Fri. Nov 22nd, 2024

மே 2 ல் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடக்குமா., கொரோனோவைக் காரணம் காட்டி பாஜக ஏதாவது தில்லுமுல்லு செய்திடுமோ என்ற விவாதம், திமுக தலைமையில் சூட்டை கிளப்பிக் கொண்டிருக்கிறது. எதிர்முகாமான, அதிமுக தலைவர்களிடம் அமைதி நிலவுவதாக வெளியுலகில் காட்சிப்படுத்தப்பட்டாலும்,இரட்டையர்கள் அமைதியாக இல்லை. இருவருமே ஆபத்துக்குரியவர்கள்தான் என்று அச்சம் கொள்ளும் வகையில்தான், தேனியிலும், சிலுவம்பாளையத்திலும் ரகசிய ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் கசிகின்றன. அதைப் பற்றி அறிய விசாரணையில் குதித்த போது திரைமறைவில் நடந்து கொண்டிருக்கும் சதித்திட்டங்கள் பற்றி பகீர் தகவல்கள் கிடைத்தன.

120 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நிச்சயம் வெற்றிப் பெற்று ஆட்சியைப் பிடிப்போம் என்பதில் இந்த நிமிடம் வரை உறுதியாக இருக்கிறாராம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தன்னை வந்து சந்திக்கும் அமைச்சர்கள் நம்பிக்கையிழந்து பேசும் போதும் கூட, திடமான மனதோடு அவர்களுக்கு தைரியம் சொல்லிக் கொண்டிருக்கிறாராம் இ.பி.எஸ். அதுவும் மே 12 ஆம் தேதி தனது பிறந்தநாள். அன்றைய தினம்தான் முதல்வராக பதவியேற்பதும் உறுதி. உங்களுக்கும் அமைச்சரவையில் இடம் உண்டு என்று இபிஎஸ் கூறும் போதுகூட, அவரது முகத்தில் எந்த சந்தேக ரேகைகளையும் பார்க்க முடியவில்லையாம்.

தென் மாவட்ட அமைச்சர்கள் நீங்கலாக, எஞ்சிய பகுதிகளைச் சேர்ந்த அமைச்சர்கள், முதல்வரை அவரது ஊருக்கே சென்று சந்தித்து, தத்தம் மாவட்ட நிலவரங்கள் குறித்த தகவல்களை விரிவாக எடுத்துக் கூறி வருகிறார்களாம். கூடவே, வாக்குப்பதிவின் போதும், அதற்கு முந்தைய நாட்களிலும் கட்சிக்கு துரோகம் செய்து எதிரணிக்கு விலைப் போன நிர்வாகிகளின் பட்டியலையும் முதல்வரிம் ஒப்படைத்து வருகிறார்களாம்.

மே 2 ஆம் தேதி வரை பொறுமையாக இருங்கள். அதன் பிறகு துரோகிகளை களையெடுப்போம் என்று தைரியம் கொடுத்து வழியனுப்பி வைக்கிறாராம். இதேபோன்ற பிரச்னைகளை கொங்கு மண்டல அமைச்சர்களுக்கும் உள்ளதாம். அவர்களுக்கும் மே 2 ஆம் தேதி வரை அமைதியாக இருங்கள் என்ற பதில்தான் இ.பி.எஸ். தரப்பிடம் இருந்து வருகிறதாம்.

அதைவிட முக்கியமான விவகாரம் ஒன்றுதான் கடந்த இரண்டு நாட்களாக, இ.பி.எஸ்.ஸுக்கு நெருக்கமான கொங்கு அமைச்சர்கள் கதைத்துக் கொண்டிருக்கிறார்களாம். தப்பித்தவறி ஆட்சிக்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அதிமுக.வை சசிகலா கும்பல் கைப்பற்ற அனுமதித்து விடக்கூடாது.கொங்கு மண்டலமும், வடக்கு மண்டலமும் எப்படி ஒற்றுமையாக இருந்து, கடந்த 4 ஆண்டு கால ஆட்சியை நடத்தினோமோ அதைப் போலவே ஒற்றுமையாக இருந்து அதிமுக.வை காப்பாற்ற வேண்டும்.

தென் மாவட்டங்களில் அவர்களுக்கு (ஓ.பி.எஸ்., சசிகலா குரூப்) செல்வாக்கு இருப்பதாக சொன்னாலும்கூட அதைக் கண்டு நாம் பயந்துவிடக் கூடாது. தென் மாவட்டங்களில் மூன்று சமுதாய மக்கள்தான் பெரும்பான்மையாக உள்ளனர். அதில், இரண்டு சமுதாய மக்கள், இ.பி.எஸ். தலைமையை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார்கள். அதிமுக கட்சியே எங்கள் சமுதாயக் கட்சிதான் என்று சொல்லிக் கொள்ளும் அவர்களால், கொங்கு மண்டலம், வடக்கு மண்டலத்தின் ஆதரவு இன்றி ஒன்றும் செய்துவிட முடியாது.

