Thu. May 2nd, 2024

தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர் …

முதலமைச்சர் பதவியை பறிகொடுத்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பறிபோன அதிகாரத்தைப் பற்றியேதான் இந்த நிமிடம் வரை புலம்பிக் கொண்டே இருக்கிறார். அவரின் அரசியல் வாழ்க்கையில், கிடைத்த உச்சகட்ட அதிகாரம் முதலமைச்சர் பதவி. அந்த பதவி தந்த போதையும், அதிகார மமதையையும் அவ்வளவு எளிதாக தள்ளி வைத்துவிட்டு இயல்பு நிலைக்கு திரும்பி விட முடியாதுதான்.

ஆனால், நான்காண்டுகளுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி எப்படியிருந்தார்? அமைச்சர் பதவியால் கிடைத்த புகழையும், செல்வாக்கையும் பார்த்து பயப்பட்டவர், அவர்.

தலைமைச் செயலகத்தில் 2011 முதல் 2016 வரை பொதுப்பணித்துறை அமைச்சராக அவர் இருந்த போது, கூப்பிடும் தூரத்தில்தான் மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் முதல் அமைச்சர் அலுவலகம் இருந்தது. அதனால், தனது அலுவலகத்திற்கு அதிகமான பார்வையாளர்கள் வருவதையே எடப்பாடி பழனிசாமி விரும்பியதில்லை. சேலம் மாவட்டத்தில் இருந்து நாள்தோறும் வரும் முன்னணி நிர்வாகிகளைக் கூட தனது இல்லத்திற்கு வரச்சொல்லிதான் பார்த்தார்.

தலைமைச் செயலகத்திற்கு வருவதும் தெரியக் கூடாது, கிளம்பி செல்வதும் தெரியக் கூடாது என்று அவ்வளவு அடக்கமாக வந்து சென்றவர் அப்போதைய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், 2017 ல் நடந்த விபத்தில் முதலமைச்சராக அவர் பதவியேற்றார். அந்தாண்டு முழுவதும் பயத்துடனேயே காலத்தை ஓட்டினார். அப்போதுதான், ஏழரைச் சனி அவரை பிடித்தது.

செய்தித்துறையில் பல ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வுப் பெற்ற எழிலகன் என்பவரை, செய்தித்துறையின் உயர்ந்த பொறுப்பில் அமர வைத்தார். எடப்பாடி பழனிசாமியின் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், எழில் என்று அழைக்கப்படும் எழிலகன், மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவை மிஞ்சிய ஆளுமைமிக்கவர் நீங்கள் என்று கூறி (இ.பி.எஸ்) அதிகார போதையை எடப்பாடி பழனிசாமிக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டினார்.

எழில் (எ) எழிலகன்…

தான் ஒரு அரசு அதிகாரி என்பதை மறந்து, அரசியல் சித்துவிளையாட்டையும் கையில் எடுத்தார். அதிமுக.வின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்திற்கு அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட மரியாதையை குறைக்க தொடங்கினார். இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இருக்கும் இடையே இருந்த நல்லுறவு கெட்டுப் போக முதன் முதலில் பிள்ளையார் சுழி போட்டவர் எழிலகன்தான்.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அரசின் சார்பில் சாதனை மலர் வெளியிடப்பட்டது. தலைமைச் செயலகத்திற்கு வழக்கமாக செல்லும் பழக்கம் உள்ள நான், அங்குள்ள பத்திரிகையாளர் அறைக்குச் சென்றேன். அப்போது, அங்கிருந்த தினத்தந்தி முதன்மை செய்தியாளர் பெனட், சாதனை மலரை புரட்டிக் கொண்டிருந்தார்.

அருகில் நின்று பார்த்தபோது, பக்கத்திற்கு பக்கம் எடப்பாடி பழனிசாமியின் விழா புகைப்படங்கள்தான் இடம் பெற்றிருந்தன. இ.பி.எஸ்.ஸும், ஓ.பி.எஸ்.ஸும் இணைந்து கலந்துகொண்ட அரசு விழா புகைப்படங்கள் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டிருந்தன. அந்த சாதனை மலர் தயாரிப்பின் சூத்திரதாரி எழில்தான்.

அவரின் தில்லுமுல்லுவை குமுதம் ரிப்போர்ட்டரில் இரண்டு மூன்று வரிகளில்தான் குறிப்பிட்டிருந்தேன். அதைப் பார்த்து ஆத்திரமடைந்த எழில், நிர்வாகம் மூலம் என்னை மிரட்டினார். அதற்குப் பிறகும் அவரை எதிர்த்துதான் எழுதினேன்.

