Wed. May 8th, 2024

சிறப்பு ச் செய்தியாளர் தாரை இளமதி…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலளார் வெ.இறையன்பு ஐஏஎஸ்..
தமிழ்நாடு அரசின் காவல்துறை தலைமை இயக்குனர் கரன் சின்ஹா ஐபிஎஸ்..

இது எப்படியிருக்கு ?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலளார் வெ.இறையன்பு ஐஏஎஸ்..
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு ஐபிஎஸ்…

இது எப்படியிருககு ?

தமிழ்நாடு காவல்துறையின் இன்றைய நிலைமை, சர்வதேச அளவில் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது. கடந்தாண்டு சாத்தான்குளம் கொடூர நிகழ்வு.. நடப்பாண்டில் ஏத்தாப்பூர் சோதனைச் சாவடி மனிதநேயமற்ற கொடூரம்..

அதற்கும் மேலாக, காவல்துறையின் அதிகாரப்பீடத்தில் அமர்ந்திருந்த சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் ஐபிஎஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டாலும் ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு காவல்துறையின் மாண்பிற்கும் கண்ணியத்த்திற்கும் மிகப்பெரிய தர்மசங்கடம் ஏற்பட்டிருக்கும் இன்றைய தேதியில், தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குனர் பதவியில் அமரும் உயரதிகாரி, சட்டத்தின்படி ஆட்சி செய்பவராக மட்டும் இல்லாமல், கீழ்நிலை காவல் அலுவலர்களின் மனங்களையும் படித்து, பாங்குடன் தமிழ்நாடு காவல்துறையை வழிநடத்தும் வல்லமை மிக்கவராக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

இன்றைய காவல்துறைக்கு கண்டிப்பான அதிகாரியை விட, மனிதநேயத்தோடு வழிநடத்துகிற, உளவியல் சிக்கலுக்கு தீர்வுக் காண்கிற பொறுமையும், பல்வேறு சிந்தனைப் போக்கால் வறண்டு போயிருக்கிற மனங்களை தூர் வாரி, சீர்படுத்தி, செம்மைப்படுத்துகிற அளவுக்கு பொறுமை மிக்கவரும், பெரும்பான்மையான காவலர்கள் பேசுகிற மொழியின் ஒவ்வொரு வார்த்தையையும் ஆழமாக உள்வாங்கிக் கொண்டு செயல்படுகிற உயரதிகாரி , தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குனர் பதவியை அலங்கரித்தால், கடந்த பல ஆண்டுகளாக காவல்துறை இழந்திருக்கிற மரியாதையையும், மாண்பையும் விரைவாக மீட்டெடுக்க முடியும்.

கரன் சின்ஹா ஐபிஎஸ்..

நேர்மை எனும் தராசில் வைத்து பார்த்தால் இம்மியளவுக்குக் கூட தராசு முள் நேர்கோட்டில் இருந்து சாயாது. மெச்சத்தகுந்த திறமையாளர். சட்டத்தின் வழிநின்று காவல்துறை பணியாற்றுபவர். தமிழ்நாடு காவல்துறையின தலைமை இயக்குனர் பதவிக்கு தகுதியானவர்தான். ஆனால், பணி மூப்பு அடிப்படையிலும், திறமையிலும், தகுதியிலும் அவருக்கு இணையாகவே இருப்பவர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.

முன்னவரை விட கூடுதல் சிறப்புகள், பின்னவருக்கு நிறைய இருக்கிறது என்பதுதான், கூடுதலாக அவரைப் பற்றி சிந்திக்க தூண்டும் விதமாக அமைந்துவிட்டது.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் பதவியில் அவரை அமர்த்தி அழகுப்பார்க்கிற பெருந்தன்மையும், ஆட்சிப்பீடத்திற்கு தலைமையேற்று இருக்கும் ஆட்சியாளருக்கும் அமைந்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் கிழக்கு மேற்காக, வடக்கு தெற்காக, மிதிவண்டி மூலமே அளந்து பார்த்துள்ள ஒரே ஐபிஎஸ் உயரதிகாரி என்றால், அது நிச்சயம் சைலேந்திரபாபு ஐபிஎஸ்., ஆகதான் இருக்கும்.

அதைவிட, நாற்றின் வாசத்தை சுவாசமாக்கிக் கொள்ள துடிக்கும் மண்ணின் மீதான காதலும், தெருவோர விற்பனையாளர்களோடு கலந்து பேசி, அவர்களையெல்லாம தொழில் முனைவோர்களாக உயர்த்த வேண்டும் என்கிற துடிப்பும், கானல் நீராகாத சிந்தனையும் விதைகளாக்கி விதைத்துக் கொண்டிருப்பவராகவும் பொதுமக்கள் பார்வையில் உயர்ந்துநிற்கிறார் சைலேந்திரபாபு ஐபிஎஸ்.

