Fri. Nov 22nd, 2024

அதிமுக மீண்டும் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து, நேற்று முதல் இன்று பகல் வரை எடப்பாடி தொகுதியில் உள்ள தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையம் இல்லத்திலேயே தங்கியிருந்த முன்னாள் முதல்வர் பழனிசாமி, அங்கிருந்த நேரத்தில் அதிமுக முன்னணி நிர்வாகிகள் யாரையும் சந்திக்கவில்லை.

ஆனால், சேலம் மாவட்டத்தில் வெற்றிப் பெற்ற அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் தொடர் வேண்டுகோளை ஏற்று, நண்பகலில் சிலுவம்பாளையத்தில் இருந்து சேலத்தில் உள்ள தனது மற்றொரு இல்லத்திற்கு வந்தார் எடப்பாடி பழனிசாமி. பிற்பகலில் இருந்து சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்ற அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை சந்தித்தார்.

அவரிடம் ஆசிப் பெற்ற எம்.எல்.ஏ.க்கள், மகிழ்ச்சியுடன் திரும்பினர். அதிமுக எம்.எல்.ஏ மற்றும் அவர்களுடன் வந்திருந்த அதிமுக நிர்வாகிகளிடம் ஒன்றிரண்டு வார்த்தைகளை மட்டுமே பேசி வழியனுப்பி வைத்துள்ளார், எடப்பாடி பழனிசாமி.

இதேபோல, அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள், இன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி.களும் அவரை சந்தித்து பேசியுள்ளனர். அவர்களிடம், தேர்தல் முடிவுகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். கட்சி வளர்ச்சியிலும், பணிகளிலும் கவனமாக செயல்படுங்கள் என்று ஒன்றிரண்டு வார்த்தைகள் கூறி வழியனுப்பி வைத்துள்ளார்.

தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி உள்ளிட்ட முக்கியமானவர்களுடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டுவது பற்றியும், அந்தக் கூட்டத்தில், கே.ஏ.செங்கோட்டையனை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதால், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு உரிமை கோருவது நியாயமாக இருக்காது என்றும் அதே சமயம் அந்தப் பதவியை ஓ.பன்னீர்செல்வத்திற்கும் விட்டுக் கொடுக்க முடியாது. அதற்குப் பதிலாக, மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த கே.ஏ.செங்கோட்டையனை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு முன்னிறுத்துவோம் என்றும் மூவருக்கும் இடையே கருத்துப் பரிமாற்றம் நடந்துள்ளது.

இந்தக் கூட்டத்தில், எஸ்.பி.வேலுமணி கலந்துகொள்ளவில்லை என்று ஒரு தரப்பும் அதேநேரத்தில், மதுரையில் இருந்து சேலம் வந்திருந்த ராஜன் செல்லப்பா, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆசிப் பெற்றார். அவருடனும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக விவாதித்திருக்கலாம் என்றும் இ.பி.எஸ்., பி.தங்கமணி, கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த போது அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

முன்னதாக இன்று நண்பகல் வரை சிலுவம்பாளையத்திலேயே தங்கியிருந்த எடப்பாடி பழனிசாமியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட பி.தங்கமணி, கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட கொங்கு முன்னணி அதிமுக நிர்வாகிகள், அதிமுக நிர்வாகிகளை சந்திக்காமல் கிராமத்திலேயே முடங்கியிருந்தால், அதிமுக தோல்வி பற்றி பெரிதாக பேசப்படும்.

உங்கள் தலைமையில் (இ.பி.எஸ்) அதிமுக பெற்றுள்ள வெற்றி மகத்தானதுதான். அதனால் தேர்தல் முடிவுகளை கண்டு துவள வேண்டாம். இயல்பாக கட்சி நிர்வாகிகளையும் கூட்டணி நிர்வாகிகளையும் சந்தித்துப் பேசுங்கள். அப்போதுதான், தோல்வியை கண்டு அதிமுக தலைவர்கள் கலங்கி போய்விட வில்லை என்பது பொதுமக்களுக்கு தெரிய வரும் என்று ஆலோசனைகளை கூறியதாவும், அதன் பேரிலேயே சேலம் புறப்பட்டு வந்து நிர்வாகிகளை சந்திக்க இ.பி.எஸ். முன்வந்தார் என்றும் தகவல் தெரிவிக்கிறார்கள் முன்னாள் அமைச்சர்களின் ஆதரவாளர்கள்.

வரும் 7 ஆம் தேதி அதிமுக.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கே.ஏ.செங்கோட்டையனை எதிர்க்கட்சித் தலைவராக்க, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சம்மதிப்பாரா ? என்பதும், எடப்பாடி பழனிசாமி தரப்பு முன்வைக்கும் யோசனைகளுக்கு எல்லாம் வரும் காலங்களிலும் உடன்பட்டு செல்வாரா? என்பது குறித்தெல்லாம் 7 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் தெளிவாக தெரிந்து விடும் என்கிறார்கள் சேலம் அதிமுக முன்னணி நிர்வாகிகள்…

,