சென்னை பரங்கிமலை ஆயுதப்படை பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் செல்வம் (57). இவர் மேலக்கோட்டையூர் காவலர் குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி செல்வத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் கிண்டியில் உள்ள கிங்ஸ் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
அடுத்த இரண்டு நாட்களில் அவருக்கு உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து கடந்த 5 ஆம் தேதி வீடு திரும்பி மருத்துவர் பரிந்துரையின் பேரில் வீட்டுக் கண்காணிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி செல்வதுக்கு மூச்சுத் திணறல் ஏற்படவே உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று பிற்பகல் செல்வதுக்கு உடல்நிலை மோசமான நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஏற்கனவே சென்னை காவல்துறையில் இதுவரை 17 காவல்துறையினர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ள நிலையில் மேலும் ஒரு உதவி ஆய்வாளரின் உயிரிழப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.