Sat. May 18th, 2024

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் துறை ரீதியிலான அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பங்கேற்ற அதிகாரப்பூர்வ கூட்டம் சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்றுள்ளது. அதன் பிறகு ஒப்பந்ததாரர்கள் மட்டுமே பங்கேற்க ரகசிய கூட்டத்தில் திமுக காரன் என்று சொல்லிக் கொண்டு எல்லாம் டெண்டர் கேட்டு வரக் கூடாது என்று அமைச்சர் எ.வ.வேலு எகிறி குதித்துள்ளார்.

அமைச்சரிடம் காணப்பட்ட சீற்றத்தை கண்டு நொந்து போய் ஊர் திரும்பியிருக்கிறார்கள் கான்ட்ராக்டர்கள் அமைச்சரின் ஆவேசத்தால் மனம் நொந்து போன கான்ட்ராக்டர் ஒருவர் நம்மை தொடர்பு கொண்டு தனது மனவேதனைகளை எல்லாம் கொட்டித் தீர்த்தார். அதை அப்படியே இங்கே பகிர்கிறோம்.

ஒப்பந்ததார்களை எல்லாம் அழைத்து அமைச்சர் எ.வ.வேலு பேச்சுவார்த்தை நடத்துகிறாரே என்று ஆசை, ஆசையாக ஊரில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்தோம். கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சியில் ஒரு டெண்டர் கூட கிடைக்காததால் பல கோடி ரூபாய் வருவாய் இழந்து முடங்கிப் போனதால், திமுக ஆட்சியில் மறுமலர்ச்சி கிடைக்கும் என்று நம்பிக்கையில் அமைச்சர் எ.வ.வேலு என்ன சொல்லப் போகிறார் என அவரது பேச்சுக்காக காத்திருந்தோம். பேச்சின் துவக்கத்திலேயே குண்டு தூக்கிப் போட்டுவிட்டார் அமைச்சர் எ.வ.வேலு.

கூட்டத்தின் துவக்கத்தில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, அதிமுக ஆட்சியில், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்ற முறைகேடுகள், தில்லுமுல்லுகள், ஊழல்கள் உள்ளிட்டவற்றை மேலோட்டமாக சுட்டிக் காட்டி காட்டினார். எங்களுக்கு எல்லாம் பகீர் என்றாகிவிட்டது. அதற்கடுத்து எங்கள் மடியிலும் கை வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு.

தொடர்ந்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு. உலக வங்கியில் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி தேவையில்லாத இடங்களில் மேம்பாலங்கள், தடுப்பணைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து அரசு பணத்தை ஒரு லட்சம் கோடி அளவுக்கு வீணடித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதுவும் 10 ஆண்டு காலமும் முந்தைய அதிமுக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வசமே பொதுப்பணியும், நெடுஞ்சாலை துறையும் இருந்ததால், சகட்டுமேனிக்கு ஊழலகள் நடைபெற்றுள்ளன. அதனையெல்லாம் கண்டுபிடித்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து அவரையும், அவருக்கு துணை போன பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை எல்லாம் அடையாளம் கண்டுபிடித்து சிறைக்கு தள்ளும் நடவடிக்கைகளில்தான் தற்போது வேகம் காட்டி வருகிறேன்.

அதனால், ஒப்பந்ததாரர்கள் எல்லாம் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். ஜூலை மாதத்திற்குப் பிறகுதான் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறைகளில் என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை பட்டியலிட்டு தகுதியான ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர் வழங்கப்படும். முந்தைய அதிமுக ஆட்சியில் நடைபெற்றதைப் போல முறைகேடுகள் எதுவும் நடந்துவிடக் கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எச்சரித்துள்ளார்.

அதனால், கடந்த பத்தாண்டுகளாக அதிமுக ஆட்சியில் எந்த டெண்டரும் எடுக்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் டெண்டர் வழங்கப்படும். எனவே, வெளியே பரவும் வதந்திகளை வைத்துக் கொண்டு ஒப்பந்ததாரர்கள் தங்களுக்குள் கூட்டணி (சிண்டிகேட்) அமைத்துக் கொண்டு, திமுக அரசுக்கும், அதிகாரிகளுக்கும் தொல்லை தந்து விடாதீர்கள் என்று எச்சரிக்கும் தொனியில் பேசி முடித்தார் அமைச்சர் எ.வ.வேலு.

