Wed. Apr 24th, 2024

கொரோனோ தொற்று 2 ஆம் அலை நாடு முழுவதும் பொதுமக்களிடம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசி திட்டத்தை முனைப்புடன் நடந்தி கொண்டிருக்கும் அதேவேளையில், கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான நிலை, சிகிசிச்சை பலனின்றி மரணமடைவர்களின் விவரங்கள் ஆகியவற்றில் உண்மைதன்மை இல்லை என்று நீதிமன்றங்களே கவலை தெரிவிக்கும் வகையில், சுகாதாரத்துறையின் நிர்வாகம் இருப்பது, மிகவும் ஆபத்தானது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

அதுவும் குஜராத் மாநிலத்தில் கொரோனோ தொற்றை கையாள்வதில், அம்மாநில அரசு கையாலகாத நிலையில் இருப்பதாக ஊடகங்கள் குற்றம் சாட்டுவதும் மிகவும் அவலமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அம்மாநிலத்தின் மிகப்பெரிய நகரமான அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனோ தொற்று பாதிப்பிற்காக அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடியாக சிகிச்சைக்கு அனுமதிக்காமல், அவசர ஊர்திகளிலேயே பல மணிநேரம் வைத்திருப்பதைக் கண்டு, அவர்களது உறவினர்கள் கொந்தளிக்கிறார்கள்.

இதுதொடர்பாக, ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு ஏற்ற அகமதாபாத் உயர்நீதிமன்றம், கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல், சாலைகளிலேயே அவரச ஊர்தியில் காத்திருக்க வைப்பது தொடர்பாக கவலை தெரிவித்ததுடன், இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு குஜராத் மாநில பாஜக அரசுக்கும், சுகாதாரத்துறைக்கும் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, அம்மாநிலத்தில் உள்ள மூத்த ஊடகவியலாளர், கொரோனோ தொற்று பாதிப்பு ஏற்படுத்தியுள்ள அவலம் குறித்தும், அதுதொடர்பான வீடியோவையும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பதை, மற்ற மாநிலங்களில் உள்ள ஊடகவியலாளர்கள் மொழிப் பெயர்த்து வெளியிட்டு வருவதைப் பார்த்து, பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கொரோனோ தொற்றுக்கு உரிய சிகிச்சை உடனடியாக கிடைக்காமல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், குவியல் குவியலாக சடலங்கள் எரியூட்டப்படுவதாகவும் அச்சமூட்டுகிறார்கள் அகமதாபாத் ஊடகவியலாளர்கள்…

குஜராத் மாநில கொரோனோ நிலைமை தொடர்பான மொழிப்பெயர்ப்பு பதிவு இதோ…

ஜராத்தின் துயரம் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு நிலைமைகளை வெளிப்படுத்துகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் மதக்கலவரங்கள் எனும் துயரம் எனில் இன்று கோவிட் 19 பெருந்தொற்றின் இரண்டாவது அலை மக்களை அலைக்கழித்து கொண்டுள்ளது.

சிறுபான்மை மக்களுக்கு எதிராக பெரும்பான்மை மத மக்களை தூண்டியவர்கள் இன்று அதே பெரும்பான்மை மக்களை காப்பாற்ற தவறியுள்ளனர். பொருளாதார ரீதியாக “அதிரும் குஜராத்தை” உருவாக்கியவர்கள் “மருத்துவப் பாதுகாப்பு குஜராத்தை”உருவாக்கத் தவறிவிட்டனர்.

பெரிய சிலைகளையும் விளையாட்டு களங்களையும் உருவாக்கி தனது பெயரையும் கூட்டு கொள்ளைக்காரர்களின் பெயரையும் சூட்டிக் கொண்டவர்கள் சிறந்த மருத்துவமனைகளை கட்ட தவறி விட்டனர்.

விளைவு?

குஜராத் மக்கள் பெரும் துயரத்தில் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

உயர் நீதிமன்றத்தின் கண்டனம்

உயர் நீதிமன்றம் “Suo moto” எனப்படும் தானாக முன்வந்து வழக்கை விசாரிக்கும் அளவுக்கு குஜராத்தில் பெருந்தொற்று மோசமான நிலைமையை அடைந்துள்ளது. ஆனால் பாஜக மாநில அரசாங்கமோ நிலைமையின் கடுமைத் தன்மையை உணர்ந்ததாக தெரியவில்லை.

