Sun. May 19th, 2024

கரூர் மாவட்ட அமைச்சரான செந்தில் பாலாஜி, கரூர் மாவட்டத்தில் அதிமுக.வை கூண்டோடு காலி பண்ணும் வேலையில் முழு மூச்சில் ஈடுபட்டு வருகிறார். ஜென்ம எதிரியான முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை, சபதம் போட்டு சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்தியதையடுத்து, கரூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய அதிமுக நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை எதிர்த்துக் கொண்டு வரும் ஐந்தாண்டுகளும் கரூர் மாவட்டத்தில் அரசியல் செய்ய முடியாது என்று அரற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரத்தில், கடந்த 5 ஆண்டு காலமும் ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு பல நூறு கோடி ரூபாயை போக்குவரத்துத் துறையில் இருந்து வாரி சுருட்டி பதுக்கி வைத்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தன்னுடைய விசுவாசிகளே கட்சி மாறும் மனநிலைக்கு வந்துவிட்டதால், அவர்களை அதிமுக.விலேயே தக்க வைக்க கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்.

இப்படிபட்ட நிலையில், எம்.ஆர். விஜயபாஸ்கரை ஒண்டிக்கட்டையாக நிற்க வைக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன், சாம,தான,பேத தண்டத்தை எல்லாம் பயன்படுத்த தொடங்கிவிட்டார் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி. கரூர் மாவட்ட அதிமுக.வை பொறுத்தவரை, அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் இருந்து எந்த நேரத்தில் தொலைபேசி அழைப்பு வரும் என்று காத்திருப்பவர்கள்தான் ஏராளம்.

அந்தளவுக்கு படுவேகமாக கரூர் மாவட்ட அதிமுக.வை கரைத்துக் கொண்டிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, கூடுதல் பொறுப்பாக சேலம் மாவட்டத்தை வழங்கிய திமுக தலைமைக்கு அன்பு பரிசுகளை வழங்க காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார். சேலம் மாவட்ட அதிமுக.வில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு காட்டி வரும் முக்கிய அதிமுக நிர்வாகிகளையும் தட்டி தூக்க ரகசியமாக பேச்சுவார்த்தையை துவங்கிவிட்டதாக தகவல்கள் கசிகின்றன.

அதிமுக முக்கிய புள்ளியை தூக்கி எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்த பிறகு அங்குள்ள அமமுக முக்கிய புள்ளிகளையும் திமுக.வில் இணைக்க வியூகம் வகுத்துள்ளதாகவும், அந்த வியூகமும் வெகு விரைவாக நிறைவேறும் என்று சேலம் மாவட்ட திமுக முக்கிய புள்ளிகள் காதை கடிக்கின்றனர்.

கரூர், சேலம் ஆகிய மாவட்டங்களை கடந்து அமைச்சர் செந்தில் பாலாஜியுன் கொடி, வேலூர் மாவட்டத்தில் பறக்க துவங்கிவிட்டது என்பதுதான் ஹாட் நியூஸ். வேலூர் மாவட்ட அதிமுக மற்றும் அமமுக.வில் அதிருப்தியில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னணி நிர்வாகிககள் ஆகியோரை குறிவைத்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆடி வரும் ஆடு புலி ஆட்டம்தான் வேலூர் மாவட்ட திமுக முன்னணி தலைவர்களை கொந்தளிக்க வைத்து இருக்கிறது என்கிறார்கள் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய திமுக நிர்வாகி ஒருவர். அவரிடம் பேசினோம்.. அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆள் பிடிப்பு ஆட்டத்தை அக்குவேறு ஆணி வேறாக போட்டு உடைத்தார்.

வேலூர் மாவட்டம் என்றாலே தற்போதைய பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பெயர் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். திமுக.வில் அவர் விடும் மூச்சுக் காற்றைக் கூட தடம் மாற்றிவிடும் அளவுக்கு செல்வாக்கானவர்கள் இல்லை. 50 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த அவருக்கு, தற்போதைய திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கட்சியில் செல்வாக்கு பெற தொடங்கிய காலத்தில்தான் மணி கட்டப்பட்டது.

