Sat. Nov 23rd, 2024

சிறப்புச் செய்தியாளர் தாரை இளமதி

திமுக அமோக வெற்றிப் பெற்றதையடுத்து மே 2 ஆம் தேதி மாலையே திமுக ஆதரவு ஐஏஎஸ், ஐபிஎஸ் உயரதிகாரிகள் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் இல்லத்திற்குச் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.. அரசு முறை வழக்கப்படி (ப்ரோட்டக்கால்) தலைமைச் செயலாளர், காவல் துறை தலைமை இயக்குனர், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஆகியோர் புதிய முதல் அமைச்சராக பதவி ஏற்கவுள்ளவர் என்ற முறையில் மரியாதை நிமித்தமாக மு. க. ஸ்டாலினை சந்தித்தனர்..

கொரோனோ தொற்று உச்சத்தில் இருப்பதால் சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்.-ம் திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.. இதையெல்லாம் குறை சொல்ல முடியாது..

மறுநாள் (மே 3) பத்தாண்டு அதிமுக ஆட்சியில் பழி வங்கப்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஒருசிலர் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.. அவர்களைப் பற்றி யெல்லாம் எதிர்மறையான கருத்து எழாத போது, நேர்மையான ஐஏஎஸ் உயரதிகாரிகள் ஒரே ஒருவர் திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தற்கு எதிராக விமர்சனத்தை முன்னெடுத்து வருகின்றனர்.. ஏன்? என்ன காரணம்? என தெரிந்து கொள்ள கோட்டை பக்கம் (தலைமைச் செயலகம்) உலாவினோம்.. சூடான செய்திதான் கிடைத்தது..

விஜயகுமார் ஐஏஎஸ்..முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முதலமைச்சர் அலுவலகத்தில் முதன்மைச் செயலாளராக பணியாற்றி வந்தவர்.. தலைமைச் செயலாளர்-துறைச் செயலாளர்கள் என தமிழக அரசின் கட்டமைப்பு இருந்தாலும் 2001 அல்லது 2006 ஆகிய ஆண்டுகளில் தான் முதல்வருக்கு என்று ஒரு தனி அலுவலகம் செயல்பட தொடங்கியது. முதல்வருடன் இணைந்து 24 மணிநேரமும் செயலாற்றும் வகையில் ஐஏஎஸ் அந்தஸ்தில் நான்கு அல்லது 5 உயர் அதிகாரிகள் பணியாற்றினார்கள்..

முதல்வரின் விருப்பத்தின் பேரில் இவர்கள் குழுவாக பணியாற்றுவார்கள்.. முதல்வரின் உத்தரவுகளை செயல்படுத்துவது, மேற் பார்வையிடுவது, நிகழ்வுகளை ஒருங்கிணைப்பது போன்ற பணிகளை பிரித்து கொண்டு செயல்படுவார்கள்..

இப்படியொரு நிர்வாக குழு 2000 த்திற்கும் பிறகு தான் அறிமுகமானது.. தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் என்ற அடிப்படையில் அமைக்கப்பட்ட நிர்வாக முறையில் இந்த முதலமைச்சர் செயலக அதிகாரிகள் வரமாட்டார்கள்..

தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் ஆகிய அதிகாரிகளுக்கு வகுக்கப்பட்ட நெறிமுறைகள், சட்ட விதிகள் போன்றவை எதுவும் இந்த குழுவினருக்கு கிடையாது. புதிதாக பொறுப்பு ஏற்கும் முதலமைச்சர், தனது விருப்பத்திற்கு ஏற்ப அமைத்து கொள்ளும் கட்டமைப்பு இது..

அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சராக இருந்த காலத்தில் பணியாற்றி ய உயர் ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவர் தான் விஜயகுமார் ஐஏஎஸ்..தேர்தல் தோல்விக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமிக்கே தலைமைச் செயலகத்தில் வேலை இல்லை என்கிற போது முதலமைச்சர் அலுவலக செயலாளர் களுக்கும் எந்த வேலையும் கிடையாது.. தனிப்பட்ட துறை ரீதியாக எந்த முடிவெடுக்கும் அதிகாரமும் கிடையாது.. பொது மக்கள் வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் வெட்டி ஆபிசர்ஸ்..

புதிய ஆட்சி அமைந்து இவர்களுக்கு பொறுப்பு ஒதுக்கும் வரை இவர்கள் எந்த பணியையும் மேற்கொள்ள முடியாது. மேலும் நான்கு அல்லது 5 ஆண்டுகள் ஒரு முதல்வரின் நேரடிப் பார்வையில் பணிபுரிந்தவர்கள் மாற்றுக் கட்சியை சேர்ந்த தலைவர், முதல்வராக பதவியேற்கும் சூழல் ஏற்பட்டால் நாகரிகமாக ஒதுங்கி கொள்வார்கள்..

