Sun. Apr 20th, 2025

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்றுள்ள பேரறிவாளன், புழல் சிறையில் சிறைக்கைதியாக இருந்து வருகிறார். அவரின் உடல்நிலையில் சுகவீனம் ஏற்பட்டிருப்பதால், மருத்துவக் சிகிச்சைப் பெறுவதற்காக அவரை விடுவிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு வழங்கினார்.

அதனை பரிசீலித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சாதாரண சிறை விடுப்பில் 30 நாட்கள் அனுமதித்து விடுவிக்க உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.

இதனிடையே, முந்தைய அதிமுக ஆட்சியில் , பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் 7 பேரையும் திமுக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று திமுக கூட்டணியில் உள்ள அரசியல் கட்சியினர் மற்றும் தமிழ் தேசிய அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்த கோரிக்கை தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலினும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும், அதன்பேரில் நல்ல முடிவு எடுப்பார் என்றும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்காக தொடர்ந்து போராடி வரும் தமிழ் அமைப்புகள் தகவல் தெரிவித்துள்ளன.