Sat. Nov 23rd, 2024

நடிகர் சீமானை ஒருங்கிணைப்பாளராக கொண்டுள்ள நாம் தமிழர் கட்சிக்கு தேர்தலுக்கு தேர்தல் வாக்கு வங்கி அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம், தமிழ்நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும் என்பதை உரக்க சொல்லி கொண்டு வருவதால்தான். திராவிட இயக்கத்திற்கு மாற்றாக சீமான் முன் வைக்கும் அழுத்தமான வாதங்கள், கடந்த ஐந்தாண்டு காலத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களை ஈர்த்து இருக்கிறது என்பதை தற்போதைய சட்டமன்றத் தேர்தலும் நிரூபித்திருக்கிறது.

இப்படி, தமிழ்நாட்டை ஆள்வதற்கு தகுதியான தமிழன் இல்லையா என்ற கேள்வியை நடிகர் சீமான் முன் வைப்பதைபோலவே, தமிழக காவல்துறையிலும் தகுதியான காவல்துறை அதிகாரிகள் நிறைய பேர் இருக்கும் போது, வட மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளை உயர் பதவிகளில் அமர வைப்பதிலும், சட்டம் ஒழுங்கு போன்ற முக்கிய துறைகளில் பணியமர்த்துவதில் அதீத ஆர்வம் காட்டுவது ஏன் என்றே புரியவில்லை என்கிறார்கள் தமிழக காவல்துறையில் உள்ள தமிழக அதிகாரிகள்.

அதிமுக.வாக இருந்தாலும் சரி, திமுக.வாக இருந்தாலும் சரி எந்த அரசாக இருந்தாலும் வட மாநில அதிகாரிளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், முன்னுரிமையை தமிழக அதிகாரிகளுக்கு கொடுக்க மறுக்கப்படுவது ஏன் என்ற கேள்வியை முன் வைக்கிறார்கள்.

அந்த வகையில், பெருநகர சென்னை காவல் துறை ஆணையர் பதவிக்கு, தமிழகத்தைச் சேர்ந்த இரண்டொரு அதிகாரிகளின் பெயர்கள் முன்வைக்கப்பட்டன. அதில், முதலிடத்தில் இருந்தவர் எம். ரவி ஐபிஎஸ். கூடுதல் டிஜிபி ஆன இவர், கடந்த அதிமுக ஆட்சியால் பழிவாங்கப்பட்டவர். உயரதிகாரியான இவரை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, சத்தியமங்கலத்திற்கு தூக்கியடித்தது முந்தைய அதிமுக ஆட்சி.

இத்தனைக்கும் இவர், முன்னணி திமுக தலைவரின் குடும்பத்திற்கு உறவினர். திமுக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, காவல்துறை அதிகாரி எம்.ரவியின் சகோதரியைதான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சென்னை மாநகர காவல்துறையில் கூடுதல் காவல் ஆணையராக பணிபுரிந்த அனுபவமும் பெற்றவர். அதைவிட கனிவுடன் பரிசீலிக்க வேண்டிய அம்சம் ஒன்று உண்டு என்றால், அது, இவரின் பணிக்காலம் இன்னும் ஒரு வருடம்தான் இருக்கிறது என்பதுதான்.

ஐபிஎஸ் முடித்துவிட்டு காவல்துறையில் பணியில் சேரும் அனைவருக்கும் வாழ்க்கை லட்சியமாக இரண்டு அம்சங்கள் இருக்கும். அதில் ஒன்று காவல்துறை தலைவராக (சட்டம் ஒழுங்கு) பணிபுரிந்து ஓய்வு பெற வேண்டும் என்பது. அது உச்சபட்ச ஆசை. இரண்டாவது, சென்னை போன்ற பெருநகரங்களில் காவல்துறை ஆணையராக (அதுவும் சட்டம் ஒழுங்கு) பணியாற்றிவிட்டு ஓய்வுப் பெற வேண்டும் என்பதுதான்.