பல உண்மை விவரங்களை மக்களிடமிருந்தும் நீதிமன்றத்திடமிருந்தும் மறைக்க முயல்கிறது. அரசாங்கத்தின் அட்வகேட் ஜெனரல் நீதிமன்றத்தில் முன்வைத்த வாதங்கள் மாநில அரசாங்கத்தின் அக்கறையின்மை மற்றும் திறமையின்மையை வெளிப்படுத்துகிறது.

“கோவிட் பரிசோதனை முடிவு வருவதற்கு ஏன் 3 முதல் 5 நாட்கள் ஆகின்றன?” எனும் நீதிமன்றத்தின் கேள்விக்கு அதிக மாதிரிகள் பரிசோதனைக்கு வருவதாகவும் அதனால் தாமதம் எனவும் கூறுகிறார் அட்வகேட் ஜெனரல்!

ஆனால், நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை.

தொற்று குறைவாக இருந்த காலத்திலேயே ஏன் பரிசோதனை மையங்களை அதிகப்படுத்தவில்லை? இரண்டாவது அலை சாத்தியம் உண்டு எனும் எச்சரிக்கைகளை நீங்கள் உள்வாங்கவில்லையா என நீதிபதிகளின் கேள்விக்கு அரசிடம் பதில் இல்லை!

கோவிட் நோயாளிகளுக்கான படுக்கைகளின் எண்ணிக்கை ஏன் குறைவாக உள்ளது? எனும் கேள்விக்கு மக்கள் சில மருத்துவமனைகளை மட்டுமே அணுகுகிறார்கள் எனவும் போதுமான படுக்கைகள் உள்ளன எனவும் அரசு வழக்கறிஞர் கூறினார்.

ஆனால், நீதிபதிகள் அதனை ஏற்கவில்லை.

போதுமான படுக்கைகள் உள்ளன எனில் ஏன் நீண்ட வரிசைகளில் ஆம்புலன்ஸ்கள் அணிவகுத்து நிற்கின்றன? என நீதிபதிகள் எதிர் கேள்வி கேட்டனர்

.“நீங்கள் எல்லாமே நன்றாக உள்ளன என கூறுகிறீர்கள்! ஆனால் எங்களிடம் உள்ள விவரங்கள் நேர்மாறான செய்திகளை வெளிப்படுத்துகின்றன” என நீதிபதிகள் கூறினர்.

அடுத்து அவர்கள் கூறியது தான் குஜராத் பாஜக அரசாங்கத்தின் மீதான மிகப்பெரிய கண்டனம் ஆகும்.

“மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை இழந்து விட்டனர். கடவுளின் கருணை தான் தங்களை காப்பாற்ற இயலும் எனும் நிலையில் மக்கள் உள்ளனர். ”இதைவிட பெரிய கண்டனம் ஏதாவது இருக்க முடியுமா”?

நீதிமன்றத்தின் கண்டனங்கள் கோபத்தில் எழுந்தவை அல்ல!

குஜராத்தின் உண்மை நிலைமை அதுதான்!

வழக்கம் போல இந்த செய்திகளை கட்டுப்படுத்த குஜராத் அரசாங்கம் முயல்கிறது; ஜால்ரா போடும் ஊடகங்களும் ஒத்துழைக்கின்றன. ஏனெனில் பிரதமர் ஆண்ட மாநிலம் அல்லவா!

குஜராத் மக்களின் அவலங்கள்

குஜராத் மக்கள் படும் துன்பங்கள் குறித்து பத்திரிக்கையாளர் தீபல் திரிவேதி கீழ்கண்டவாறு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்:

“குஜராத் மக்கள் படுக்கைகளுக்கும்/ஆக்சிஜனுக்கும்/ரெம்டெஸ்வீர் மருந்துக்கும் கெஞ்சிக் கொண்டுள்ளனர்.

உலகிலேயே மிகப்பெரிய மைதானங்களும் சிலைகளும் நமக்கு தேவை இல்லை. நமது அடிப்படை உரிமையான மருத்துவ சிகிச்சையே நமக்கு தேவை!

இப்பொழுதெல்லாம் குஜராத்தில் “அதிர்வதற்கு” எதுவுமே இல்லை.”

அவர் சில வார்த்தைகளை சேர்த்து இருக்கலாம்!

“குஜராத்தில் அதிர்வதற்கு எதுவுமே இல்லை, மக்களின் ஓலமும் மரணங்களும் தவிர!”

இன்னொரு டுவிட்டர் பதிவில் தீபல் திரிவேதி கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்: “எனது மாநிலம் குஜராத் பற்றி எனக்கு எப்பொழுதுமே பெருமை உண்டு. ஆனால், நான் இப்பொழுது என்ன நினைக்கிறேன் என்றால், குஜராத்தில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் கட்டியதற்கு பதிலாக அல்லது ஒற்றுமை சிலைக்கு செலவழித்ததற்கு பதிலாக, அரசு மருத்துவமனைகளை கட்டியிருக்கலாம்!

