மதுரை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அருள்மிகு மீனாட்சியம்மன் கோவில்தான். பன்னாட்டு புகழ் பெற்ற இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா களைகட்டும். மதுரையில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கள்ளழகர் கோயிலில் இருந்து தனது சகோதரியான அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கல்யாண வைபவத்திற்காக ஆண்டுதோறும் சித்திரை மாதம் மதுரைக்கு ஊர்வலமாக புறப்பட்டு வருவார். இதனையொட்டி, ஒரு வாரம் மதுரை நகரமே திருவிழாக் கோலமாக காட்சியளிக்கும்.
அருள்மிகு மீனாட்சியம்மன் சுந்தரேஷ்வர் திருக்கல்யாணம், பட்டுடுத்தி அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை காண மதுரை மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மதுரையில் திரள்வார்கள். கடந்தாண்டு கொரோனோ தொற்று பரவல் தொடங்கியதையடுத்து மதுரை சித்திரை விழா முழுமையாக ரத்து செய்யப்பட்டது. நவம்பர், டிசம்பர், ஜனவரி மாத வாக்கில் கொரோனோ தொற்று குறைந்திருந்த நிலையில், சித்திரை விழா இந்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்படும் என பக்தர்கள் மிகுந்த ஆர்வமாக இருந்தனர்.
ஆனால், கடந்த பலநாட்களாக கொரோனோ பாதிப்பு அதிகமானதையடுத்து சித்திரை விழாவுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இதனையடுத்து, பக்தர்கள் அதிகம் இன்றி திருக்கல்யாண வைபவமும், அழகர் ஆற்றில் இறங்கும் விழாவும் நடைபெற்றது. புராண கால சிறப்பு மிக்க அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், செயற்கை ஆற்றை உருவாக்கி அதில் கள்ளழகர் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.