Fri. May 17th, 2024

எஸ். ஈ. சாரா (Superintending Engineer)

ஆமாம்…….., நீங்க..

கடலூர் திமுக கேன்டிடேட் ஐயப்பன் பேசறேன்..

சொல்லுங்க சார்.. என்ன விஷயம்…

நமக்கு தெரிந்த தொழில் அதிபர்.. அவருக்கும் மின்சார வாரியத்துக்கும் ஏதோ பிரச்னையாம். அவரு ஃபேக்டரியில கரண்ட்டை கட் பண்ணிட்டாங்க…அத என்னன்னு பார்த்து சரி பண்ணி கொடுங்க..

சார் உடனே கவனிக்கிறேன்.. இன்னைக்கு அல்லது நாளைக்குள்ள கரண்ட் கொடுத்திடலாம் சார்..

கரண்ட் கொடுத்திட்டு எனக்கு தகவல் சொல்லுங்க…

ப்ராப்ளம் இருக்காது சார். சரி பண்ணிடலாம் சார்…

மேற்படியான டைலாக் வாக்குப்பதிவு முடிந்து தேர்தல் முடிவு வெளி வருவதற்கு சில நாட்கள் முன்பு கடலூரில் நடைபெற்றுள்ளது.

கடலூரில் அதிமுக வேட்பாளர் எம்.சி. சம்பத்தை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற ஐயப்பனிடம் அணுகி உதவி கேட்டவர் கடலூரில் உள்ள பிரபலமான அதிமுக தொழில் அதிபர் ஒருவர். அவர் முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.சி.சம்பத்திற்கு மிக,மிக நெருக்கமானவர். அவருக்காக தேர்தல் வேலையும் பார்த்தவர்.

கடலூர் திமுக எம்.எல்.ஏ.ஐயப்பன்…

திமுக வேட்பாளர் ஐயப்பனை பார்ப்பதற்கு முன்பாக அப்போது அமைச்சராக இருந்த எம்.சி. சம்பத்தை அணுகி தனது தொழிற்சாலையில் மின்சாரத்தை நிறுத்தி விட்டிருக்கிறார்கள். நீங்கள் அதிகாரியிடம் பேசி மீண்டும் மின்இணைப்பை பெற்று தர வேண்டும் என்று முறையிட்டிருக்கிறார். அவரும் அதற்கென்ன, அதிகாரியிடம் பேசி மின் இணைப்பு கொடுக்கச் சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்.

தொடர்ந்து இரண்டு நாள் எம்.சி.சம்பத்தை அணுகிய போதும், மின்சார வாரிய அதிகாரி போனை எடுக்க மாட்டேன் என்கிறார். இன்னும் இரண்டு நாட்கள் பொறுமையாக இரு என்று சொல்லி அனுப்பி இருக்கிறார். அவரும் மேலும் இரண்டு நாட்கள் காத்திருந்திருக்கிறார். அதன் பிறகும் எம்.சி. சம்பத்தை அணுகி கேட்டபோது, மின்சார வாரிய அதிகாரி செல்போனையே எடுக்கவில்லை என்று பழைய பல்லவியையே திரும்பவும் சொல்லியிருக்கிறார்.

இதனால் மனம் வெறுத்துப் போன அந்த தொழில் அதிபர், அவருக்கு அறிமுகமான மற்றொரு அதிமுக நிர்வாகியிடம் எம்.சி.சம்பத் அலைய விடுகிறார் என்று சொல்லி மனம் நொந்து இருக்கிறார். அதற்கு அவர், எம்.சி.சம்பத் ஒரு டூபாக்கூர். நீ நேராக திமுக வேட்பாளர் ஐயப்பனிடம் போ. அவர் உனது பிரச்னையை உடனடியாக தீர்த்து வைப்பார். நாம அதிமுக. அவரு திமுக என தயங்காதே. யாருக்கு என்ன பிரச்னை என்றாலும் அவர் மெனக்கெடுவார். தயங்காமல் போய் பாரு என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்.

