மறைந்த அதிமுக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா, நாள் தவறாமல் ஆடியோ வெளியிட்டு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். ஆனால், சத்தமே இல்லாமல் எதிர்க்கட்சித் தலைவரும் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் ஆகியோர் இணைந்து, அரசியலுக்கு அப்பாற்றபட்டு முக்கியமான ஒரு பணியை ஆற்றியுள்ளது, அதிமுக முன்னாள் அமைச்சர்களிடமும், தலைமைக் கழக நிர்வாகிகளிடமும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே முட்டல் மோதல் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்று உட்கட்சி அரசியலை ஊதிப் பெரிதாக்கி கொண்டு வரும் இந்த நேரத்தில், இரட்டை குழல் துப்பாக்கிப் போல இருவரும் இணைந்து சென்று இரண்டு மணிநேரத்திற்கு மேலாக ஒரே இடத்தில் அமர்ந்து, முக்கிய ஆலோசனைகளை வழங்கியிருக்கும் செய்தி, 24 மணிநேர தாமதத்திற்குப் பிறகு காட்டுதத் தீயாக பரவி வருவது, அதிமுக தொண்டர்களையும் உற்சாகத்தில் துள்ளி குதிக்க வைத்துவிட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பகல் பொழுதில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம், கட்டட தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் பிஸியாகக இருந்தவர், மாலை நேரத்தில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு, நேற்றைய பணியை நிறைவு செய்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அதே நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், தனித்தனியாக அவரவர் இல்லங்களில் இருந்து புறப்பட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் ஜெ டிவி அலுவலகத்திற்குச் சென்று இறங்கினர். முன்னறிவிப்பு இன்றி ஒன்றன் பின் ஒன்றாக இருவரும் அலுவலகத்திற்குள் நுழைந்ததைக் கண்டு நியூஸ் ஜெ டிவி நிர்வாகத்தினர், செய்திப் பிரிவில் உள்ள ஊடகவியலாளர்கள் என ஒட்டுமொத்த பணியாளர்களும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.
முதலில் நிர்வாகத் தரப்பினரோடு பேசிய இரட்டையர்கள், நியூஸ் ஜெ. டிவி.யை தொடர்ந்து நடத்துவதில் எந்த காலத்திலும் பொருளாதார நெருக்கடி ஏற்படாது என்றும் அதனால், அதிமுக எதிர்க்கட்சியாகி விட்டது, தொடர்ந்து நியூஸ் ஜெ டிவி இயக்கப்படுமா என்ற சந்தேகம் எப்போதும் வந்துவிடக் கூடாது.
அதிமுக ஆளும்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி நியூஸ் ஜெ. டிவியை தொடர்ந்து நடத்துவோம். அதில் துளியும் சந்தேகம் வேண்டாம். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரோடு இயங்கிக் கொண்டிருக்கும் நியூஸ் ஜெ., டிவி., அம்மாவின் கனவை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து வெற்றிகரமாக பயணிக்கும். அம்மா எந்த லட்சியத்தோடு ஜெயா டிவியை தொடங்கினாரோ, அதே லட்சியத்தை நெஞ்சில் சுமந்துதான் நியூஸ் ஜெ டிவியை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
நமது அம்மா நாளிதழ் தொடங்கிய நாளில் இருந்து அதிமுக ஆட்சியில் இருந்த நாள் வரை, அதிமுக அரசின் சாதனைகளை தொண்டர்களிடம், பொதுமக்களிடமும் முழுமையாக எடுத்துச் சென்றது. விளம்பர வருமானத்தை மட்டுமே நம்பி அம்மா நாளிதழ் இயங்கவில்லை. தனிப்பட்ட முறையிலான நிதி ஆதாரத்தை முதலீடாக கொண்டும் செயல்பட்டது. அதிமுக எதிர்க்கட்சியான பிறகும் நமது அம்மாவை அதேபாணியில்தான் கொண்டு வர உத்தரவிட்டிருக்கிறோம். ஆனால், எதிர்க்கட்சி கோணத்தில் இருந்து செய்தியை தருவதில் செய்திப்பிரிவு தற்போது சுணங்கிவிட்டது. திமுக ஆட்சிக்கு எதிரான மக்களின் இயல்பான எதிர்ப்புகளைக் கூட பிரதான செய்தியாக்க்யும் முன்னிலைப்படுத்தியும் தருவதில் நமது அம்மா நாளிதழ் பணியாற்றினார்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்பது எஙகளுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
நமது அம்மா நாளிதழ் அலுவலகத்திற்கும் ஒருநாள் நேரில் சென்று அக்கறையில்லாமல் பணியாற்றும் ஊழியர்களையும் சுளுக்கு எடுக்கவும், செய்திப்பிரிவை சீரமைக்கும் பணியையும் முடுக்கி விட உள்ளோம்.
