ஹிந்தி மொழியில் புகழ்பெற்ற காட்சி ஊடகம், ஆஜ் தக். அதன் ஊடக நெறியாளராக பணியாற்றி வந்தார் ரோகித் சர்தானா. டெல்லி ஊடகவியலாளர்களிடம் மட்டுமின்றி வட இந்தியா முழுவதும் புகழ்பெற்றிருந்தவர் அவர்.
2017 ஆம் ஆண்டில் இருந்து ஆஜ் தக் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த அவர், ஊடகவியலாளர்களுக்கான கணேஷ் வித்யார்த்தி புஷ்கர் விருதை பெற்றதுன் மூலம் இந்திய ஊடகங்களில் ரோகித் பிரபலமானார். ஆஜ் தக் தொலைக்காட்சியில் சேர்வதற்கு முன்பாக முன்பாக ஜீ நியூஸ் தொலைக்காட்சியிலும் பணியாற்றியுள்ளார்.

40 வயதான ரோகித், கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், இன்று காலை மாரடைப்பால் அவர் உயிரிழந்தார் என்ற தகவல் வெளியானவுடன், வட இந்தியாவில் உள்ள ஊடகவியலாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துப் போயினர்.
கொரோனோ தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலும், தனது டிவிட்டர் பக்கத்தில் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டுமாறு ரோகித் தனது நண்பர்களுக்கும் பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதுதான் அவரின் கடைசி பதிவாகும் .
செய்தி வாசிப்பது,விவாதங்களை நெறிப்படுத்துவதுதான் தனது பணி என்றும் இதைத் தவிர வேறு எந்த வேலையும் தனக்கு தெரியாது என்றும், மறுபிறவி என்று உண்டென்றால், அப்போதும் ஊடகவியலாளராகவே பிறக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் ரோகித் அடிக்கடி கூறிவந்ததாக அவருடன் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் கண்ணீர் மல்க நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளனர்.
ஜீ நியூஸ் மற்றும் ஆஜ் தக்கில் அவருடன் இணைந்து பணியாற்றிய ஊடகவியலாளர்கள் ஏராளமானோர், ரோகித் சர்தானாவுடனான நினைவுகளை டிவிட்டர்களில் பகிர்ந்து, ஆழ்ந்த துயரங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ரோகித் சர்தானாவின் மறைக்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் ரன்தீப் சிங், ஜாவீர் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்து, அவரவர் டிவிட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.