பெரும்பான்மையான காவல்துறை அதிகாரிகளுக்கு, அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி. அவர்களின் ஆசை நிறைவேறுவதே இல்லை.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன், கூடுதல் டிஜிபி எம். ரவி சென்னை மாநகர காவல்துறை ஆணையராக நியமிக்கப்படுவார் என்று சென்னையில் உள்ள மூத்த ஊடகவியலாளர்கள் எதிர்பார்த்தனர். அதே சிந்தனை போக்கு திமுக ஆதரவு பெற்ற காவல்துறை உயரதிகாரிகளிடம் இருந்தது. ஆனால், எம்.ரவி ஐபிஎஸ்.ஸுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கோட்டை வட்டாரத்தில் விசாரித்த போது, உறவுகளே அவருக்கு சிபாரிசு செய்யவில்லை என்ற காரணத்தை முன்வைத்தாலும் திமுக அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்ற பிரசாரம் முன்னெடுக்கப்படும் என்ற காரணத்தால் தவிர்த்துவிட்டார் முதல்வர் என்றும் இருவேறு தகவல் கிடைக்கிறது.

அதிமுக ஆட்சியின் கடைசி நொடி வரை பவர்ஃபுல் பதவியில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி உமாநாத்திற்கு கோட்டையில், அதுவும் முதல்வர் அலுவலகத்திலேயே உயர்ந்த பதவி வழங்கப்பட்டுள்ள போது, எம். ரவி ஐபிஎஸ்.ஸை பெருநகர காவல் துறை ஆணையராக நியமிக்கப்படுவதால் எந்த அவப்பெயரும் திமுக அரசுக்கு ஏற்பட்டிருக்காது என்று கூறுபவர்களும் தமிழக காவல்துறையில் இருக்கிறார்கள்.

எம்.ரவி ஐபிஎஸ்.ஸுக்கு சென்னை காவல் ஆணையர் அதிர்ஷ்டம் கைவிட்டு போன நிலையில், சிறப்பு டிஜிபி ஆக நிர்வாகத்துறைக்கு இன்று பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவரைப் போலவே, தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் இரண்டு தகுதியுள்ள உயரதிகாரிகளும் புறக்கணிக்கப்பட்டிருப்பதும் விவாதமாக மாறியுள்ளது. அதில் ஒருவர் கந்தசாமி ஐபிஎஸ். தமிழக காவல்துறையின் நிர்வாகப் பிரிவில் பணியாற்றி வந்த சிறப்பு டிஜஜி.யையும் பெருநகர சென்னை காவல் ஆணையராக நியமித்திருக்கலாம். நேர்மைக்கும் திறமைக்கும் பெயர் பெற்ற இவர், இதுவரை சட்டம் ஒழுங்குப் பிரிவில் பணிநியமனமே செய்யப்பட்டதில்லை என்பது, தமிழகத்தில் பிறந்த ஒரு அதிகாரிக்கு இழைக்கப்படும் அநீதியாகதானே இருக்கும்.

காவல்துறையில் சட்டம் ஒழுங்குப் பிரிவில் பணியாற்ற தகுதியும், நேர்மையும், திறமையும் இருந்தால் மட்டும் போதாது. ஆளும்கட்சியின் சிபாரிசும் வேண்டும் என்பது தொடர்ந்து நிரூபணமாகிக் கொண்டே இருக்கிறது. சங்கர் ஜிவால் ஐபிஎஸ்.ஸை தேடி வந்த அதிர்ஷ்ட தேவதை, ஏனோ தெரியவில்லை பி.கந்தசாமி ஐபிஎஸ்.ஸை ஏறெடுத்து கூட பார்க்கவில்லை.

நிர்வாகத்துறையில் பணியாற்றி வந்த சிறப்பு டிஜிபி பி.கந்தசாமி, லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி ஆக இன்று பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிறப்பு டிஜிபி கந்தசாமி ஐபிஎஸ்….