அவரின் முன்னுரைக்குப் பிறகு வரிசையாக கான்ட்ராக்டர்கள் எல்லாம், கடந்த அதிமுக ஆட்சியில் எந்தெந்த டெண்டரில் எவ்வளவு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்பது குறித்து தங்களுக்கு தெரிந்த தகவல்களை எல்லாம் அமைச்சர் எ.வ.வேலுவிடம் தெரிவித்தார்கள். எனது முறை வந்த போது, கடந்த அதிமுக ஆட்சியில் திமுக கான்ட்ராக்டர்களுக்கு ஒரு வேலையும் கொடுக்கவில்லை. பத்தாண்டுகளாக சிறிய டெண்டரில் கூட கலந்து கொள்ள முடியாத அளவுக்கு எடப்பாடி பழனிசாமி கெடுபிடி செய்துவிட்டார்.

அதனால், திமுக ஆட்சியிலாவது திமுக.வுக்கு விசுவாசமாக இருந்த கான்ட்ராக்டர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பெரிய பெரிய டெண்டர்களை ஒதுக்க வேண்டும் என்று கூறி முடிப்பதற்கு முன்பாகவே, ஆவேசப்பட்ட அமைச்சர் எ.வ.வேலு, திமுக.காரன் என்று சொல்லிக்கிட்டு டெண்டர் கேட்டு வராதீர்கள். தகுதியுள்ளவர்கள் யார் என்று பார்த்துதான் டெண்டர்கள் ஒதுக்கப்படும் என்று கோபமாக பேசினார். எனக்கு ரொம்ப தர்மசங்கடமாகிவிட்டது. திமுக காரன் என்ற சொல்லைக் கேட்டு அமைச்சர் ஏன் அவ்வளவு ஆவேசமானார் என்று எங்களுக்கு புரியவில்லை.

அதிமுக மீதான பழைய பாசம் அமைச்சரிடம் இன்னும் இருக்கிறதோ என்று சந்தேகம்தான் எழுகிறது. திமுக ஆட்சியிலாவது நாலு காசு பார்க்கலாம் என்று உற்சாகமாக சென்னைக்கு புறப்பட்டு வந்தோம். ஆனால், அமைச்சர் எ.வ.வேலுவின் பேச்சால், கொஞ்சம் நஞ்சம் இருந்த நம்பிக்கையும் போய்விட்டது. திமுக ஆட்சியிலும் அதிமுக கான்ட்ராக்டர்களுக்குதான் ஒப்பந்தத்தை வழங்க அமைச்சர் எ.வ.வேலு தீர்மானித்து இருக்கிறாரோ என்னவோ..

அமைச்சர்கள் அவரவர் துறைகளில் திட்டங்களை போடவும், அவர்களுக்கு வேண்டிய திமுக.காரர்களுக்கு உதவுவதற்கும் திமுக தலைவர் குடும்பத்து உறவுகள் முட்டுக்கட்டை போட்டு வருவதாக ஊடகங்களில் தகவல்கள் பரவுகிறது. ஆனால், அமைச்சர் எ.வ.வேலுவின் பேச்சும், செயல்களும் அவரை யாரும் கட்டிப் போட்டு இருப்பதை போல தெரியவில்லை.

திமுக தலைவர் குடும்பத்தினர் மீது பழியை தூக்கிப் போட்டுவிட்டு அமைச்சர்கள் தங்களுக்கு வேண்டியவர்கள, உநவினர்களுக்கு மட்டுமே ரகசியாக பணம் சம்பாதிக்க ஏதாவது வழியை உருவாக்கி வைத்துள்ளார்களா? ஒன்றுமே புரியவில்லை. கொஞ்ச காலம் பொறுத்திருந்து பார்த்துவிட்டு, அதன் பிறகு முதல்வரை சந்தித்து முறையிடலாம் என முடிவெடுத்திருக்கிறோம் என்று சோக கீதம் பாடினார் திமுக கான்ட்ராட்க்டர்.