அந்த தொழிலதிபரும் திமுக வேட்பாளர் ஐயப்பனை (தற்போது எம்.எல்.ஏ)போய் பார்த்து, விஷயத்தை சொல்லியிருக்கிறார். அவரை அமரச் சொல்லி உபசரித்துவிட்டு, அவர் முன்பாகவே மின்சார வாரியத்தின் செயற்பொறியாளருக்கு செல்போன் மூலம் பேசியுள்ளார்.

முதல் பாராவில், குறிப்பிட்டவாறாக மேட்டர் ஓவர். இரண்டே நாளில் அதிமுக தொழில் அதிபரின் தொழிற்சாலைக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டு விட்டது.

கடந்த பத்தாண்டுகளாக சொந்த பணத்தை செலவழித்து எம்.சி.சம்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தனக்கே டிமிக்கி கொடுத்துவிட்டாரே என்று புலம்பியதுடன், மின்சார அதிகாரிக்கு போனே செய்யாமல் பொய் சொல்லி ஏமாற்றுகிறாரே எம்.சி.சம்பத். கடந்த பத்தாண்டுகளாக கோரிக்கையோடு அவரை சந்தித்த மக்களையெல்லாம் எப்படி ஏமாற்றியிருப்பார் என்று அந்த தொழில் அதிபர், தான் சந்திக்கும் அதிமுக கட்சிக்காரர்களிடம் மட்டுமல்ல அனைத்து தரப்பு மக்களிடம் அடங்காத சினத்தோடு பேசிக் கொண்டிருக்கிறார்.

தன்னை அரசியலுக்கு அழைத்து வந்த ஐயப்பனிடமே தோல்வியை தழுவியதால், தீராத சோகத்தில் இருக்கும் எம்.சி.சம்பத், மே 2 ஆம் தேதியில் இருந்து அதிமுக நிர்வாகிகளில் ஒருவரைக் கூட சந்திக்காமல் வீட்டில் முடங்கி கிடக்கிறாராம். தேர்தலில் வெற்றிப் பெற்றவர்கள், தோல்வியைத் தழுவியவர்கள் எல்லாம் சேலம், போடிநாயக்கனூர் என மாறி மாறி சென்று எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்து மனப்பாரத்தை இறங்கி வைத்து வருகின்றனர்.

எம்.சி.சம்பத்…..

ஆனால், எம்.சி. சம்பத், உள்ளூர் கட்சிக்காரர்களை கூட சந்திக்காமல் முடங்கியிருந்தவர், நேற்று முதல் கோயில்களுக்கு புனித யாத்திரை செல்ல தொடங்கியிருக்கிறாராம். பத்து வருடம் அமைச்சராக இருந்த போது, ஓட்டுப் போட்ட கடலூர் மக்களுக்கும், மாவட்டத்திற்கும் நல்லது செய்யாமல், இப்ப போய் கோயில் கோயிலா ஏறி இறங்கினா, கடவுள் அவரை மன்னிச்சுடுவாரா?

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று பேரறிஞர் அண்ணா சொன்னதை மறந்துவிட்டு, கோடி கோடியாக கொள்ளையடித்து பணத்தை குவித்து வைக்க மட்டும் தெரிந்தவருக்கு, இந்த தேர்தல் முடிவு சரியான பாடம்தான் என்று ஆவேசத்தோடு கூறுகிறார்கள் கடலூர் நகர அதிமுக நிர்வாகிகள்.

கடலூரில் அவர் சார்ந்த சமுதாயத்தினரே அவருக்கு வாக்களிக்கவில்லை என்றும் தாழ்த்தப்பட்ட மக்களும், சிறுபான்மை மக்களும் பேசி வைத்த மாதிரி, திமுக வேட்பாளர் ஐயப்பனுக்கு ஒட்டுமொத்தமாக ஓட்டுப் போட்டுவிட, 50 கோடி ரூபாய் செலவழித்தும் ஜெயிக்க முடியலையே என்று இப்போது புலம்பி என்ன பலன் இருக்கப் போகிறது என்று நொந்து போய் பேசுகிறார்கள் கடலூர் அதிமுக மூத்த நிர்வாகிகள்…