அதிமுக எப்போதெல்லாம் அபார வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்திருக்கிறதோ, அத்தனை காலங்களிலும் கொங்கு மண்டலத்தில்தான் அதிக இடங்களில் அதிமுக வெற்றிப் பெற்று இருக்கிறது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில், அம்மா (செல்வி ஜெயலலிதா) தீவிர பிரசாரம் மேற்கொண்ட போது கூட, தென் மாவட்டங்களில் உள்ள 64 தொகுதிகளில் 23 இடங்களில்தான் அதிமுக வெற்றிப் பெற்றுள்ளது. அதுவும் ஓ.பி.எஸ்., மன்னார்குடி கும்பலைச் சேர்ந்த சமுதாய மக்கள் செல்வாக்குள்ள தொகுதிகளில் கூட முழுமையான வெற்றி அதிமுக.வுக்கு கிடைக்கவில்லை.

அதனால், எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே, அதிமுக என்றால் அது தேவர் கட்சிதான் என்று சொல்லி வந்த இமேஜ் எல்லாம் கடந்த 2016 தேர்தலிலேயே சுக்குநூறாக உடைந்து போய்விட்டது. இந்த தேர்தலில் அதிமுக தோற்றால், அதற்கு தென் மாவட்டங்களில் உள்ள இந்த 64 தொகுதிகள்தான் காரணமாக இருக்கும். தென் மாவட்டம் இல்லையென்றால் அதிமுக.வே இல்லை என்று அவர்கள் பீதியைக் கிளப்பி மே 2 ஆம் தேதிக்குப் பிறகு நமது கோட்டைக்கே வருவார்கள். அவர்கள் ஆடும் சதிராட்டத்திற்கு நமது பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் விலை போய்விடக் கூடாது.

தென் மாவட்ட அதிமுக பிரமுகர்களின் வலை வீச்சுக்கு முன்பாக, நமக்கு ஆதரவாக இருக்கும் சமுதாய மக்களை ஒருங்கிணைந்து, இனிமேல் அதிமுக என்றால், அது கொங்கு, வடக்கு மண்டலத்துக்குச் சொந்தமானது என்று நெஞ்சை நிமர்த்தி சொல்ல வேண்டும்.

விருதுநகர், ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பான்மையாக இருக்கும் இரண்டு சமுதாய மக்களின் துணையோடு, அதிமுக.வை இ.பி.எஸ் தொடர்ந்து வழிநடத்த, நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையோடு செயலாற்ற வேண்டும் என்று இ.பி.எஸ்.ஸுக்கு நெருக்கமான இரண்டு கொங்கு அமைச்சர்களும், வடக்கு மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள தேவர் அல்லாத இரண்டு சமுதாய நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தொடர்ந்து பேசி,பேசியே, அவர்களின் மனதை கரைத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

இனிமேல் அதிமுக. என்றால் அது இ.பி.எஸ். தலைமையிலான கட்சியாகதான் இருக்க வேண்டும் என்று முதல்வர் போட்டுக் கொடுத்த திட்டத்தின்படி, இரண்டு கொங்கு அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளிடம் தீவிரமான பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார்களாம். மீண்டும் ஒரு குடும்பத்தின் கையில் கட்சி சிக்கி, அடிமை வாழ்வு வாழ வேண்டிய நிலை வேண்டாம். அதனால் ஒற்றுமையாக இருப்போம் என்பதை பிரதானமாக வைத்தே, மூளைச் சலவை நடந்து கொண்டிருக்கிறதாம்.

இ.பி.எஸ்.ஸின் திட்டத்தை முன்கூட்டியே உணர்ந்து கொண்டுள்ள ஓ.பி.எஸ், தனது அரசியல் அனுபவத்தை வைத்து இ.பி.எஸ்.ஸுகே செக் வைக்கும் திட்டத்தோடு தயாராகவே இருக்கிறாராம். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வியூகம் எல்லாம் தன்னிடம் இல்லை என்று சாடை மாடையாக தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துக் கொண்டிருக்கிறாராம் ஓ.பி.எஸ்.

அரசியல் ஆட்டத்தில் தான்தான் கேப்டனாக இருப்பேன். துணை கேப்டன் என்ற பேச்செல்லாம் மே 2 க்குப் பிறகு எடுபடாது. அதிமுக நிர்வாகிகளிடமும், பொதுமக்களிடமும் தனக்குள்ள செல்வாக்கை நிரூபிக்க, அதிமுக எதிர்க்கட்சியாக உட்காரும் போதுதான் சாதகமான சூழலாக அமையும்.2016 ல் தவறவிட்ட வாய்ப்பை, 2021ல் விட்டுக் கொடுக்க மாட்டேன். அம்மா அடையாளம் காட்டி விட்டுச் சென்ற அரசியல் வாரிசு என்பதை நிரூபிக்க எந்தவிதமான போராட்டத்தையும் எதிர்கொள்ள தான் தயாராக இருப்பதாகவே முழங்கிக் கொண்டிருக்கிறாராம் ஓ.பி.எஸ்..

இரட்டை தலைவர்களின் குணாதிசயங்களை நெருங்கமாக அறிந்த முன்னணி நிர்வாகிகள் பலர், மே 2க்குப் பிறகு ஆட்சி கைகழுவிப் போனாலும் கூட , கட்சியைக் காப்பாற்றிக் கொள்ள நடக்கும் போராட்டங்கள், அதிமுக. தொண்டர்களை நிம்மதியிழக்கச் செய்யும் என்று மிகுந்த கவலையோடு பேசிக் கொள்கிறார்கள்.