அமைச்சர் காந்தி, அணைக்கட்டு எம்.எல்.ஏ நந்தகுமார் போன்ற இளவரசர்கள் தோன்றி, செல்வாக்குப் படைத்த தலைவர்களாக உயர்ந்து நிற்கத் தொடங்கினர்.இப்படி மூம்மூர்த்திகளின் ஆதிக்கத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மாற்றுக்கட்சியைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகள், அவரவர் கட்சிகளில் இருந்து விலகி திமுக.வில் சேர வேண்டும் என்று விருப்பப்பட்டால், இந்த மூம்மூர்த்திகள் ஆசியோடுதான் அண்ணா அறிவாலயத்தின் கதவுகளை தட்ட முடியும். மும்மூர்த்திகளின் கடைக்கண் பார்வை கிடைக்கவில்லை என்றால், திமுக கட்சிக் கரை வேட்டியை வாழ்நாள் முழுவதும் கட்டவே முடியாது.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயந்தி பத்மநாபன்…

அப்படி இரும்புக் கோட்டை போல வேலூர் மாவட்டத்தை மும்மூர்த்திகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில், அந்த மாவட்டத்திற்குள்ளேயே தனது அரசியல் விளையாட்டைத் துவங்கிவிட்டார் அமைச்சர் செந்தில்பாலாஜி. குடியாத்தம் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஜெயந்தி பத்மநாபன் மற்றும அவரது ஆதரவாளர்களை தட்டி தூக்கியிருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.  அவரின் தொலைபேசி அழைப்பை ஏற்று, கடந்த 25 ஆம் தேதி சென்னை புறப்பட்டுள்ளார் ஜெயந்தி பத்மநாபன்.

அந்த நேரத்தில்தான் வேலூர் மாவட்டத்தில் உள்ள தனது ஆதரவாளர்களுக்கு சென்னை வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். திடீரென்று கடைசி நேரத்தில் அழைப்பு விடுத்ததால் அதிர்ச்சியடைந்த அவரது ஆதரவாளர்கள் பலர், அமமுக.வில் இருந்து விலகி திமுக.வில் சேர்வதற்கு தயக்கம் காட்டி இருக்கின்றனர். இத்னால் ஒன்றிரண்டு பேருடன் சென்னை புறப்பட்டுச் சென்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, திமுக.வில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர் ஜெயந்தி பத்மநாபனும், ஒன்றிண்டு நிர்வாகிகளும். அவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஜெயந்தி பத்மநாபனும் அவரது ஆதரவாளர்களும் குடியாத்தம் திரும்புவதற்கு முன்பாக, தொலைக்காட்சிகள் வாயிலாக ஜெயந்தி பத்மநாபன் திமுக.வில் இணைந்துவிட்டதாக வெளியான செய்தி அவரது ஆதரவாளர்களிடமும் திமுக முக்கிய நிர்வாகிகளிடமும் சென்று சேர்ந்துவிட்டது. குடியாத்தத்தில் உள்ள தங்களை மதிக்காமல் சென்னை சென்று முதல்வரை சந்தித்து ஜெயந்தி பத்மநாபன் திமுக.வில் சேர்ந்துவிட்டதால், ஜெயந்தி பத்மநாபன் மீது கடும் கோபத்தில் உள்ளார்கள் குடியாத்தம் திமுக நிர்வாகிகள்.

அதைவிட பலமடங்கு கோபத்தில் உள்ளனர் அமமுக.வில் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள். அவர்களைப் போல பன்மடங்கு கோபம் அமைச்சர் செந்தில் பாலாஜி மேல் இருந்தாலும் கூட அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்களாம் மும்மூர்த்திகள். தங்களிடம் ஒரு வார்த்தை கூட முன்கூட்டியே சொல்லாமல், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்பாலாஜி மூலம் அண்ணா அறிவாலயம் சென்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை ஜெயந்தி பத்மநாபன் சந்தித்து விட்டாரே என்ற கோபம், மும்மூர்த்திகளிடம் அதிகமாகவே இருக்கிறதாம்.

திமுக நிர்வாகிகளிடம் காணப்படும் அதே கொதி நிலை, குடியாத்தம் அமமுக நிர்வாகிகளிடமும் எழுந்துள்ளது. அமமுக மண்டல செயலாளர் பார்த்திபனுக்கு எதிராக அரசியல் செய்து வந்த ஜெயந்தி பத்மநாபனுக்கு ஆதரவாக நாமெல்லாம் களத்தில் நின்றோம். அவரின் அரசியல் போக்கை கண்டு மனம் வெறுத்துப் போன பார்த்திபன், ஜெயந்தி பத்மநாபனுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கி கொள்ளுங்கள். கட்சியில் முக்கிய பதவிகளை பெற்று தருகிறேன் என்று அழைத்த போது கூட அவருக்கு ஆதரவாளராக மாறாமல் ஜெயந்தி பத்மநாபனுக்கு ஆதரவாகவே நின்றோம்.

