காவல்துறையினருக்கு விடுதலைச் சிறுத்தைகள் எம்.பி ரவிக்குமாரும் வலியுறுத்தல்…
விழுப்புரம் மாவட்டம் ஒட்டனந்தல் கிராமத்தில் ஊரடங்கு காலத்தில் கோயில் திருவிழா நடத்தியததற்காக தாழ்த்தப்பட்ட மக்களை பொதுமக்கள் மத்தியில் காலில் விழுந்து வணங்கச் சொல்லி வேற்று சாதியினர் நடத்திய தீண்டாமை வெறியாட்டம், சமூக நீதி காவலர்களிடம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டனந்தல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆண்டுதோறும் வைகாசி மாதம் அங்குள்ள மாரியம்மன் கோவிலில் ஆண்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்தாண்டு கொரோனோ தொற்றின் ஊரடங்கால் விழா நடைபெறவில்லை. இந்தாண்டும் கொரோனோ ஊரடங்கின் காரணமாக கோயில் விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் அரசின் உத்தரவை மீறி அப்பகுதி மக்கள் கோயில் விழாவை கொண்டாடியுள்ளனர். இதுதொடர்பாக திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், விழாவையொட்டி வைக்கப்பட்டிருந்த ஒலிப் பெருக்கிகளை பறிமுதல் செய்ததுடன் விழா பொறுப்பாளர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது ஒட்டனந்தல் கிராம மக்கள் சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டதையடுத்து, அவர்களிடம் எதிர்காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என எழுதி வாங்கிவிட்டு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
ஆனால், ஒட்டனந்தலைச் சேர்ந்த மாற்று சாதியினர், தாழ்த்தப்பட்ட மக்களை கண்டிப்பதற்காக ஊரில் உள்ள பொதுவான இடத்திற்கு வரவழைத்து தகாத வார்த்தைகளில் திட்டியதுடன், ஊரடங்கு காலத்தில் கோயில் விழாவை நடத்தியதற்காக, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெரியவர்களை, ஊர் மக்கள் காலில் விழுந்து வணங்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். மாற்று சாதியினரின் மிரட்டலுக்குப் பயந்து தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் உள்ள பெரியவர்களும், அவர்கள் கூறியவாறே பொது இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூட்டமாக திரண்டு நிற்க, சாஷ்ட்டாங்கமாக தலை, மார்பு உள்ளிட்ட பகுதிகள் மண்ணில் படும் அளவுக்கு விழுந்து வணங்கியுள்ளனர்.
தீண்டாமைக் கொடுமையின் உச்சத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை மிரட்டி பணிய வைத்த காட்சியை, அங்கிருந்த சிலர் செல்போன் மூலம் படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட, விழுப்புரத்தை கடந்து தமிழகம் முழுவதும் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாதி வெறியோடு நடந்து கொண்ட ஒட்டனந்தல் கிராம மக்கள் மீது ஈவு இரக்கமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் ஆவேசமாக குரல் கொடுத்து வருகின்றனர்
தீண்டாமை கொடுமையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி ரவிக்குமாரும் கோரிக்கை விடுத்துள்ளார். .