கத்தைத் தவிர, பாஜக.வுடன் எந்தவொரு நெருக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ள திமுக தயாராக இல்லை என்பதை தனது பயணத்தின் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துவிட்டார் என்பதைதான் டெல்லி பாஜக மேலிட தலைவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
இப்படிபட்ட நேரத்தில்தான், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் பயணத்திட்டம் மத்திய உள்துறைக்கு கிடைத்தவுடன், அவர் மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனவோட்டத்தை அறிந்து கொள்ள பாஜக மேலிடம் காய் நகர்த்தியது.
வழக்கமாக ஒரு மாநிலத்தில் ஆளுநராக உள்ள ஒருவர், தனது அன்றாட பயணத்திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அதுவும் தான் ஆளுநராக உள்ள மாநிலத்தில் இருந்து வேறு ஒரு மாநிலத்திற்குச் செல்வதாக இருந்தால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியை கண்டிப்பாக பெற வேண்டும். அந்த மாநிலத்தில் யார் யாரையெல்லாம் சந்திக்கப் போகிறேன் என்பதையும் தனது பயணத்திட்டத்தில் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
அந்த வகையில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனிப்பட்ட நட்பின் காரணமாகவும் அலுவல் ரீதியான சந்திப்பாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் நோக்கம் குறித்து ஆளுநரே வெளிப்படையாக பேட்டியளித்துவிட்டாலும் கூட, முதல்வர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வமான அறிக்கை ஒன்றை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த அறிக்கையில்தான், முதல்வர் மு.க.ஸ்டாலின் பண்பட்ட தலைவராக இருக்கிறார் என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என்று தெரியாதபோதும், இருவருக்கும் இடையே நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு நடைபெற்ற சில நிகழ்வுகள், ஆதாரப்பூர்வமற்ற தகவலை உண்மையென நம்பும்படியாக வைத்துள்ளது.
தமிழர், தமிழ்நாட்டின் முதல்வர் என்ற அன்பின் காரணமாகதான் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்துள்ளார். அவரை மரியாதையாக வரவேற்று, உபசரித்து, வழியனுப்பி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அலுவல் ரீதியான சந்திப்பாக மட்டுமே கருதியுள்ளார். அதற்கு காரணம், ஆளுநருக்கு இருந்த ஆர்வம் போல முதல்வருக்கும் விருப்பம் இருந்திருந்தால், தனது இல்லத்திற்கு வந்த ஆளுநருடன் தனது மனைவி துர்காவுடன் சேர்ந்து சந்தித்து பேசியிருப்பார் முதல்வர். ஆனால், அப்படியொரு சந்திப்பு நிகழ்த்தாக தெரியவில்லை.
மேலும், இருவரின் சந்திப்பு தொடர்பான செய்தியும், புகைப்படங்களும் ஆளுநரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்திலும், முதல்வரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்திலும் இடம் பெற்றிருந்தது. ஆளுநரின் சந்திப்பு தொடர்பாக முதல்வருக்கு சந்தேகம் ஏற்பட்டதோ என்னவோ அல்லது பாஜக.வுடன் தனிப்பட்ட முறையிலான நட்பை தான் ஒரு போதும் கொண்டாடப் போவதில்லை என்ற சிந்தனையோ என்னவோ, முதல்வர் மு.க.ஸ்டாலினின் அதிகாரப்பூர்வமான டிவிட்டர் பக்கத்தில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுடனான சந்திப்பு குறித்த செய்தியும், புகைப்படங்களும் நீக்கப்பட்டிருக்கின்றன.
இதுபோன்ற அம்சங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, முதல்வர் மு.க.ஸ்டாலினை மத்திய பாஜக அரசு வேவுப் பார்க்க தொடங்கிவிட்டதோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை என்று கூறிவிட்டு வாட்ஸ் அப் கால் இணைப்பை துண்டித்துக் கொண்டார் டெல்லியில் உள்ள தமிழக உயரதிகாரி.