செய்தித்துறை அதிகாரி என்றால், அரசுக்கும் ஊடகத்திற்கும் பாலமாக இருக்க வேண்டும். ஆனால், எழில், அதிமுக கரை வேட்டி கட்டாத கட்சிக்காரனாக மாறி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான செய்திகளை (நியாயமாக இருந்தபோதும் கூட) ஆராய்ந்து பார்த்து, சுட்டிக்காட்டப்படும் தவறுகளுக்கு தீர்வு காணாமல் ஊடகங்களை, செய்தியாளர்களை நேரடியாக மிரட்ட தொடங்கினார்.

கிரிதரன்…

அதிமுக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டிய காட்சி ஊடகங்களின் ( தொலைக்காட்சிகள்) அலைவரிசையில் கை வைத்தார். கேபிள் டிவி நிறுவனம் மூலம் அதிமுக அரசை விமர்சனம் செய்யும் தொலைக்காட்சிகளை, தேடி தேடி பார்க்கும் நிலைக்கு கொண்டு சென்றார். இந்த கிரிமினல் புத்தி, இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த மறைந்த முதல்வர்கள் செல்வி ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் இல்லை., கலைஞர் மு.கருணாநிதி காலத்திலும் இருந்ததில்லை.

அதைவிட கொடுமையாக, முதல்வரின் பயணத்தின் போது, சாலைகளின் இருபுறமும் காவலர்களை கால் கடுக்க நிற்க வைத்து கொடுமைப்படுத்தும் மனிதாபிமானமற்ற செயலையும் அவர்தான் அறிமுகப்படுத்தினார். 2017 பிப்ரவரியில் முதல்வராக பதவியேற்ற காலத்தில் இருந்து அந்தாண்டின் இறுதிவரை, காவலர்கள் பாதுகாப்பு தேவையில்லை என்றுதான் சொல்லி வந்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், முதல்வர் என்று கெத்து காட்ட வேண்டும் என்றால் இதுபோன்ற பந்தாக்கள் எல்லாம் செய்ய வேண்டும் என்று திரும்ப திரும்ப கூறி, எடப்பாடியை கெடுத்தவர், எழில்தான்.

இப்படி இ.பி.எஸ்.ஸையே தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொண்டு செய்தித்துறையில் பல நூறு கோடி ரூபாய்க்கு ஊழல் செய்துள்ளார் எழில். அவரின் சட்டவிரோத செயல்களுக்கு உதவ மறுத்த செய்தித்துறை அதிகாரிகளை, குறிப்பாக திமுக ஆதரவு மனநிலையில் உள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்தும், பதவி உயர்வுகளை தடுத்தும் பழிவாங்கினார்.

உதாரணத்திற்கு இரண்டொரு நிகழ்வுகளை மட்டுமே குறிப்பிடுகிறேன். 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தலைமைச் செயலகத்தில் பணியாற்றிய திமுக ஆதரவு மக்கள் தொடர்பு அலுவலர்கள், துணை இயக்குனர்கள் மாறப்பட்டனர்.. ஆனால் சென்னையில் பல்வேறு இடங்களில் பணியாற்றிய திமுக ஆதரவு அதிகாரிகள் பெரும்பாலும் தொந்தரவு செய்யப்படவில்லை… ஆனால் 2017ல் எடப்பாடி முதல்வர் இருக்கையில் அமர மீண்டும் எழில் பதவிக்கு வர தலைமைச் செயலகம் உள்பட சென்னையில் பல்வேறு இடங்களில் பணியாற்றிய திமுக ஆதரவு அதிகாரிகளை பந்தாடினார்.

அத்துடன் தனது பழிவாங்கும் குணத்தை நிறுத்தி கொள்ளாமல் பதவி உயர்விலும் விளையாடி திமுக ஆதரவு அதிகாரிகளை திண்டாட வைத்தார்..

அந்த வகையில் பழிவாங்கப்பட்டவர் இணை இயக்குனர் அந்தஸ்து கொண்ட மனோகரன். இவரின் பதவிக்குரிய பணியை வழங்காமல் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் சாதாரண உதவியாளரைப் போன்ற பணியில் அமர்த்தி பழிவாங்கியதுடன், அவமானமும் படுத்தியவர்தான், இந்த எழில்.

