Sat. Nov 23rd, 2024

திருச்சி மாவட்டத்தில் கொரோனோ தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் 700, 800 எனமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய நிலவரப்படி, 7,000 க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கொரோனோ தொற்றுப் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த திருச்சி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த வைத்தியம் மூலம் சிகிச்சை வழங்குவதற்காக காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் கொரோனா நோய்களுக்கான அரசு சித்த புத்துணர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் 200 படுக்கை வசதிகளுடன் இயங்கவுள்ளது.

இந்த மையத்தை நகராட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும், தொடக்க நிலையில் கொரோனோ தொற்றை அழிக்கும் வகையில் மூலிகை சாறு மூலம் உருவாக்கப்படும் நீராவியை உள்வாங்கிக் கொள்ளும் வசதியும் நவீன முறையில் நிறுவப்பட்டுள்ளது. அங்குள்ள சித்த மருத்துவர்களிடம் சிகிச்சை முறை குறித்து அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் அன்பில், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதய ராஜ் ஆகியோர் கேட்டறிந்தனர்.