பவ நகரில் உள்ள மாநிலத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் உள்ள நிலையை பாருங்கள். குஜராத் மாடல் என்பது
பெருமைபடக்கூடிய ஒன்று அல்ல!”

குஜராத் மாடல் என்பது மக்களுக்கானது அல்ல!

அது அதானி/அம்பானிகளுக்கானது என்பதை இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் பல ஆண்டுகளாக தொடர்ந்து கூறி வருகின்றனர். குஜராத் மக்கள் இப்பொழுதாவது அதனை உணர்ந்தால் அவர்களுக்கும் தேசத்துக்கும் நல்லது தான்!

குஜராத் நிலைமை குறித்து சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

குஜராத்தின் பெருந்தொற்று உண்மை நிலைமை மகாராஷ்டிரா அளவுக்கு மோசமாக உள்ளது. ஒவ்வொரு இரண்டாவது வீட்டிலும் கோவிட் நோயாளி உள்ளார். மக்களிடம் உண்மை நிலவரங்களை தெரிவித்து அவர்களை காப்பாற்றுவதற்கு பதிலாக அரசாங்கம் உண்மைகளை மறைப்பதற்கே முயல்கிறது

”மருத்துவமனைகள் முன்பு நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளுடன் அணிவகுத்து நிற்கின்றன. மருத்துவமனைகளில் தரையில் நோயாளிகள் படுக்க வைக்கப்பட்டுள்ளனர்.

சில இடங்களில் மருத்துவமனையின் வெளியே நோயாளிகள் ஆக்சிஜன் சிலிண்டருடன் உள்ள கொடூரமான நிலைகளும் புகைப்படங்கள் வழியாக வெளியிடப்பட்டுள்ளன. இந்திரா பானர்ஜி எனும் ஒரு பேராசிரியை_ இவர் குஜராத் மத்திய பல்கலைக்கழகத்தில் ‘நானோ அறிவியல்” பிரிவின் தலைவர் மற்றும் மிகப்பெரிய ஆராய்ச்சியாளர். பல வெளிநாட்டு பல்கலைக் கழகங்களின் கவுரவ விரிவுரையாளர்.

அவருக்கு தொற்று நுரையீரலை பாதித்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஆம்புலன்சில் அவரை ஒவ்வொரு மருத்துவமனையாக கொண்டு சென்றனர். எங்குமே வென்ட்டிலேட்டர் கிடைக்கவில்லை.

இறுதியில் ஒரு மருத்துவமனையில் அடுத்த ஒரு மணி நேரத்தில் வென்ட்டிலேட்டர் கிடைக்கும் என கூறியதால் வெளியே ஆம்புலன்சில் காத்து கொண்டிருந்தார்.
வென்ட்டிலேட்டர் தயாராக உள்ளது என தகவல் வந்தது.

அவரை மருத்துவமனைக்குள் கொண்டு செல்வதற்காக ஆம்புலன்சை திறந்து பார்த்த பொழுது அவர் உயிர் பிரிந்திருந்தது. இப்படி உயிரிழந்தவர்கள் ஏராளம்!

ரெம்டெசிவீர் எனும் மருந்து குஜராத்தில் கடும் தட்டுப்பாடில் உள்ளது. இந்த மருந்து உண்மையிலேயே கோவிட் பெருந்தொற்றை குணப்படுத்துகிறதா என்பதில் இரண்டு கருத்துகள் உள்ளன.

எனினும் மக்கள் இந்த மருந்தை நம்புகின்றனர்.

சுமார் ரூ.2000 விலை உள்ள இந்த மருந்து குஜராத் கள்ளச் சந்தையில் ரூ.25,000 முதல்ரூ.40,000 வரை விற்கப்படுகிறது.

இந்த நிலையில் குஜராத் பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் 5000 மருந்துகளை பாஜக அலுவலகத்தில் வைத்துக் கொண்டு தனக்கு வேண்டியவர்களுக்கு விற்றுக் கொண்டுள்ளார்.

இந்த மருந்தை மருந்து கடைகளில் மட்டுமே அதுவும் மருத்துவர்களின் சீட்டு இல்லாமல் விற்கக் கூடாது என்பது விதிமுறை! ஆனால், பாஜக என்றைக்கு சட்டம் பற்றியோ அல்லது விதிமுறைகள் பற்றியோ கவலைப்பட்டுள்ளது?

ஓயாமல் எரியும் சுடுகாடுகள்!

