Fri. May 17th, 2024

சிறப்புச் செய்தியாளர் தாரை இளமதி…..

மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியையே மிஞ்சும் வகையில் திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, பெரும்பான்மை இடங்களில் வெற்றிப் பெற்று திமுக ஆட்சியை நிறுவி முதல்வரான மு.க.ஸ்டாலினின் ஒவ்வொரு நடவடிக்கைகளும், குறிப்பாக மே 7 ஆம் தேதிக்குப் பிறகு அவரின் ஒவ்வொரு காய் நகர்த்தலும் பக்குவப்பட்ட அரசியல் தலைவராக அடையாளப்படுத்திக் கொண்டு இருக்கிறது.

அவரின் தலைமையிலான அமைச்சரவை, பெரும்பான்மையினரால் பாராட்டப் பட்டாலும் கூட, அதிமுக.வில் இருந்து திமுக.வில் இணைந்த பலருக்கு, குறிப்பாக செந்தில்பாலாஜி, ராஜ கண்ணப்பன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட துறைகள், பொதுதளத்தில் மட்டுமல்ல, திமுக நிர்வாகிகளிடையே பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த இருவரில், செந்தில் பாலாஜிக்கு எதிராகதான் கடுமையான கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள் திமுக முன்னணி தலைவர்கள்.

முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, தனது துறையான அரசு போக்குவரத்து கழகங்களில் வேலைவாங்கித் தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளார் என்ற வழக்கு விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இன்றைக்கும் இருக்கிறது.

இப்படி ஊழல் வழக்கில் முதன்மையான குற்றவாளியான செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் அமர வைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை திமுக தரும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுவதை , அதிமுக ஆட்சிக்கு எதிரான ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து போராடிய தன்னார்வலர்களை அவமானப்படுத்தும் செயல் அல்லவா என்று கொதிக்கிறார்கள் திமுக மீது அபாரமான பற்றுக் கொண்ட சமூக ஆர்வலர்கள்.

செந்தில்பாலாஜியையே ஊழல் பேர் வழி என்று போராட்டக் குணம் தணியாத சமூக ஆர்வலர்களே கொதித்துக் கொண்டிருக்கும்போது, அவரிடம் பி.ஏ.வாக ஒட்டிக் கொண்டிருக்கும் செய்தித்துறையைச் சேர்ந்த இணை இயக்குனர் வெற்றிச்செல்வனை பார்த்து, மேலும் கோபம் கொந்தளிக்க ஆவேசமாக பேசுகிறார்கள் அதே சமூக ஆர்வலர்கள்

செந்தில்பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கில் அவருக்கு உடந்தையாக செயல்பட்டவர்களில் ஒருவராக குற்றப்பத்திரிகையில் இடம் பிடித்து இருப்பவர்தான் இந்த வெற்றிச் செல்வன். கடந்த அதிமுக ஆட்சியில் செந்தில்பாலாஜியை காட்டி கொடுக்கிறேன் என்று கூறி, செய்தித்துறையில் கூடுதல் இயக்குனராகவும் பின்னர் முதல்வரின் தனி சிறப்பு அதிகாரியுமான எழிலகனிடம் சரணாகதி அடைந்த வெற்றிச் செல்வன், அவரது ஆசியோடு கடந்த பத்தாண்டுகளில் அடித்த ஊழல்களுக்கு அளவே இல்லை என்கிறார்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள அரசு அதிகாரிகள்.

சேலம் மாநகராட்சி மக்கள் தொடர்பு துறையில் பதவி பெற்ற வெற்றிச்செல்வன், துணை இயக்குனர், இணை இயக்குனர் என பதவி உயர்வுகளைப் பெற்றுக்கொண்டு சேலத்திலேயே தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தின் சமையல் அறை வரை நடமாடும் அளவுக்கு செல்வாக்கு படைத்தவராக மாறியதுடன், எழில் சேலம் வரும் போதெல்லாம் அவருக்கு தேவையான அனைத்து சேவைகளையும் செய்து தந்து குஷிப்படுத்தியவர்தான், இந்த வெற்றிச் செல்வன்.

எடப்பாடி பழனிசாமி, எழிலகன் கூட்டணி தந்த தைரியத்தில் சேலம் மாநகராட்சி ஒப்பந்தங்களிலும் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டவர் வெற்றிச் செல்வன் என்பதும், அவருக்கு எதிராக 5 ஊழல் புகார்கள் இன்றைக்கும் விசாரணையில் இருக்கிறது என்பதும் குறிப்பாக வ.உ.சி. மார்க்கெட் இடம் மாற்றத்தில் நடைபெற்ற 5 கோடி ரூபாய் அளவுக்கான ஊழல் வழக்கிலும் சம்பந்தப்பட்டிருக்கிறார் வெற்றிச்செல்வன் என்பதும் இன்றும் சேலத்தில் விவாதப் பொருளாகவே இருக்கிறது.

