நியூஸ் ஜெ டிவி.யில் முக்கிய பதவிகளில் இருப்பவர்களில் சிலர் திமுக ஆதரவாளர்கள் சார்…
சில விநாடிகள் கூட தாமதிக்காமல், எங்களுக்கும் தெரியுமே என்று பதிலளித்துள்ளார், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிழல் என்று வர்ணிக்கப்படும் சேலம் [[புறநகர் மாவட்டசெல்வி ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர். இளங்கோவன்.
அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியவர் அதிர்ச்சியடைந்து அதற்கு மேல் இளங்கோவனுடன் பேச்சை தொடராமல் கைபேசி இணைப்பை துண்டித்திருக்கிறார்.
இந்த நிகழ்வு நடந்து ஒரு சில நாட்களுக்குப் பிறகுதான், சென்னை நுங்கம்பாத்தில் உள்ள நியூஸ் ஜெ. டிவி நிலையத்திற்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் சென்று ஆய்வு நடத்தியிருக்கிறார்கள். இந்த நிகழ்வு, கடந்த 25 ஆம் தேதி இரவு நடைபெற்று இருக்கிறது. இதுதொடர்பாக நல்லரசு தமிழ் செய்திகளிலும் விரிவான செய்தி கட்டுரை வெளியிடப்பட்டது.
அன்றைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த செய்தியை வெளியிட்டோம். இன்றைக்கு கூடுதலாக சில தகவல்கள் கிடைத்துள்ளன. நம்பகமான நட்பு வட்டாரத்தில் இருந்து கிடைக்கும் தகவல்களை ஒன்றிரண்டு நண்பர்களுடன் கலந்து பேசி சரிபார்த்த பிறகே வெளியிடுகிறோம். கிடைக்கும் தகவல்களில், நட்பு வட்டாரமே சுவாரஸ்யத்திற்காக கூடுதலாக சில தகவல்களை கோர்த்துவிட்டு விடுகிறார்கள்.
அந்த வகையில், நியூஸ் ஜெ டிவியில் இ.பி.எஸ்.ஸும், ஓ.பி.எஸ்.ஸும் மட்டுமே ஆய்வு நடத்தவில்லை. அவர்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, மருத்துவர் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், காமராஜ் ஆகியோரும் சென்றிருக்கிறார்கள்.
முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் சகோதரர் ராதாகிருஷ்ணனுடனும், நிர்வாக தரப்பில் உள்ள ஒரு சிலரிடம் மட்டுமே இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியுள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. நல்லரசுவின் முந்தைய செய்தியில் செய்திப்பிரிவில் உள்ள ஊடகவியாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும், அறிவுரை கூறியதாகவும் தகவல் வெளியிட்டிருந்தோம்.ஆனால், தற்போது செய்திப்பிரிவுடன் எந்த ஆலோசனையையும் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். உள்ளிட்ட குழுவினர் நடத்தவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இ.பி.எஸ்., தலைமையிலான குழுவினர், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாக தரப்பினருடன் கலந்துரையாடியதில் பிரதான அம்சமாக, வரும் காலங்களில் நியூஸ் ஜெ. டிவி.யை தொடர்ந்து நடந்த, மாதந்தோறும் கோடிக்கணக்கான ரூபாயை செலவழிப்பது யார் என்ற பேச்சே பிரதானமாக இருந்ததாக தகவல் கசிந்துள்ளது.
அதிமுக ஆட்சியில் இருந்த போது நியூஸ் ஜெ. டிவிக்கு விளம்பரங்கள் நிறைய வந்துள்ளன. அதன் மூலம் கிடைத்த வருவாயை கொண்டு ஊழியர்களின் மாதச் சம்பளம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களும் சரிகட்டப்பட்டுள்ளன. ஆட்சியை இழந்தவுடன், நியூஸ் ஜெ டிவி.க்கு வந்து கொண்டிருந்த விளம்பரங்கள் முழுமையாக நின்றுவிட்டன. அதனால், நிதி நெருக்கடியில் நியூஸ் ஜெ டிவி சிக்கும் நிலை உருவாகியுள்ளது.
