சேலத்தில் உள்ள இல்லம் மற்றும் எடப்பாடியில் உள்ள சொந்த கிராமத்தில் ஆலோசனை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக பிஸியாக இருந்து வருகிறார். அமைச்சர்கள், அதிமுக முன்னணி நிர்வாகிகளுடன் தொடர்ந்து நடைபெற்று வரும் ஆலோசனைகளின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக மீண்டும் ஆட்சி அமைப்பதிலும், தான் முதல்வர் பதவியேற்பதிலும் எந்த மாற்றமும் இருக்காது என்று திடமான மனநிலையிலேயே பேசி வருகிறார்.
எடப்பாடி பழனிசாமியை நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் தொடர்ந்து கலந்துரையாடி வருவதில், கொங்கு மண்டலம் மற்றும் வடக்கு மண்டலங்களைச் சேர்ந்த அமைச்சர்களும், அதிமுக முன்னணி நிர்வாகிகளும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தென் மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்களோ, அதிமுக முன்னணி நிர்வாகிகளோ முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, சேலத்திற்கே சென்று நேரில் சந்திக்கவே ஆர்வம் காட்டவில்லை என்ற தகவல் கசிய விடப்படுகிறது. சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் மட்டுமே சேலம் சென்று முதல்வரைச் சந்தித்து பேசிவிட்டு திரும்பியுள்ளார்.
இப்படி சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வரும்நிலையில், துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மட்டும் அமைதியாக இருக்கிறாரே என்று கேள்வி அதிமுக முன்னணி தலைவர்கள் மத்தியிலேயே எழுந்து இருக்கிறது. அப்படிபட்ட சிந்தனையோட்டத்தோடு உள்ள அதிமுக முன்னணி தலைவர்களில் ஒருவரைத் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர் கூறியதுதான் அதிர்ச்சி ரகம்.
தென் மாவட்ட அமைச்சர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகளுடன் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். வெளிப்படையான சந்திப்புகளை தவிர்த்துவிட்டு ரகசியமான சில சந்திப்புகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தென்மாவட்ட மூத்த நிர்வாகிகளும், ஓ.பி.எஸ்.ஸுடன்தான் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் மிகவும் நெருக்கமான, விசுவாசமான அதிமுக நிர்வாகி ஒரு சிலரிடம் மனம் விட்டு பேசியிருக்கிறார் ஓ.பி.எஸ். அப்போதுதான் தனது ஆழ்மனதில் உள்ள ஆதங்கங்களை அவர் கொட்டியிருக்கிறாவெளிப்படுத்தியிருக்கிறார்.
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க வேண்டும் என்று எல்லோரும் வற்புறுத்தினார்கள். அதில் எனக்கு மனதளவில் உடன்பாடில்லை. இருந்தாலும் தலைமையில் உள்ள இருவரிடையே கருத்து வேறுபாடு என்றால் அது தேர்தலில் எதிரொலிக்கும் என்பதாலும், கட்சியின் நலன் கருதியும், அதிமுக.வின் வெற்றியைக் கருத்தில் கொண்டும் மனதை தேற்றிக் கொண்டு எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தேன்.
இதுபோல, முக்கியமான பல விவகாரங்களில் நான் இறங்கி வந்த போதும் எடப்பாடி பழனிசாமி பல்வேறு இக்கட்டான சூழல்களில்கூட சமரசத்திற்கே வரவில்லை. சசிகலாவை சேர்த்துக் கொள்ளலாம். கட்சியில் பதவி கொடுக்க வேண்டாம் என்று ஆலோசனை கூறினேன். அதற்கு மதிப்பில்லை. அமமுக.வை அதிமுகவோடு கூட்டணி அமைக்காமல், பாஜக.வோடு கூட்டணி அமைக்க அனுமதித்து, பாஜக.வுக்கு கூடுதலாக தொகுதிகளை ஒதுக்கி, பாஜக.வுடன் அமமுக கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு உடன்படலாம் என்று தெரிவித்தேன். அதையும் ஏற்க மறுத்தார் எடப்பாடி பழனிசாமி.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக.வோடு கூட்டணியில் இருந்த தேமுதிக.வுக்கு, 15 தொகுதிகள் ஒதுக்கியிருந்தால், அவர்கள் கூட்டணியிலேயே நீடித்திருப்பார்கள். அதையும் உதாசீனப்படுத்தினார் எடப்பாடி பழனிசாமி..