வ.உ.சி மார்க்கெட் விசாரணை சூடுபிடித்தவுடன், சேலத்தில் இருந்து திருநெல்வேலிக்கு தேர்தலுக்கு முன்பு அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டவர்தான் இந்த வெற்றிச்செல்வன் என்கிறார்கள் சேலத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள்.

இப்படி கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் அதிகார மையத்தோடு நெருங்கிய தொடர்பில் இருந்த இணை இயக்குனர் வெற்றிச்செல்வன், சாதாரண மக்கள் தொடர்பு அதிகாரி அளவுக்கான அமைச்சரின் பி.ஏ ( தனி உதவியாளர்) பதவிக்கு ஆசைப்பட்டு, செந்தில்பாலாஜியோடு மீண்டும் இணைந்து கடந்த பல நாட்களாக அவரது காரிலேயே பயணித்து வருவது, கரூர் மாவட்ட திமுக முன்னணி நிர்வாகிகளிடம் கடும் புகைச்சலை ஏற்படுத்தி வருகிறது. அவர்களிடம் பேசியபோது, வெற்றிச்செல்வனின் தில்லுமுல்லுகளை பற்றி விலாவாரியாக பேசினார்கள்.

தேர்தலுக்கு முதல்நாள் அதிமுக கட்சிக்காரன் போலவே செயல்பட்ட வெற்றிச்செல்வன், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பஞ்சோந்தியாக மாறி செந்தில்பாலாஜியிடம் ஒட்டிக் கொண்டார். கொள்ளைக்காரர்கள் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது ஒருபுறம் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது என்றாலும்கூட உண்மையான திமுக ஆதரவு அதிகாரிகளை, கடந்த பத்தாண்டுகளாக அதிமுக ஆட்சியில் பழிவாங்கப்பட்ட நேர்மையான அதிகாரிகளை, திமுக ஆட்சியில் கூட நியாயமான பதவிகளை பெற முடியாமல் சதிவேலைகளை செய்துக் கொண்டிருக்கிறார் வெற்றிச்செல்வன் என்ற செய்திதான் எங்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

அதுவும் வெற்றிச் செல்வனின் வார்த்தைக்கு எல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்காவின் சகோதரர் முறை உறவான செய்தித்துறை துணை இயக்குனர் மணிமாறன் தலையாட்டிக் கொண்டிருக்கிறார் என்பதுதான் எங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


வெற்றிச்செல்வனின் மறுபக்கத்தை தெரிந்து கொள்ளாமல் பழைய நட்பில், அவரின் வார்த்தைகளுக்கு காது கொடுத்துக் கொண்டிருக்கிறார் மணிமாறன் என்று திமுக குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் தொடர்பு அலுவலர்கள் (பி.ஆர்.ஓ) பலர் எங்களிடம் முறையிட்டு கொண்டு இருக்கிறார்கள். இத்தனைக்கும் எழிலால் பழிவாங்கப்பட்டவர்தான் இந்த மணிமாறன்.

இப்போது துணை இயக்குனராக உள்ள மணிமாறன், 5,6 ஆண்டுகளுக்கு முன்பே இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றிருக்க வேண்டும். அவருக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பதவியை தராமல் பழிவாங்கியவர் எழிலகன். அதுவும் வெற்றிச்செல்வனின் தூண்டுதலின்பேரில்தான் மணிமாறனை எழிலகன் பழிவாங்கினார்.

அதுமட்டுமில்லாமல், தலைமைச் செயலகத்தில், சென்னையில் மணிமாறன் பணியாற்றவே கூடாது என்று துரத்தியடித்தவர் எழிலகன்தான். அதைவிட கொடூர குணத்துடன் இணை இயக்குனர் என்ற பதவி உயர்வை பெறாமலேயே துணை இயக்குனர் பதவியில் இருந்தவாறே மணிமாறன் ஓய்வுப் பெற்றுவிட வேண்டும் என்ற நரித்தனத்தோடு காரியம் ஆற்றியவர் எழில்தான். அவரின் குரூர நடவடிக்கைகளுக்கு பின்னணியாக இருந்தவர் இந்த வெற்றிச்செல்வன்தான்.

