Sun. Apr 20th, 2025

தனியார் மருத்துவமனைகளில் கொரோனோ மருத்துவச் சிகிச்சைக்கு வசூலிக்கப்பட வேண்டிய கட்டணம் குறித்து தமிழக அரசு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சரின் காப்பீடு திட்டம் மூலமும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனோ தொற்றுக்கு சிகிச்சைப் பெறலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு மாறாக, தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. அதன்பேரில், விசாரணை நடத்தி மாநிலம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராக தமிழக அரசின் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், சேலத்திலும் இரண்டு தனியார் மருத்துவமனைகள் விதிகளுக்கு மாறாக நடந்து கொண்டதால், அந்த மருத்துவமனைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.

சேலம் ஐந்துரோடு அருகே குறிஞ்சி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு எதிராக பொதுமக்கள் ஏற்கெனவே பல குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கொரோனோ சிகிச்சைக்கும் அதிக கட்டணம் வசூலிப்பதாக சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பலமடங்கு கட்டணமாக வசூலித்துள்ளது என்பதை கண்டறிந்தனர். அதனைத்தொடர்ந்து அந்த மருத்துவமனைனை மூடி சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்

இதேபோல், சேலம் மாமாங்கம் பகுதியில் செயல்படும் மணிப்பால் மருத்துவமனைக்கு எதிராகவும் பொதுமக்கள் தெரிவித்த பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இந்த மருத்துவமனையிலும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உள்ளிட்ட உரிய சிகிச்சை அளிக்காமல் கொள்ளையடிப்பதாக, நோயாளிகளின் உறவினர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில், மணிப்பால் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், அதிக கட்டணம் வசூலித்து வந்ததற்கு உரிய ஆவணங்களை கைப்பற்றினார்கள். அதனைத்தொடர்ந்து, மணிப்பால் மருத்துவமனைய மூடி, சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அதிக கட்டணம் வசூலித்த இரண்டு தனியார் மருத்துவமனைகள் மீது காலதாமதம் இன்றி நடவடிக்கை எடுத்த சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் தமிழக அரசுக்கும் சேலம் மக்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.