திருச்சியில் காவிரிக்கரையில் உள்ள ஒரு சுடுகாடுக்கு ஓயாமாரி சுடுகாடு என பெயர்! ஏனெனில் பிணங்கள் இங்கு ஓயாமல் எரியூட்டப்படுவதால் இந்த பெயர் என கூறப்படுவது உண்டு!

குஜராத்தில் பல சுடுகாடுகள் இன்று 24 மணிநேரமும் ஓயாமாரி சுடுகாடுகளாக செயல்படுகின்றன. அது மட்டுமல்ல! ஒரு நாளைக்கும் மேலாக உயிரற்ற உடலுடன் காத்திருக்கும் உறவினர்கள் பொறுமை இழந்து பொதுவெளியில் எரியூட்டுகின்றனர் எனும் அதிர்ச்சியான செய்திகளும் பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளன.

நோயாளி இறந்த பின்னரும் 8 முதல் 24 மணிநேரம் வரை உடல்கள் தரப்படுவதில்லை என உறவினர்கள் புகார் கூறுகின்றனர்.

ஒரு காணொளியில் தனது உறவினரின் உடல் மூன்று நாட்களாக தரப்படவில்லை என ஒருவர் கதறுகிறார். உடல் கிடைத்த பின்னர் எரியூட்டுவதற்கு மேலும் பல மணிநேரம் காத்து கிடக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

சூரத் நகரில் மூன்று மின் தகனங்கள் உள்ளன. ஒரு நாளைக்கு 100 உடல்கள் இங்கு எரியூட்டப்படுகின்றன. கோவிட் மரணம் எது? ஏனைய மரணம் எது? என வகைப்படுத்த நேரம் இல்லை என சுடுகாடு ஊழியர்கள் கூறுகின்றனர்.

ஒரு சுடுகாட்டில் தொடர் செயல்பாடுகள் காரணமாக சிம்னி எனப்படும் புகைபோக்கி பாதிக்கப்பட்டு, வேறு ஒன்றைஅவசரமாக நிர்மாணித்ததாக நகராட்சி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இன்னொரு தகனத்தில் எரியூட்டும் அடுப்பில் உள்ள இரும்பு பாளங்கள் தொடர் எரியூட்டல் காரணமாக உருகிவிட்டன எனவும் எனவே, செயல்படாமல் உள்ளன எனவும் ஊழியர்கள் கூறியதாக ‘இந்தியா டுடே’ பத்திரிக்கை தெரிவிக்கிறது.

இதே நிலைமை தான் அகமதாபாத் நகரிலும் உள்ளன.

ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான உடல்கள் எரியூட்டப்படுகின்றன. ஆனால் குஜராத் பாஜக அரசாங்கமோ 40 முதல் 50 வரை தான் உயிரிழப்புகள் என கணக்கு சொல்கிறது.

ஜிக்னேஷ் மேவானியின் குற்றச்சாட்டு உண்மை என்பது புலனாகிறது.

குஜராத் மாடல் பொருளாதார வளர்ச்சி
என்பது முற்றிலும் கார்ப்பரேட் நலனை மட்டுமே அடிப்படையாக கொண்டது. அதிலும் குறிப்பாக அம்பானி/அதானி/கர்ஷன் பாய் பட்டேல் (நிர்மா குழுமம்)/பங்கஜ் பட்டேல் (சன் ஃபார்மா) ஆகிய விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரின் பகற் கொள்ளைக்கு வழிவகுத்தது தான் குஜராத் மாடல்!

இவர்களில் பலர் குஜராத் கலவரங்களில் மோடிக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்கள்! சிலர் வாய் மூடி மவுனிகளாக இருந்தவர்கள். இந்த குஜராத் மாடலில் மக்கள் நலன் சார்ந்த எந்த சமூக முன்னேற்றமும் நிகழவில்லை.

அதில் முக்கியமான கொடூரம் என்பது மருத்துவ கட்டமைப்புகள் என்பது அறவே புறக்கணிக்கப்பட்டன.

கோவிட் 19 முதல் அலை இதனை அம்பலப்படுத்தியது. இப்பொழுது இரண்டாவது அலை இன்னும் கூர்மையாக இதனை அம்பலப்படுத்தியுள்ளது.

மாநில மற்றும் மத்திய பாஜக அரசாங்கங்கள் வேகமாக செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வராவிட்டால், குஜராத் மக்கள் மிகப்பெரிய துயரங்களை சந்திக்கும் அவலம் உருவாகும் ஆபத்து உள்ளது.

கட்டுரையாளர்:
அ.அன்வர் உசேன்
தீக்கதிர்