எழில் புராணமே இன்னும் ஏராளமாக இருக்கும்போது, அமைச்சராக இருந்த காலத்தில் இருந்தே எடப்பாடி பழனிசாமியின் நேர்முக உதவியாளராக இருந்த கிரிதரன், எழிலைப் போல 100 மடங்கு தீய குணம் படைத்தவர். அவரை நேரில் சந்தித்து பழகியவர்களின் அனுபவங்களைக் கேட்டால், இதுபோன்ற மனிதரை வாழ்நாளில் மீண்டும் சந்திக்கவே கூடாது என்று கடவுள்களிடம் வேண்டிக் கொள்வதாகதான் கூறுகிறார்கள்.

கிரிதரனை நேரில் பார்த்தால் பிக்பாக்கெட் திருடனைவிட மோசமாக இருப்பார். காட்சியிலும் மட்டுமல்ல, குணத்திலும் அப்படிதான். எடப்பாடிக்கு அவப்பெயரை தேடித் தருவதில் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டவர்கள். இருவரும் எவ்வளவு கொடூரமானவர்கள் என்பதற்கு ஒரு ஒரே உதாரணத்தை சொல்கிறேன்.

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளர்களில் பூங்குன்றன் ஒருவர் என்றால் மற்றொருவர் தங்கய்யன். போயஸ் கார்டனில் வேலை பார்த்த பூங்குன்றன், அரசு அதிகாரி அல்ல. ஆனால், தங்கைய்யன், செய்தித்துறையில் துணை இயக்குனர் அந்தஸ்தில் பணிபுரிந்தவர். செல்வி ஜெயலலிதாவை சந்திக்க வேண்டும் என்றால், தங்கைய்யனின் மூலம் தான் பார்க்க முடியும். தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரிந்தவர்.

2019 ம் ஆண்டு இறுதியில் பணி ஓய்வு பெற வேண்டியிருந்ததால், அந்தாண்டு இடைத்தேர்தல் முடிந்தவுடன் தனக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எடப்பாடி பழனிசாமியிடம் முன்வைத்தார். அவரும், பணி நீட்டிப்பு வழங்குவதாக கூறி அதற்கான பணிகளை மேற்கொள்ள எழிலையும், கிரிதரனிடமும் பொறுப்பை ஒப்படைக்கிறார்கள். பணி ஓய்வுப் பெறும் நாள் வரை எந்த உத்தரவும் பிறப்பிக்காததால், இருவரையும் தனித்தனியாக தங்கைய்யன் நேரில் சந்தித்து கேட்டுள்ளார்.

அப்போது, எழில், நீ போய் கிரிதரன் காலில் விழு.. உனக்கு பணி நீட்டிப்பு கிடைத்துவிடும் என்று ஆணவத்தோடு கூற, கிரிதரனைப் போய் பார்த்தபோது, நீ போய் எழில் காலில் விழு என்று கிரிதரன் நக்கலடிக்க, தங்கைய்யனை கூனி குறுகிப் போக வைத்துள்ளன இரண்டு பிசாசுகளும்.

இத்தனைக்கும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மருமகன் உறவு கொண்டவர் தங்கைய்யன்.

ஊடக நண்பர்கள் சிலர் என்னிடம், எழிலையும் கிரிதரனைப் பற்றியும் எழுதுங்கள் என்றார்கள். இந்த இரண்டு ஈனப் பிறவிகளைப் பற்றியும் எழுதவே கூடாது என்று வைராக்கியத்துடன் இருந்தேன். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கே முன்பு சென்னையை விட்டு ஓடிவிட்டார் எழிலகன்.

அந்தளவுக்கு பயந்தாங்கொள்ளியை வெளிச்சம் போட்டு காட்டவே இந்த பதிவு.. அதற்கு மேலாக மற்றொரு காரணமும் உண்டு.

எழில், கிரி ஆகியோரைப் பற்றி எழுதுவதைவிட, தன்னைச் சுற்றி இருப்பவர்கள் எந்தளவுக்கு தீயக் குணம் கொண்டவர்கள் என்பதை புரிந்து கொள்ளாமலேயே ஆட்டம் போட்ட எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் சரியான தீர்ப்பு வழங்க வேண்டும் என்று காத்திருந்தேன்.

தீயவர்களை ஒட்டுமொத்தமாக தலைமைச் செயலகத்தில் இருந்து துடைத்து எறிந்திருக்கிறது காலம்…..

2 thoughts on “இ.பி.எஸ்.ஸை படுகுழியில் தள்ளிய 2 பேர்.. ஓய்வுப்பெற்ற செய்தித்துறை அதிகாரி எழில்-முதல்வரின் உதவியாளர் கிரிதரன்…”

Comments are closed.