Sun. Nov 24th, 2024

திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு சேலத்தில் திருநங்கைகள் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி திருநங்கைகள் தினத்தை உற்சாகமாக கொண்டாடினார்கள். அப்போது பேசிய திருநங்கை ஒருவர், சட்டமன்றம் உள்ளிட்ட எந்த தேர்தலின் வாக்குப்பதிவாக இருந்தால், முடிவுகள் அறிவிக்கப்படும் போது, ஆண் வாக்காளர்கள் மற்றும் பெண் வாக்காளர்களின் வாக்களித்த விவரங்களைத் தான் வெளியிடுகின்றனர். இதனால், தமிழகத்தில் உள்ள திருநங்கைகளின் மொத்த தொகை தெரிய வருவதில்லை. இதனால், திருநங்கைகளுக்கான நலத்திட்ட உதவிகளை நிறைவேற்றுவதில் அரசு அதிகாரிகளும் அலட்சியம் காட்டுகின்றனர். எனவே, ஆண், பெண் வாக்காளர்கள் என்று குறிப்பிடுவதைப் போல, திருநங்கைகள் என்று தனியாக வாக்களித்தவர்களின் விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், குடும்ப உறவுகளின் ஆதரவு இல்லாமல் தனித்து விடப்படும் திருநங்கைகள், சமுதாயத்தாலும் புறக்கணிக்கப்படுகிறார்கள். எனவே, திருநங்கைகளுக்கு உரிய அரசியல் அங்கீகாரம் கிடைத்தால்தான், இந்த புறக்கணிப்பால் ஏற்படும் அவமானத்தை துடைக்க முடியும். எனவே, வரும் உள்ளாட்சித் தேர்தலில் திருநங்கைகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு திருநங்கைகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.