முதல் அமைச்சராக பதவியேற்கும் புதிய தலைவர் தனக்கு நம்பிக்கைக்குரிய,அனுபவமிக்க, விசுவாசமிக்க உயர் அதிகாரிகளைதான் அருகில் வைத்துக் கொள்வார்கள்.. அதுதான் கடந்த கால வரலாறு.

அந்த மரபை மீறி நேற்று வரை எடப்பாடி பழனிசாமியின் கூப்பிட்ட குரலுக்கு எல்லாம் ஓடிக் கொண்டிருந்த விஜயகுமார் ஐஏஎஸ், ஆட்சி மாறிய போதும் கொஞ்ச காலம் கூட ஒதுங்கி இருக்காமல் திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை சந்திக்க அதீத ஆர்வம் காட்டி முன் அனுமதி பெற்று நேற்று முன்தினம் திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.. இதுதான் இப்போது சர்ச்சை ஆகியிருக்கிறது..

இவரின் வருகையை அங்கிருந்த சில உயரதிகாரிகள் ரசிக்கவில்லை..அவருக்கு எதிராக முணுமுணுக்கவும் செய்துள்ளனர்.. அதை நம்மிடம் பகிர்ந்து கொண்ட கூடுதல் செயலாளர் அந்தஸ்திலான அதிகாரி ஒருவர், விஜயகுமார் ஐஏஎஸ், கடந்த நான்காண்டுகள் அதிமுக நிர்வாகியாகவே மாறி நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகளை எல்லாம் பணி மாற்றம் செய்து பழி வாங்கினார்.. முதலமைச்சர் வசம் இருந்த துறைகள் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் ஊழலும் முறைகேடும் தலைவிரித்தாடும் அளவுக்கு வழி ஏற்படுத்தி தந்தவர் இவர் தான்..

கடந்த நான்காண்டுகள் இவர் செய்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான ஆதாரங்களை எல்லாம் சேகரித்து வைத்திருக்கிறோம்.. முதல்வர் பொறுப்பை மு. க. ஸ்டாலின் ஏற்றவுடன் சரியான நேரம் பார்த்து ஒப்படைக்க திட்டமிட்டு இருக்கிறோம்.. அதில் இருந்து தப்பிக்கவும் புதிய அரசில் பசை உள்ள துறைக்கு செயலாளராகவும் வரவே இப்போதே துண்டை விரிக்க பார்க்கிறார், விஜயகுமார். அதற்கு வாய்ப்பே இல்லை என்று ஆவேசமாக பேசுகிறார்கள்..

விஜயகுமார் ஐஏஎஸ். ஸின் நலம் விரும்பிகள் கூட திமுக தலைவருடான சந்திப்பை ரசிக்கவில்லை.. இவ்வளவு அவசரமாக விஜயகுமார் சென்று சந்தித்து இருக்க கூடாது.. மரியாதை நிமித்தமாக சென்று சந்தித்தால் கூட பச்சோந்தி மாதிரி இருக்கிறார்கள் ஐஏஎஸ் அதிகாரிகள் என்ற அவப்பெயர் வந்துவிடும்.. எந்த ஆட்சியாக இருந்தாலும் நேர்மையும் திறமையும் உள்ள அதிகாரிகள் எந்த துறை ஒதுக்கப்பட்டாலும் வேலை பார்க்க போகிறார்கள்.. வாழ்நாள் முழுவதும் ஆட்சியாளர்களை அனுசரித்து சென்று செல்வாக்குள்ள பதவியில் தான் இருப்பேன் என்ற நோய் இருக்கவே கூடாது..

கடந்த பத்தாண்டுகளில் தலைமைச் செயலகத்தில் பவர்ஃபுல் துறையில் இருந்த எல்லா ஐஏஎஸ் அதிகாரிகளுமா, முதல்வராக பதவியேற்பதற்கு முன்பாக திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்து விட்டார்கள், இல்லையே.. விஜயகுமார் ஐஏஎஸ். ஸின் செயல் கண்ணியமற்றது..

அதுவும் கடந்த நான்காண்டுகளில் அரசியல் வாதிகளின் சட்ட விரோத செயல்களுக்கு துணை போக பிடிக்காமல் சகாயம் ஐஏஎஸ், சந்தோஷ் பாபு ஐஏஎஸ் ஆகிய இருவரும் கட்டாய பணி ஓய்வில் செல்லும் துரதிர்ஷ்டம் நேர்ந்தது..அவர்களின் விவகாரத்தில் விஜயகுமாரின் நடவடிக்கைகளும் நேர்மையாக இல்லையே? என்று நொந்து போய் பேசினார் சீனியர் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்…

அற்ற குளத்தின் அறுநீர் பறவையா , விஜயகுமார் ஐஏஎஸ்?