நிதி நெருக்கடியை களைந்து, தேவையான நிதியை திரட்டுவது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காகதான், அதிமுக ஆட்சியில் செல்வாக்கு மிக்க துறைகளை தங்கள் வசம் வைத்திருந்த எஸ்.பி. வேலுமணி, மருத்துவர் விஜயபாஸகர், ஆர்.பி. உதயகுமார், ஆர்.காமராஜ், பி.தங்கமணி ஆகியோரையும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தையும் நியூஸ் ஜெ.டி.வி.க்கே வரவழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக செய்திகளை முழுமையாக ஒளிப்பரப்பி வரும் நியூஸ் ஜெ டிவி முடங்கி விடாமல் இருக்க, வேலுமணி உள்ளிட்ட ஐந்து முன்னாள் அமைச்சர்களும், அவரவர் பங்கிற்கு சம்பளம் உள்ளிட் செலவினங்களுக்கு நிதி தர வேண்டும் என்று இ.பி.எஸ்., கேட்டுக் கொண்டதாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நிதி தர மறுத்தால், அதிமுக கட்சி நிதியில் இருந்து பணத்தை எடுத்து நியூஸ் ஜெ டிவி செலவினங்களை சரிகட்ட வேண்டியிருக்கும் என்ற கருத்தும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதைவிட முக்கியமாக, இந்தக கட்டுரையின் முதல் வரியில் சொன்னதைப் போல, நியூஸ் ஜெ டிவியில் உள்ள திமுக ஆதரவாளர்களாக உள்ள ஊழியர்களை அடையாளம் கண்டு விரைவாக நீக்க வேண்டும் என்பது குறித்தும் அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது என்ற தகவலும் கிடைத்துள்ள நிலையில், அதில் எந்தளவுக்கு உண்மையுள்ளது என்று உறுதியான தகவல் கிடைக்கவில்லை.
ஆனால், நிதி விவகாரம் குறித்து மட்டுமே கலந்து பேச வேண்டியிருந்தால், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது வீட்டிற்கே ஓ.பி.எஸ். உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களை அழைத்துப் பேசியிருக்கலாம். அல்லது, அண்மையில் எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் ஓ.பி.எஸ்.ஸை தேடிச் சென்று இ.பி.எஸ்., சந்தித்து பேசினாரே, அதேபோல, வேறு ஒரு இடத்தில் அமர்ந்து ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்கிறார் நியூஸ் ஜெ டிவியில் உள்ள ஊழியர் ஒருவர்.
மேலும், வி.கே.சசிகலாவின் அரசியல் பிரவேசம் குறித்த ஆடியோ பேச்சுகள் தொடர்ந்து வெளி வந்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஓ.பி.எஸ்.ஸை வரவழைத்து இவ்வளவு விரிவான ஆலோசனையை இ.பி.எஸ். நடத்தியிருக்கிறார் என்பதும், முக்கியமாக முன்னாள் அமைச்சர்களையும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வைத்திருக்கிறார் என்பதும், அதிமுக.வில் தற்போது ஏற்பட்டிருக்கும் கலகமும் ஏதோ ஒருவகையில் காரணமாகி, எடப்பாடி பழனிசாமியை பதற்றமடைய வைத்திருக்கிறது என்கிறார், அவரின் அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்து கவனித்து வரும் மூத்த ஊடகவியலாளர் ஒருவர்.
இன்னமும் பதுங்கி இருக்கும் வி.கே. சசிகலா, பாய்வதற்கு முன்பாகவே இ.பி.எஸ்.ஸின் கூடாரத்தில் சலசலப்பு கேட்டு துவங்கிவிட்டதா? ஜூலை முதல் வாரத்தில் பதில் கிடைத்துவிடும்….