Fri. Nov 22nd, 2024

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை எதிர்கொண்ட அதிமுக, அதிர்ச்சிகரமான தோல்வியை சந்தித்து இருக்கிறது. தோல்வி ஏற்படுத்தியுள்ள அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., உள்ளிட்ட பதவியை இழந்த அமைச்சர்கள்.

தேர்தலுக்கு முன்பு வெளியான கருததுக் கணிப்புகள், திமுக.விற்கும் அதன் கூட்டணிக்கும் சாதகமாக முடிவுகளை தெரிவித்த போதும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அச்சம் கொள்ளவில்லை. அதிமுக.தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று உறுதியான நம்பினார்கள். அந்தளவுக்கு ஆழமான நம்பிக்கை அதிமுக முன்னணி தலைவர்களிடம் இருந்ததால்தான், துணை ஒருங்கிணைப்பாளர்களான கே.பி.முனுசாமியும், வைத்திலிங்கமும், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர்.

ஓ.பன்னீர்செல்வம் வைத்துள்ள டிவிட்டர் முகப்பு பக்க போட்டோ….இ.பி.எஸ்.. தனது டிவிட்டர் முகப்பு பக்கத்தில் ஓ.பி.எஸ்., படத்தை வைக்கவில்லை.

மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும், தாங்கள் அமைச்சர்களாகிவிடலாம் என்ற கனவில்தான், இருவரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர். அவர்களின் நல்ல நேரம் இருவரும் வெற்றிப் பெற்றுவிட்டனர். தமிழகத்தின் துரதிர்ஷ்டம் இரண்டு தொகுதிகளும் விரைவாக இடைத்தேர்தலை சந்திக்கப் போகிறது.

அவர்களின் கனவுகளைவிட மேலான கனவுகளைக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர்கள், நேற்று மதியம் வரை கூட, அதிமுக எப்படியாவது ஆட்சி வந்துவிடும் என்ற நம்பிக்கையுடனேயே தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருந்தனர். ஆனால், நேற்று நண்பகலுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைவது உறுதியென திட்டவட்டமாக தெரிந்துவிட்டது. அதனால், முன்னாள் அமைச்சர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். அவர்களை தேற்றுவதற்கு முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர் அவர்களுடைய நலம் விரும்பிகள்.

அதுவும் தேர்தலில் தோல்வியை தழுவிய அதிமுக அமைச்சர்கள் பலர், துயரத்திலேயே மூழ்கி கிடப்பதாக கூறுகிறார்கள் அவர்களுக்கு நெருக்கமான அதிமுக நிர்வாகிகள். வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர்கள், மீண்டும் அதிமுக ஆட்சி அமையாமல் போனதையடுத்து கவலையோடு இருக்கிறார்கள். இப்படி இரண்டு மனநிலையில் உள்ள அமைச்சர்கள், ஆட்சிப் பறி போனதற்கும், தோல்வியை தழுவியதற்கும் அதிமுக.வின் இரட்டை தலைமைதான் காரணம் என கேள்வி எழுப்பப் போகிறார்கள் என்ற சிந்தனையோடு இருப்பதாக கூறுகிறார்கள் அவரவர் விசுவாசிகள்.

அதற்கு காரணமாக அவர்கள் முன்வைக்கும் அம்சம்தான் விசித்திரமாக இருக்கிறது. நேற்று காலை வரை அமைச்சர்களாக இருந்த அனைவரும், தங்களுடைய அதிகாரப்பூர்வமான குறுஞ்செய்தி பக்கத்தில் (டிவிட்டர்) வைத்திருந்த முகப்புப் படத்தில் ஒருபக்கம் மறைந்த முதல்வர்கள் செல்வி ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் புகைப்படங்களும், அதேபோல, வலது பக்கத்தில் இ..பி.எஸ்., ஓ.பி.எஸ்., ஆகியோரின் புகைப்படங்களையும் வைத்திருந்தனர்.

ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான சற்று நேரத்திற்கு எல்லாம், இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., ஆகியோரின் படங்களை அகற்றிவிட்டு, மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் படங்களை வைத்துள்ளனர்.

அதிமுக தோல்வியை வைத்து இரட்டை தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்குவதற்கான அறிகுறியா இது என்று கேள்வி கேட்கிறார்கள் அதிமுக உள்வட்டத்திற்குள் ஏற்பட்டிருக்கும் மனமாற்றத்தை அறிந்த அதிமுக முன்னணி நிர்வாகிகள்.

முன்னாள் முதல்வர் இ.பி.எஸ். தலைமையிலான நான்காண்டு ஆட்சிக்கு எதிராக மக்கள் மிகப்பெரிய கோபத்தில் இல்லை என்பதும், திமுக அமைத்த பலமான கூட்டணியும், பாஜக.வை தோளில் தூக்கி சுமந்ததும், கடைசி நேரத்தில் தேமுதிக.வை கழற்றிவிட்டதும் அதிமுக தோல்விக்கு காரணமாக அமைந்ததுவிட்டதாக இப்போது சூடான பேச்சு எழுந்துவிட்டது.

இதுஒருபுறம் இருக்க, வன்னியர் வாக்கு வங்கி வலுவாக உள்ள தொகுதிகளில் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், கே.சி.வீரமணி ஆகியோர் தோல்வியடைந்ததற்கு பல்வேறு காரணங்களை அவர்களது ஆதரவாளர்கள் ஆவேசமாக முன்வைதது பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மூன்ற பேருமே தங்களுடையே தோல்வியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதுபோல, அடாவடி பேர்வழியான கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரும், தங்கள் குறைகளை மறைத்துவிட்டு, இரட்டை தலைமைக்கு எதிராக நிச்சயம் கேள்வி எழுப்புவார்கள். அப்போதுதான் முதல் சிக்கலே உருவாகும். இவர்களின் நினைப்பு ஒருவிதமாக இருக்க, அதிமுக.வின் கோட்டையாக இருந்த பல தொகுதிகளிலும் தோல்வி ஏற்பட்டிருக்கிறது.

அதிமுக.விற்கு ஏற்பட்ட தோல்விக்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும்கூட, அதிமுக மீண்டும் எழுச்சியோடு நடைபோட இரட்டை தலைமை தேவையா, ஒற்றைத் தலைமை தேவையா என்பதை முடிவு செய்வதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை. வெகு விரைவாக தொடங்கப் போகிறது என்பதற்கு அறிகுறியாகதான் முன்னாள் அமைச்சர்களும், தோல்வியடைந்த அமைச்சர்களும் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., ஆகியோரின் படங்களை அகற்றிவிட்டு, டிவிட்டர் பக்கத்தின் முகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் படங்களை மட்டுமே வைத்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை என்று விரக்தியோடு பேசினார் அந்த அதிமுக முன்னணி நிர்வாகி…

என்னமோ நடக்குது…மர்மமா இருக்குது…