Sun. Nov 24th, 2024

சென்னை மாநகர காவல்துறையினர், தங்களின் அன்றாட பணிகளுடன் கூடுதல் பணியாக கொரோனோ தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். சாலையோரம் காய்கறி உள்ளிட்ட சில்லறை விற்பனையாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், பயணிகள் உள்ளிட்ட மக்களை நேரில் சந்தித்து முககவசம் அணிதல், தனி மனித இடைவெளியை கடைப்பிடித்தல், கூட்டமாக சேராமல் தனித்து இருப்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு அறிவுரைகளை நாள்தோறும் எடுத்துக் கூறி, கொரோனோ தொற்று பரவுவதலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக, சென்னை வேப்பேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், வர்த்தக நிறுவன ஊழியர்கள் மற்றும் வர்த்தகர்களிடம் கொரோனா தொற்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வேப்பேரி காவல்துறை அதிகாரிகளின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

https://fb.watch/4U2pWWLJSh/

இந்தக் கூட்டத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கலந்துகொண்டு, கொரோனோ தடுப்பு நெறிமுறைகளை எடுத்து கூறி, கொரோனோ தொற்று பரவாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்து விரிவாக விளக்கினார். கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு முககவசம், அறிவுரைகள் அச்சடிக்கப்பட்ட பிரசுரம் உள்ளிட்டவற்றை வழங்கினார். இந்த நிகழ்வில் கூடுதல் காவல் ஆணையர் (தெற்கு) மருத்துவர். கண்ணன், இணை ஆணையர் கிழக்கு மண்டலம் பாலகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதனிடையே, சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையின் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மைலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய சரகங்களைச் சேர்ந்த போக்குவரத்து காவலர்களுக்கு கொரோனோ தடுப்பூசி செலுத்தும் முகாம் எழும்புரில் நடைபெற்றது. அங்குள்ள காவல்தறை மருத்துவமனையில் போக்குவரத்து காவலர்கள் அனைவரும் தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்த சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி, தடுப்பூசி செலுத்திக் கொண்ட காவலர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்ததுடன், கொரோனோ தொற்று பரவாமல் தடுப்பது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வழிமுறைகள் குறித்து காவலர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கினார்.