ஆனால் விதி மணிமாறனை காப்பாற்றிவிட்டது. 58 வயதில் ஓய்வு பெற வேண்டியவர்களுக்கு இரண்டு ஆண்டு சலுகையை எடப்பாடி பழனிசாமி வழங்கியதால் இந்த ஆண்டோடு ஓய்வு பெற வேண்டிய மணிமாறனுக்கு, உயிர்த்தண்ணீர் மாதிரி, திமுக ஆட்சியே மீண்டும் வந்துவிட்டது. துர்காவின் உறவினராக இருந்தாலும் கூட இந்த நிமிடம் வரை வாடகை வீட்டில்தான் மணிமாறன் குடியிருந்து வருகிறார்.

அவரிடம் இயல்பாக உள்ள கள்ளம் கபடம் இல்லாத குணத்தை பயன்படுத்திக் கொண்டு அதிமுக ஆட்சியில் நல்ல பதவிகளையும், பசையுள்ள துறைகளிலும் எழிலின் ஆதரவோடு பணியாற்றிய திமுக அனுதாபிகளாக தங்களை காட்டிக் கொள்ளும் இணை இயக்குனர் முதல் மக்கள் தொடர்பு அலுவலர் வரை ஒரு பெருங்கூட்டம், அவரை சுற்றிக் கொண்டு இருக்கிறது. அதுவும் தலைமைச் செயலகத்தில் உள்ள முக்கிய பணியிடங்களை குறி வைத்து காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள் என்கிற போதுதான் ரத்தம் கொதிக்கிறது.

மணிமாறனைச் சுற்றி இவ்வளவு தில்லுமுல்லுகள் நடைபெற்று கொண்டிருக்கிற நேரத்தில், பவர்ஃபுல் பதவியான, அதுவும் எடப்பாடி பழனிசாமி சமுதாயத்தைச் சேர்ந்த எழிலகன் அமர்ந்த கூடுதல் இயக்குனர் பணியிடத்திற்கு குறி வைத்து ஆளுநர் மாளிகையில் பணியாற்றி வரும் கூடுதல் இயக்குனர் அந்தஸ்திலான சிவ சரவணன் என்பவர் செய்யும் சதிராட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கே ஆபத்தை உருவாக்கி விடுமோ என்று அஞ்சுகிறோம் என்று கூறி பீதியை கிளப்பினார், கரூர் திமுக முன்னணி தலைவர் ஒருவர்.

சில நிமிடங்கள் மூச்சை ஆழமாக உள்வாங்கி ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் பேச தொடங்கினார் அவர்.

ஆளுநர் மாளிகையில் தற்போது மக்கள் தொடர்பு துறையில் பணியாற்றி கொண்டிருக்கும் சிவ சரவணன், வெற்றிச்செல்வனை விட நூறு மடங்கு ஆபத்தானவர். ஆளுநர் மாளிகையில் அமர்ந்து கொண்டே சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிப் பெற்று விடக் கூடாது என்று மறைமுகமாககூட இல்லை, நேரடியாகவே திமுக.வுக்கு எதிராக வேலைபார்த்தவர்.

சிவசரவணனுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் செய்தித்துறை அலுவலர்களிடமே சூடாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இன்றைக்கு முதல்வர் அலுவலகத்தில் முதன்மை அதிகாரியாக இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரன், மதுரையில் ஆட்சியராக பணியாற்றிய போது மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றியவர் இந்த சிவ சரவணன்.
அப்போது அங்கு அதிமுக.வினரிடம் கொஞ்சி குலாவிய பாசத்தில், தற்போதைய தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காக அவரை எதிர்த்து அதிமுக.வில் போட்டியிட்ட கீர்த்திகா முனியசாமிக்கு ஓட்டுப் போடுவதற்காக தனது சொந்த செலவில் மதுரையில் தங்கியிருந்த முதுகுளத்தூர் வாக்காளர்களை பேருந்து ஒன்றில் அனுப்பி வைத்தவர் சிவ சரவணன் என்பது ஒட்டுமொத்த செய்தித்துறையில் உள்ள அத்தனை அதிகாரிகளுக்கும் தெரியும்.

