Sat. Nov 23rd, 2024
ஆக்ஸிஜன் விநியோகத்தை யாரேனும் தடைசெய்தால், "அந்த நபரை தூக்கிலிடுவோம்" என்று வழக்கத்திற்கு மாறான ஆவேசத்தை டெல்லி உயர்நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது. 

அதிதீவிரமான கொரோனோ தொற்றுக்கு ஆளான நபர்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்பது தொடர்பாக டெல்லியில் உள்ள பாத்ரா மருத்துவமனை உள்ளிட்ட  மருத்துவமனைகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 
அப்போது, டெல்லி மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 480 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காவிட்டால் டெல்லி மக்கள் மிகப்பெரிய அழிவை சந்திக்க நேரிடும் என்று தெரிவித்தார். 
நாள்தோறும் கொரோனோ தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பல மருத்துவமனைகளில் தொற்றாளர்களுக்கு விரைவாக சிகிச்சை அளிக்க முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள பெரிய மற்றும் சிறிய மருத்துவமனைனகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. 

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கோவிட் நோயாளிகள் மரணமடைந்துவிட்டதாகவும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. 

டெல்லியில் உள்ள மருத்தவமனைகளுக்கு 480 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்ஸிஜன்  கிடைக்கவில்லை என்றால், கற்பனை செய்ய முடியாத அளவுக்கு டெல்லி நிலைகுலைந்துவிடும். கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனைகளுக்கு கிடைத்த அனுபவத்தின் மூலம் இதை உணர்ந்து கொள்ள முடிகிறது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு நேற்று 297 மெட்ரிக் டன் மருத்துவ வாயுவை மட்டுமே பெற்றுள்ளது என்று நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

ஆக்ஸிஜன் ஒதுக்கீடு மற்றும் விநியோகம் தொடர்பான விரிவான அறிக்கையை மாநில அரசு  பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்றம், ஆக்ஸிஜன் வழங்குவதற்கு யார் தடையாக இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் தருமாறும், அப்படி யாராவது ஒருவர், ஆக்சிஜன் விநியோகத்திற்கு தடையாக இருந்தாலும் அவர்களை தூக்கிலிடுவோம் என்றும் ஆவேசத்தை வெளிப்படுத்தியது. 
. 
இதனிடையே, கொரோனாவின் கோரத்தாண்டவம் மிக மோசமாக இருக்கும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.

வரும் வாரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும் மக்களை அச்சப்படுத்துவதற்காக சொல்லவில்லை இதுதான் நிதர்சனம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. .