இப்படி மிகுந்த விசுவாசத்தோடு அவரது அரசியல் உயர்வுக்காக உழைத்த தங்களிடம் கூட திறந்த மனதோடு ஆலோசிக்காமல், தனிப்பட்ட ஆதாயத்திற்காக திமுக.வில் சென்று சேர்த்துவிட்டார் ஜெயந்தி பத்மநாபன். அவர் திமுக தலைவரை சந்திக்கப்போகிறார் என்ற தகவலை அறிந்து டிடிவி தினகரன் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தனது உதவியாளர் ஜனா மூலம் தொலைபேசி வழியாக பேச முயன்ற போதும், அவரின் அழைப்பை ஒருமுறை கூட ஏற்காமல் புறக்கணிக்கும் அளவுக்கு நன்றிக் கெட்டவராக ஜெயந்தி பத்மநாபன் இருந்திருக்கிறாரே என்று கொந்தளிக்கிறார்கள் குடியாத்தம் அமமுக நிர்வாகிகள்.

இந்தக் கூட்டத்தில் முக்கியமானவர் குடியாத்தம் முன்னாள் நகர அமமுக செயலாளர் சேவல் நித்தியானந்தம். இவர், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரிடமே நெருக்கமாக பழகியவர். மறைந்த செல்வி ஜெயலலிதா அதிமுவில் இணைந்து செல்வாக்குப் பெற துவங்கிய காலத்தில், அவருக்கான தனிப் பாதுகாப்பு படையை உருவாக்கி வழிநடத்தியவர். அதனைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர்., நித்தியானத்தை அழைத்து, செல்வி ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு வழங்குவதில் நிறைய எதிர்ப்புகளை சம்பாதிக்க வேண்டியிருக்கும். அவருக்கான பாதுகாப்பை நானே ஏற்பாடு செய்கிறேன். கட்சிப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்று அறிவுரை கூறி நித்தியானந்தம் உள்ளிட்டவர்களை மீண்டும் குடியாத்தத்திற்கே அனுப்பி வைத்துள்ளார்.

குடியாத்தம் நகர அமமுக முன்னாள் செயலாளர் நித்தியானந்தம்…

அந்தளவுக்கு சீனியரான நித்தியானந்தம், ஜெயந்தி பத்மநாபனுக்கு உண்மையான விசுவாசியாக இருந்ததால், ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதும் பார்த்திபனின் கோபத்திற்கு ஆளாகி, குடியாத்தம் நகரச் செயலாளர் பதவியை இழந்தவர் நித்தியானந்தம். இப்படி தீவிரமான விசுவாசிகளுக்கு கூட முன்கூட்டியே திமுக.வில் சேர்வதைப் பற்றி தகவல் தெரிவிக்காமல், ஜெயந்தி பத்மநாபன் துரோகம் இழைத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் வேலூர் மாவட்ட அமமுக நிர்வாகிகள்.

இப்படி ஒட்டுமொத்தமாக அமமுக நிர்வாகிகள் தனக்கு எதிராக அணி திரண்டிருபபதையும், கோபத்தோடு இருப்பதையும் அறிந்து அதிர்ச்சியடைந்த ஜெயந்தி பத்மநாபன், அவர்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகயில் நேற்று ஒரு நாள் முழுவதும் ஈடுபட்டுள்ளார். தான் இன்னும் திமுக.வில் அதிகாரப்பூர்வமாக சேரவில்லை. தனது ஆதரவாளர்களுடன் திமுக.வில் இணைவதற்கு அனுமதி கேட்கதான் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததாக புலம்பிக் கொண்டிருக்கிறாராம் ஜெயந்தி பத்மநாபன்.

கரூர், சேலத்தை கடந்து வேலூரில் முதல் கொடியை பறக்க விட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் செல்வாக்கு மேலும் மேலும் உயருமா என்பது, ஜெயந்தி பத்மநாபன் திமுக.வில் இணைந்தார் என்ற செய்தியும், புகைப்படமும் அதிகாரப்பூர்வமாக முரசொலியில் வெளியாகும் நாளன்றுதான் உறுதியாகும் என்கிறார்கள் அமைச்சரின் நலம் விரும்பிகள்…