58 வயதில் காவல்துறை இயக்குனர் (டி.ஜி.பி) என்ற உயர்ந்த அந்தஸ்துக்கு வந்து விட்ட ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், உச்சப்பட்ச அதிகாரத்தை சுவைத்துக் கொண்டு, நான்கு சுவருக்குள் ஏஸி அறைக்குள் அமர்ந்து கொண்டு கோப்புகளோடு விளையாடி தங்கள் கடமையை முடித்துக் கொள்ளலாம். இதுவரை இப்படிபட்ட மனப்பான்மையுள்ள ஐபிஎஸ் உயரதிகாரிகளைதான் தமிழகம் கண்டிருக்கிறது. ஆனால, அவர்களில் இருந்து விதிவிலக்காக, வித்தியாசமாக கொய்யாப்பழம் விற்பனை செய்கிற சாலையோர மூதாட்டியிடம் கூட அவரது மகனைப் போல, பேரனைப் போல பாசத்தோடும், பரிவோடும் பேசுகிற ஒரு காவல்துறை உயரதிகாரியை, சைலேந்திரபாபு ஐபிஎஸ் மூலமாகதான் தமிழகம் அடையாளம் கண்டிருக்கிறது.

உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் தான் மட்டுமே தனித்த அக்கறை கொள்ளாமல், இளம் சமுதாயமும், தமிழர்களும் முக்கிய கடமையாக கொள்ள வேண்டும் என்ற பாடத்தை, பல நூறு வீடியோக்கள் மூலம் எந்தவித எதிர்ப்பார்ப்பும் இன்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு பயிற்றுவிக்கும் மனப்பாங்கும் படைத்தவராக இருக்கிறார் சைலேந்திர பாபு ஐபிஎஸ்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ் தேசியத்தை தூக்கிப் பிடிக்கும் தமிழ் தேசியவாதிகள், இன்றைக்கும் ஆலயத்தில் உள்ள கடவுளுக்கே புரியும் மொழியான தமிழில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற வாதம் அழுத்தமாக வைக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில், சாதாரண காவலர்கள் முதல் ஐபிஎஸ் அந்தஸ்து உடைய அதிகாரிகள் வரை அவர்கள் மொழியில் பேசுகிற இயல்பாகவே மொழி ஆளுமையாக உள்ள சைலேந்திரபாபு ஐபிஎஸ்.ஸை விட பொருத்தமானவர் வேறு உயரதிகாரிகள் இல்லை என்றே கூறலாம்.

தற்போதைய டிஜிபி ஜெ.கே.திரிபாதி பணி நியமனத்தின் போது, அந்த பதவிக்கு ஓய்வுப் பெற்ற ஜாபர் சேட் ஐபிஎஸ், அனைத்து வழிகளிலும் தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனர் பதவியை பிடித்து விட வேண்டும் என்று முயற்சி செய்தார். அந்த நேரத்தில் திரிபாதி ஐபிஎஸ்.ஸோடு ஒப்பிட்டபோது, ஜாபர் சேட் மீது இருந்த வழக்குகளே, அந்த பதவிக்கு தகுதியானவராக அவர் இல்லை என்று புறக்கணிக்க வைத்தது. (டிஜிபி சட்டம் ஒழுங்கு பதவியைப் பிடிக்க அப்போதைய அதிமுக அமைச்சர் பி.தங்கமணி சென்னை இல்லத்தில் கோட், சூட், டை அணிந்து பலமணிநேரம் காத்திருந்தவர் ஜாபர்சேட் ஐபிஎஸ்)

அப்போது இருந்த போட்டி போல இப்போது, டி.ஜி.பி. பதவிக்கு போட்டி எழவில்லை. சைலேந்திரபாபு ஐபிஎஸ். ஆக இருந்தாலும் சரி, கரன் சின்ஹா ஐபிஎஸ் ஆக இருந்தாலும் சரி , இருவருமே தங்களை தேடி பதவி வந்தால், அதனை ஏற்று செம்மையான நிர்வாகத்தை தர தயாராகவே இருக்கிறார்கள்.
ஆனால், கடந்த பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் ஒரே குரல் உரத்து ஒலித்துக் கொண்டிருக்கிறது.
ஆளப் போறான் தமிழன் உலகமெல்லாமே….இந்த வைர வரிகள், இளம் சிறார்கள் மனதிலும் ஆழமாக பதிந்திருக்கிறது. தெருவுக்கு தெரு ஒலித்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலளார் வெ.இறையன்பு ஐஏஎஸ்..
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபி ஐபிஎஸ்…

இன்றைய நிலையில், இந்த கூட்டணி அமைந்தால், தமிழ்நாடு காவல்துறைக்கு புதுவாழ்வு கிடைத்த மாதிரி அமையும் என்பதே, தமிழ்நாடு காவல்துறையில், தலைமைப் பீடத்தில் உள்ள ஒரு சில அதிகாரிகளைத் தவிர மாநிலம் முழுவதும் பரவியிருக்கும் பெரும்பான்மையான காவல்துறை அலுவலர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனதில் இருக்கும் டிஜிபி யாரோ?