Sun. May 19th, 2024

தகவல் + புகைப்படங்கள் உதவி டி. ஜவஹர், மூத்த ஊடகவியலாளர், திருநெல்வேலி…

கொரோனோவின் 2 வது அலை தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவின் பல மாநிலங்களில் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை சிதைத்து விட்டிருக்கிறது. வடமாநிலங்களில் புகழ் பெற்ற நகரங்கள் ஏராளமாக இருந்தாலும் கூட, பணக்காரர் பட்டியலில் முதலிடத்தை பிடிக்க போட்டி போடும் பெரும் முதலாளிகள் பலர் இருந்தாலும் கூட, தமிழகத்தைப் போல, ஆபத்தான காலங்களில் உதவிக்கரம் நீட்டுபவர்கள் மிக மிகக் குறைவு என்கிறார்கள் வட மாநிலங்களில் உள்ள மூத்த ஊடகவியலாளர்கள்.

அண்டை மாநிலங்கள் மட்டுமல்ல, வட மாநிலங்களும் விழிகளை விரித்துக் கொண்டு பார்க்கும் அளவுக்கு தமிழகத்தில் பேரிடர் காலங்களில் ஆதரவுக் கரம் நீட்டும் ஆயிரமாயிரம் மனிதநேயர்கள் இருப்பதால், .எழைகளின் கண்ணீர் அதிகமாக வீணாகுவது இல்லை. இயற்கை பேரழிவு காலமான சுனாமியாகட்டும், தானே, வர்தா, கஜா புயலாகட்டும் தமிழகத்தில் மக்கள் ஓடியோடி உதவிகளை செய்தனர்.

அந்த மனிதநேயம், கொரோனாவின் முதல் அலையிலும் மாநிலம் முழுவதும் எதிரொலித்தது. தொண்டு நிறுவனங்களுக்கு, தன்னார்வலர்களுக்கு போட்டியாக அரசியல் கட்சியினரும் விளிம்பு நிலை மக்களின் துயர் துடைக்க உணவுப் பொருள்களை வாரி வழங்கினர். கடந்தாண்டு எதிர்க்கட்சியாக இருந்த திமுக, ஒன்றிணைவோம் வா இயக்கத்தை முன்னெடுத்து, ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருள்களை வீடுதேடிச் சென்று வழங்கியது. அதற்கு போட்டியாக அப்போது ஆளும்கட்சியாக இருந்த அதிமுக.வும், ஏழை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தது.

இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையே ம.திமு.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் மக்களின் துயர் துடைக்க களத்தில் நின்றன. ஆனால், அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கு கிடைத்த விளம்பர வெளிச்சம், மூன்று, நான்காம் நிலையில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு அதிகமாக கிடைக்காமல் போனது.

ஆனால், விளம்பரத்தைப் பற்றி துளியும் கவலைப்படாமல் அரசியல் கட்சி நிர்வாகிகள், மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற அடிப்படையில் சேவையாற்றினார்கள்.

பிறரின் துன்பத்தைக் கண்டு துடித்துக் போகிற மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வளர்ப்புகளான அக்கட்சியைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள், சத்தம் இல்லாமல் மக்கள் சேவையில் ஈடுபட்டனர். அந்த வகையில் திருநெல்வேலி மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் நிஜாம், கொரோனோ தொடங்கிய காலத்தில் இருந்து விளிம்பு நிலை மக்களுக்கு உணவுப்பொருள்களை வழங்கி, நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு அரணாக நின்றார். அவரால் பயனடைந்த ஆயிரக்கணக்கானவர்கள், கொரோனோவை வென்றுவிட்டதாகவே நினைத்துக் கொண்டு, கடந்தாண்டை கடந்தனர்.

மேலும், கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களுக்கு சத்தான உணவுகளை வழங்கி, அவர்கள் கொரோனோ தொற்றில் இருந்து விரைவாக குணமாக பெரும் தொண்டாற்றியவர் நிஜாம்.

கடந்தாண்டைப் போலவே, இப்போதும் ஏழை எளிய மக்களுக்கு மூன்று வேளை உணவும், வறுமையில் வாடிக் கொண்டிருப்பவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்களையும் வழங்கி வருகிறார். ஆயிரக்கணக்கான மக்களின் வறுமையைப் போக்கி வரும் மதிமுக மாவட்ட செயலாளர் நிஜாமின் மனித நேயத்தைப் பார்த்து, அனைத்துத் தரப்பு மக்களும் மனம் திறந்து பாராட்டி வருகின்றனர்.

கடந்தாண்டு எதிர்க்கட்சியாக இருந்த திமுக., தற்போது ஆளும்கட்சியாக அரியணையில் அமர்ந்திருக்கும் இந்த நேரத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று, மாநிலம் முழுவதும் திமுக நிர்வாகிகளும் ஏழை எளிய மக்களுக்கு உதவத் தொடங்கிவிட்டனர்.

ஆனால், கடந்த ஆண்டு ஆளும்கட்சியாக இருந்து இப்போது எதிர்க்கட்சியாக மாறியுள்ள அதிமுக., இன்னமும் மக்களுக்கு உதவும் மனநிலைக்கே வரவில்லை.

இப்படிபட்ட நிலையில், அரசியல் ஆதாயமற்ற சிந்தனையில், துயரில் துடித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு உடனடியாக உதவி செய்யும் மனிதநேய சேவையை தொடங்கி செயல்படுத்திக் கொண்டிருக்கும் திருநெல்வேலி மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் நிஜாம் போல, பல ஆயிரம் கள வீரர்களை தமிழகத்திற்கு அடையாளம் காட்ட வேண்டிய பொறுப்பு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு இன்றும் இருக்கிறது.