மன் கி பாத்’ நிகழ்வு மூலம் பிரதமர் மோடி, இன்று காலை வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை இதோ…
கொரோனா நமது பொறுமையையும், திறமையையம் வேதனையில் ஆழ்த்திய நேரத்தில் உங்களுடன் பேசுகிறேன். நமக்கு விருப்பமானவர்கள், நம்மை விட்டு சென்றுள்ளனர். முதல் அலையை நாம் கட்டுப்படுத்திய போது, நமது மாண்பு உலகளவில் அதிகரித்தது. ஆனால், இரண்டாவது அலை தேசத்தை அசைத்து பார்த்து உள்ளது. நமது சுகாதார பணியாளர்கள் மற்றும் டாக்டர்கள் கொரோனாவுக்கு எதிரான பெரிய போரை நடத்தி வருகின்றனர். கடந்த ஓராண்டாக, இந்த பெருந்தொற்று குறித்து மிகப்பெரிய அனுபவங்களை பெற்று உள்ளனர். நம்பிக்கையான தளங்கள் மூலம் கொரோனா தொடர்பான தகவலை சேகரிக்க வேண்டும் என மக்களை கேட்டு கொள்கிறேன். ஏராளமான டாக்டர்கள், கொரோனா குறித்த தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்வதுடன், ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள சிக்கலான சூழலில், நர்சுகளின் பணியும் மிக முக்கியமானது. சேவை உணர்வுடன் அவர்கள் பணியாற்றுகின்றனர். மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் மட்டும் அல்லாமல் தொழில்நுட்ப பணியாளர்கள், மருத்துவ ஆம்புலன்ஸ் ஓட்டுபவர் போன்றவர்களின் பணியும் முக்கியமானது. இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவது குறித்து நிபுணர்கள், மருந்து துறை, ஆக்சிஜன் உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட அனைவருடனும் நான் ஆலோசனை நடத்தி வருகிறேன்.
கொரோனா சூழ்நிலையை எதிர்கொள்ள மாநில அரசுகள் எடுத்துள்ள முயற்சிகளை, முன்னெடுத்து செல்ல மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தடுப்பூசி குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். மாநில அரசுகளுக்கு தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக அனுப்பி வைத்துள்ளது உங்கள் அனைவருக்கும் தெரியும். இதனால், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் பயன்பெற்றுள்ளனர். மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு கொள்ள முடியும்.
தங்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசி போட்டு வைத்து கொள்வதன் மூலம், இந்த முயற்சியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஈடுபட முடியும். மத்திய அரசின், இலவச தடுப்பூசி திட்டம் எதிர்காலத்திலும் தொடரும். இந்த இலவச தடுப்பூசி திட்ட பலன்கள், மக்களை சென்றடைவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மிகப்பெரிய பங்களிப்பை அளித்து உள்ளனர். அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு மோடி பேசினார்.