அதிமுக புகழ் பாடும் ஒவ்வொரு ஊடகமும், ஆளும்கட்சியாக திமுக வந்துவிட்டதே என்று பயப்படாமல், நேர்மையான ஊடகப் பணியை முழுமையாக ஆற்ற வேண்டும். விறுவிறுப்பாக செய்திப் பிரிவு இயங்க வேண்டும் என்றால் நிர்வாகத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் தைரியமாகவும், துணிச்சலோடும் இருந்தால்தான், செய்தி தயாரிப்பில் இருப்பவர்கள் துணிவோடு வேலை பார்க்க முடியும் என்று கிளிப்பிள்ளைக்கு பாடம் நடத்துவதைப் போல எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பாடம் எடுத்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, செய்தி தயாரிப்பு பிரிவில் உள்ளவர்களை அழைத்து ஒரு மணிநேரத்திற்கு மேலாக இரட்டையர்கள் அறிவுரைகளை வழங்கியுள்ளனர். ஆளும்கட்சியாக அதிமுக இருந்த போது தரமான செய்திகளை வழங்கியதை விட தற்போதைய காலம்தான், செய்தியாளர்களுக்கும் செய்தியை வழங்குபவர்களுக்கும் சோதனையான காலமாக இருக்கும்.
திமுக அரசை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் விமர்சனம் செய்வதற்கும்,அதை செய்தியாக வெளியிடும் நியூஸ் ஜெ., டிவிக்கும் வேறுபாடு உள்ளது. எப்போதுமே ஆளும்கட்சியை விமர்சனம் செய்கிற ஊடகங்களுக்குதான் பொதுமக்களிடமும் மிகுந்த வரவேற்பு இருக்கும். அந்த வகையில், ஊடக நெறிமுறைகளுக்கு உட்பட்டு திமுக அரசின் திட்டங்களை, அமைச்சர்களின் செயல்பாடுகளை அணுகி பார்த்து, சீர்தூக்கி செய்திகளை வெளியிட வேண்டும். ஊடக அறத்தின் இருந்து விலகாமல் தரமான செய்தியை தருவதில் கவனம் செலுத்துங்கள் என்று மிகுந்த நிதானமாக ஓ.பி.எஸ்.ஸும், இ.பி.எஸ்.ஸும் அறிவுரை கூறியிருக்கிறார்கள்.
திமுக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் ஜோடிக்கப்பட்ட செய்திகளால் நெருக்கடியை தருவதாக நினைத்துக் கொண்டு செய்திகளை உருவாக்காதீர்கள். பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக நியூஸ் ஜெ டிவி செய்திகள் அமைந்தாலே, பொதுமக்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்து விட முடியும் என்று நிதானமாக இரண்டு தவைர்களும் ஆலோசனைகளை கூறியதைப் பார்த்து, ஒட்டுமொத்த நியூஸ் ஜெ டிவி பணியாளர்களும் வியப்பில் ஆழ்ந்து போனதாக தகவல் கிடைத்துள்ளது.
நியூஸ் ஜெ. டிவி நிறுவனத்திற்கு இ.பி.எஸ்.,ஸும், ஓ.பி.எஸ்.ஸும் இணைந்து சென்று ஆய்வு நடத்தியதையும், ஆலோசனைகளை கூறியதையுமே ஒரு செய்தித்தொகுப்பாக வெளியிட்டு இருந்தால், பொதுமக்களிடமும் அதிமுக.வினரிடம் ஒரே ஒரு செய்தியின் மூலம் மிகப் பெரிய ஈர்ப்பை நியூஸ் ஜெ டிவி பெற்றிருக்க முடியும். ஒரு சில நிமிடங்களிலேயே உலகளவிலான பார்வையாளர்களையும் அள்ளியிருக்க முடியும்.
இருவரும் இணைந்து நியூஸ் ஜெ டிவி அலுவலகத்திற்கு வந்த நிகழ்வு, சமூக ஊடகங்களிலும் வைரலாகி இருக்கும். இதன் மூலம் அரசியல் ஆதாயத்தையும் அதிமுக.வுக்கு தேடி தந்திருக்க முடியும். 50க்கும் மேலான ஆடியோக்களை வெளியிட்டு இரட்டை தலைமை கொண்ட அதிமுக.வுக்கு நெருக்கடி கொடுத்து வரும் வி.கே.சசிகலாவின் எதிர்காலத்திட்டத்திற்கும் சாவுமணி அடித்திருக்க முடியும் என்று அதிமுக ஊடகப் பிரிவைச் சேர்ந்த அனுபவமிக்க செய்தியாளர்கள் நல்லரசின் காதில் ஒருவர் பின் ஒருவராக ஓதினார்கள்..