இந்தியாவின் தலைநகரான டெல்லியில், கொரோனோ தொற்று கட்டுக்குள் வராததால், நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 25 ஆயிரத்திற்கு மேலாகவே இருந்து வருகிறது.
நேற்று மட்டும் 24,149 பேர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் சிகிச்சைப பலனின்றி (நேற்று மட்டும்) 381 பேர் உயிரிழந்தனர். கொரோனோ 2 வது அலை தாக்கத் தொடங்கியதில் இருந்து நேற்று வரை 24 மணிநேரத்திற்குள்ளாக இவ்வளவு பேர் உயிரிழக்கவில்லை. சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்றுதான் அதிகமாக இருந்துள்ளது.
கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ள 98,264 பேர் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், புதிதாக தொற்று பாதிப்புக்கு ஆளாகி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க இடவசதி இல்லை. இதனால், நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் படும் துன்பத்தினை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்கிறார்கள் டெல்லி மருத்துவர்கள்.
போர்க்கால அடிப்படையில் மருத்துவ கட்டமைப்பை டெல்லி மாநில அரசு எடுத்து வந்தபோதும், ஆக்சிஜன் பற்றாக்குறை, அவசர சிகிச்சைப் பிரிவில் இடமின்மை, மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் டெல்லி மருத்துவர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக 1200 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சைப் பிரிவு வரும் 10 ம் தேதிக்குள் துவங்கிட அனைத்து வகையான பணிகளும் துரிதமாக நடந்து வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.