திமுக சட்டமன்றக் குழுத் தலைவராகத் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது.
ஆளும்கட்சியான அதிமுக.வுக்கும் பிரதான எதிர்க்கட்சியான திமுக.வுக்கும் இடையே கடும் போட்டி காணப்பட்டது
தேர்தல் முடிவுகள் கடந்த 2 ஆம் தேதி வெளியானபோது திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அமோக வெற்றிப் பெற்றதுடன் 150க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியது. கடந்த 20 ஆண்டுகாலத்தில் இல்லாத வகையில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.
கொளத்தூர் தொகுதியில் போட்யிட்ட திமுக தலைவர் ஸ்டாலின் 3 ஆம் முறை
வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை புரிந்தார்.
திமுக ஆட்சி அமைப்பதற்கான சூழல் உருவானதையடுத்து, திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று மாலை (மே 4 ) திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த (உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டவர்கள்) 153 பேர் கலந்துகொண்டனர். ஒருமனதாக திமுக கூட்டமன்றத் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து, நாளை மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சியமைக்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்உரிமை கோருகிறார் .
திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டட மு.க.ஸ்டாலினுக்கு, பொதுச் செயலாளர் துரைமுருகன், முன்னணித் தலைவர்கள் டி.ஆர். பாலு, ஐ.பெரியசாமி, கே.என்.நேரு உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்துகளை தெரிவித்தனர். முன்னதாக இன்று காலையில் இருந்து கூட்டணிக் கட்சித்தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்ததுடன் தங்கள் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டனர்.