தமிழக காவல்துறையில் இதற்கு முன்பும், இனிவரும் காலங்களிலும் யாராலும் செய்ய முடியாத, செய்ய வாய்ப்பே இல்லாத ஒரு சாதனையை நிகழ்த்தியிருப்பவர் சிறப்பு டிஜிபி பி.கந்தசாமி ஐபிஎஸ்.. 2010 ஆம் ஆண்டில் சிபிஐ அதிகாரியாக பி.கந்தசாமி ஐபிஎஸ் பணியாற்றிய போது தற்போதைய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அன்றைய காலகட்டத்தில் கைது செய்தவர் பி.கந்தசாமி. சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் அட்டகாசமான, துணிச்சலான பணியை நிகழ்த்தி காட்டியவர் அவர். இந்த ஒரு காரணத்திற்காகவே திமுக அரசு, பி.கந்தசாமி ஐபிஎஸ்.ஸுக்கு சிறப்பு சலுகை காட்டி அவரை நேரடியாக காவல்துறை தலைமை இயக்குனராக கூட நியமிக்கலாம் என்கிறார்கள் திமுக ஆதரவு காவல்துறை அதிகாரிகள்…

மற்றொருவர் கூடுதல் காவல்துறை இயக்குனர் ஜெய்ந்த முரளி. இவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த திறமையான, நேர்மையான அதிகாரிதான். முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்குப்பிரிவு கூடுதல் டிஜிபி ஆக பணியாற்றி வந்தார். அவரை மாற்றிவிட்டுதான் தாமரைக்கண்ணன் ஐ.பி.எஸ், அந்த பணியிடத்திற்கு நியமிக்கப்பட்டார்.

காவல்துறையில் ஒவ்வொரு முறையும் பணி நியமனங்கள் நடைபெறுகிறபோது, திறமையான, தகுதியான தமிழ் ஐபிஎஸ் அதிகாரிகள் டம்மியான பதவிகளில் அமர வைக்கப்படுவதால்தான், அவர்கள் மனதளவில் சோர்ந்து போகிறார்கள். அதுவும் பணி ஓய்வு பெறும் காலத்திலும் கூட சட்டம் ஒழுங்குப் பிரிவில் பணியாற்ற வாய்ப்பு மறுக்கப்படுவது, ஓய்வுக்குப் பிறகும் ஐபிஎஸ் உயரதிகாரிகளை கவலையோடு வாழவே செய்து விடுகிறது.

இந்த அம்சத்தில், ஆண் ஐபிஎஸ் அதிகாரிகளை விட அதிகமாக பாதிக்கப்படுவது பெண் ஐபிஎஸ் அதிகாரிகள்தான். சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிப்பது என்பது அரிதாக நடைபெறும் நிகழ்வாக மாறியிருக்கிறது.

கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு, 2006 ஆம் ஆண்டில் சென்னை மாநகர காவல்துறை ஆணையராக லத்திகா சரண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். அதற்குப் பிறகு இதுவரை பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கூட அந்தப் பதவிக்கு நியமிக்கப்படவில்லை. ஆண் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இணையான திறமைகளும், தகுதிகளும் கொண்ட பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் நிறைய பேர் இருந்தும், அவர்களுக்கும் அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவது பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை மனதளவில் சோர்வடைய வைத்துவிடுகிறது.

கூடுதல் காவல் இயக்குனர் சீமா அகர்வால் ஐபிஎஸ்…
ஐஜி பவானீஸ்வரி ஐபிஎஸ்…

அந்தவகையில், தற்போது கூடுதல் காவல் இயக்குனர் சீமா அகர்வால், பவானீஸ்வரி போன்ற நேர்மையான, திறமையான பெண் ஐபிஎஸ் உயரதிகாரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் புகழ்பெற்று விடக் கூடாது என்று அதிகார வர்க்கத்தில் உள்ள ஆண் வர்க்கம் நினைப்பதைபோல, ஆட்சிக் கட்டிலில் அமரும் அரசியல்வாதிகளும் நினைப்பதுதான், அதுவும் தந்தை பெரியார் பள்ளியில் பாடம் படித்த திமுக தலைவர்களும் அப்படியே இருப்பதை பார்த்துதான், பெண் ஐபிஎஸ் உயரதிகாரிகளும் விசித்திரமாக பார்க்கிறார்கள்.