இப்படி, வாக்குப்பதிவு நாள் வரை வெறிப்பிடித்த அதிமுக காரராகவே வேலை பார்த்த சிவ சரவணன், திமுக ஆட்சிக்கு வந்தவுடன், உதயச்சந்திரன் ஐஏஎஸ் மூலமாகவும், துர்கா சகோதரர் மணிமாறன் மூலமும் கூடுதல் இயக்குனர் பதவியை கைப்பற்ற ரகசியமாக காய் நகர்த்தி வருகிறார். ஆளுநர் மாளிகை செல்வாக்கு, உதயச்சந்திரன் ஐஏஎஸ்.ஸின் பரிவு போன்றவற்றை வைத்து கூடுதல் இயக்குனர் பதவியை பெற்றுவிட துடிக்கும் சிவ சரவணனைப் பார்த்து, நேர்மையான திமுக ஆதரவு மனநிலையில் உள்ள அதிகாரிகள் விரக்தியடைந்துவிட்டனர் என்ற தகவலும் எங்களுக்கு கிடைத்த போதுதான், நாங்கள் சூடாகிவிட்டோம்.

சிவ சரவணனை விட்டால் அந்த பதவிக்கு தகுதியான வேறு அதிகாரியே இல்லையா என்று கேட்டபோது ஒன்றிரண்டு பேரை கை காட்டுகிறார்கள். கூடுதல் இயக்குனர் அந்தஸ்தோடு முத்தையா என்ற அதிகாரி உள்ளார். தற்போது அவர் டெல்லியில் இருக்கிறார். டெல்லியை விட்டு இடம் பெயருவாரா என்று தெரியாது.

அதே பதவி அந்தஸ்தோடு சாந்தி, சண்முகம், அம்பலவாணன் ஆகியோர் உள்ளனர். இதில், திமுக பற்றாளர் யார் என்று தேடினால் அம்பலவாணன் மட்டுமே மிஞ்சுகிறார்.

இப்படி திமுக ஆதரவு மனநிலையில் உள்ள அதிகாரிகள் தயக்கம் காட்டுவதால், அதிமுக காரராகவே மாறிவிட்ட சிவ சரவணன் போன்றவர்கள் துள்ளிக்குதித்து துணிச்சலோடு காய் நகர்த்துகிறார்கள்.

குற்றம் குறை காண முடியாத, நேர்மையான ஆட்சியை தருவேன் என்று திரும்ப திரும்ப உறுதியோடு கூறிக் கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினை, அவரது உறவினராக இருக்கும் துணை இயக்குனர் மணிமாறனே தவறாக வழிநடத்தி விடக் கூடாது என்பதுதான் எங்கள் ஆதங்கம்.

செய்தித்துறையில் உள்ள மூன்று முக்கிய பதவிகளான செயலாளர், இயக்குனர், கூடுதல் இயக்குனர் ஆகிய பதவிகளிலும் நேர்மையான, கடுமையாக உழைக்க கூடிய அரசு அதிகாரிகளை அமர வைத்தால்தான், முதல்வர் மு.க.ஸ்டாலின் முழங்கி வரும் நேர்மையான ஆட்சி சாத்தியமாகும்..

மணிமாறனின் பேச்சை மட்டுமே கேட்டு, செய்தித்துறையில் அதிகாரிகளை நியமிப்பதை தவிர்த்து, முதல்வர் தனது கையில் வைத்திருக்கும் உளவுத்துறை மூலம் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகாத அரசு அதிகாரிகளை தேர்வு செய்து செய்தித்துறை அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடையே வேண்டுகோள் என்றார்.

அரசு துறைகளில் எத்தனையோ துறை இருக்கும் போது திமுக கட்சிக்காரர்களான உங்களுக்கு செய்தித்துறையில் மட்டும் ஏன் இந்தளவுக்கு அக்கறை என்றோம்.

என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க. செய்தித்துறையில் மட்டும்தான் திமுக,அதிமுக என்ற கட்சி பின்னணி உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக திமுக காரன் என்பதற்காகவே பழிவாங்கப்பட்டவர்கள் எல்லாம் திமுக. குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். கடந்த 10 ஆண்டுகளில் எழிலுக்கு எடுபிடி வேலை செய்யாத திமுக குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகளுக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை. நிம்மதியாக ஒரு இடத்தில் அமர்ந்து வேலை பார்க்கவிடவில்லை. அவர்கள் அனுபவித்த வேதனை கொஞ்சம் நஞ்சமல்ல. அதனால்தான், செய்தித்துறை மீது எங்களுக்கு இவ்வளவு அக்கறை என்று கூறி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவாரே நகர்ந்துச் சென்றார், கரூர் திமுக முன்னணி தலைவர்.

விசுவாசமிக்க திமுக நிர்வாகிகளின் குரல்களுக்கு செவி சாய்ப்பாரா ? முதல்வர் மு.க.ஸ்டாலின்…