கட்சி நலன் பற்றி யார் எந்த ஆலோசனை சொன்னாலும் அதில் உள்ள பாதகம், சாதகம் போன்றவற்றை நான் மட்டுமே பரிசீலத்து, முடிவை எடுத்து சொல்கிறேன். ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள மிகப்பெரிய பலவீனம், அவரால் தனித்து முடிவு எடுக்க முடியவில்லை. அவரை நிறைய பேர் இயக்குகிறார்கள். அதனால், இப்போது நான் ஒரு தீர்மானத்திற்கு வந்திருக்கிறேன்.
ஆட்சியில் நீண்ட காலமாக பணியில் நீடித்து வரும் அனுபவமிக்க ஐஏஎஸ்., ஐபிஎஸ் அதிகாரிகளிடம் இருந்து எனக்கு நிறைய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. பெரும்பான்மையானோர் திமுக.தான் ஆட்சி அமைக்கும் என்கிறார்கள். அதிமுக 50 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப் பெறுவது கடினம் என்கிறார்கள்.
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தோம். ஆனால், நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்குமா என்பது இந்த நிமிம் வரை சந்தேகமாக இருக்கிறது. தேர்தலுக்கு முன்பு வெளியான கருத்துக் கணிப்புகள் எல்லாம் திமுக.வுக்கு சாதமாகவே வந்தன. ஆனால், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கு தேர்தல்களுக்கு முன்பாக பல நூறு கோடி ருபாய் பணத்தை அரசு கஜானாவில் இருந்து வாரி இறைத்தார் இ.பி.எஸ். அப்போதும் கூட, ஊடகங்கள் அதிமுக.வுக்கு சாதமாக கருத்துக் கணிப்புகளை வெளியிடவில்லை. அரசு கொடுத்த விளம்பரங்கள் மக்களிடம் சென்று சேர்த்ததைவிட, ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள்தான் அதிமாக மக்களின் மனதை மாற்றியுள்ளது என்று எனக்கு தகவல் கிடைத்துள்ளது.
நம்முடைய எதிர்பார்ப்புக்கு மாறாக தேர்தல் முடிவுகள் வந்தால், எதிர்க்கட்சி வரிசையில்தான் அதிமுக அமரும் சூழ்நிலை உருவாகும். அப்படி ஒரு நிலை உருவானால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி எனக்குதான் வழங்க வேண்டும். அதிலும், எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டால், நான் என்ன முடிவு எடுப்பேன் என்று எனக்கே தெரியாது.
மே 2 க்குப் பிறகு அதிமுக பிளவு படாமல் இருக்க வேண்டும் என்றால் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எனக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். இந்த விஷயத்திலும் கொங்கு மண்டல பிரமுகர்கள் ஏதாவது குழப்பம் விளைவித்தால், மீண்டும் ஒரு தர்மயுத்த போராட்டம்தான் வெடிக்கும். அதற்கு தென்மாவட்ட அதிமுக நிர்வாகிகள் எல்லாம் தயாராக இருக்க வேண்டும் என மனதில் உள்ளதை எல்லாம் அப்படியே கொட்டியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
ஓ.பன்னீர்செல்வத்திடம் காணப்படும் மாற்றத்தை கருத்தில்கொண்டுதான், தென் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் நெருங்காமல் இருக்கிறார்கள். மே 2 ஆம் தேதிக்குப் பிறகு அதிமுக.வுக்குள் அதிரடி காட்சிகள் நிறைய அரங்கேறும். அது அதிமுக.வுக்கு நல்லதா, கெட்டதா என்று இப்போது சொல்ல முடியவில்லை என்று உற்சாகமின்றி பேசி முடித்தார் அந்த தென்மாவட்ட அதிமுக நிர்வாகி….
பணிவுக்குப் பெயர் பெற்றவர், எரிமலையாக வெடிப்பாரா? மே 2 வரை பொறுத்திருக்க வேண்டும்….
All news 100% correct
ADMK +AMMK Is > DMK
[…] எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஓ.பன்… […]