Sat. May 4th, 2024

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில் 6 அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை என்ற தகவலே, தாமதமாகத்தான் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கருக்கு தெரியவந்திருக்கிறது. விராலிமலை காப்பாற்றுமா, புடுங்கிக் கொள்ளுமா என்ற பயத்தில் இருந்து வரும் விஜயபாஸ்கருக்கு, முதல்வர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார் என்ற தகவலும் பீதியை ஏற்படுத்த நேற்று அதிகாலை விராலிமலையில் இருந்து சேலத்திற்கு வேக, வேகமாக புறப்பட்டிருக்கிறார்.

நாமக்கல் நகரை எட்டும் முன்பே, முதல்வர் எங்கிருக்கிறார் என்று விஜயபாஸ்கர் விசாரிக்க, சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில்தான் முதல்வர் இருக்கிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சேலம் மாவட்ட எல்லைக்குள் நுழைந்து காக்காபாளையம் செல்வதற்கு முன்பாக, முதல்வரின் இருப்பிடத்தை உறுதிப்படுத்திக் கொள்ள டாக்டர் விஜயபாஸ்கர் மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொள்ள, முதல்வர் தனது சொந்த கிராமத்தில் இருந்து சேலத்தில் உள்ள இல்லத்திற்கு கிளம்பிவிட்டார் என தகவல் தெரிவிக்கப்பட உடனடியாக சேலம் செல்லும் சாலையில் வாகனத்தை திருப்பி, சேலம் சூரமங்கலம் அருகே உள்ள முதல்வர் இல்லத்திற்குச் சென்றுள்ளார் டாக்டர் விஜயபாஸ்கர்.

உடனடியாக முதல்வரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. கொஞ்ச நேரம் காத்திருந்தே, எடப்பாடி பழனிசாமியை சந்தித்திருக்கிறார் டாக்டர் விஜயபாஸ்கர். முகத்தை இறுக்கமாக வைத்திருந்த முதல்வர், எடுத்த எடுப்பிலேயே, அமைச்சராக இருந்திருக்கிறீர்கள். தொகுதியில் எப்படி வாக்கு சேகரிப்பது என்றே உங்களுக்கு தெரியவில்லையே.. உங்கள் அப்பாவிதனமான நாடகத்தை பார்த்து அம்மாதான் ஏமாந்துவிட்டார்கள். மக்களும் ஏமாறுவார்கள் என்று நினைத்து விட்டீர்களா.

உங்களைத் தவிர வேறு எந்த அமைச்சராவது அழுதுவடிந்து வாக்கு கேட்டிருக்கிறார்களா…என்னை வெற்றி பெற செய்துவிடக் கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எனது தொகுதியான எடப்பாடியில் நடந்து சென்றே வாக்கு சேகரித்து எனக்கு பயத்தை ஏற்படுத்துவதாக நினைத்து செயல்பட்டார். அவரின் பிரசாரத்தை பார்த்து சிறிதளவு கூட பயப்படவில்லை நான்.

தொகுதி மக்கள் மீது முழுமையாக நம்பிக்கை வைத்திருக்கிறேன். ஒவ்வொரு பகுதியாக மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டு நிறைவேற்றி வைத்திருக்கிறேன். அதேமாதிரி உனது தொகுதியிலும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைத்து இருந்ததால், எதற்கு பயப்பட வேண்டும். செல்வாக்கு மிக்க இரண்டு துறைகள் என்னிடம் இருக்கிறது. அதற்கு ஒதுக்கப்படும் நிதியை விட கூடுதலாக உனது துறைக்கு ஒவ்வொரு வருடமும் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், மத்திய அரசிடமிருந்தும் நேரடியாக உனது துறைக்கு நிதி பெருமளவில் வந்து கொண்டிருக்கிறது.

எனக்கு இணையாகவே, இன்னும் சொல்லப் போனால் என்னை விடவே கடந்த 4 ஆண்டுகளில் உனது பொருளாதாரம் உயர்ந்து இருக்கிறது. இவ்வளவு பணம் இருந்தும், தொகுதி மக்களின் நன்மதிப்பை உன்னால் பெற முடியவில்லை என்றால் தவறு யார் பக்கம்? தேர்தல் நெருங்கும் போது பணத்தை கோடி கோடியாக கொட்டினால், மக்களுக்கு நம் மீது பாசம் வருமா? பிரசாரத்தில் எவ்வளவு வேஷம் போட்டாய்? பெண் பிள்ளைகளையா பிரசாரத்திற்கு கூட்டிச் செல்வது? உன்னுடைய பிரசாரம் மூலமே நீ எவ்வளவு பயந்து போய் இருக்கிறாய்? என்பதை எதிர்க்கட்சியினருக்கு, பொதுமக்களுக்கு காட்டிக் கொடுத்துவிட்டாய்?

விராலிமலை தொகுதியைப் பொறுத்தவரை எனக்கு கிடைத்துள்ள தகவலை வைத்துப் பார்த்தால், உனது வெற்றி சந்தேகம்தான். தேர்தலில் வெற்றிப் பெற்றால் நீ தப்பித்துக் கொள்வாய். தப்பித்தவறி தோல்வியடைந்துவிட்டால், உன் மீதான வழக்குகள் உனக்கு தலைவலியை ஏற்படுத்தும். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி. நான் முதல்வராக இருந்தாலும் கூட, எதிர்க்கட்சியினர் உனக்கு எதிராக போடும் வழக்குகள், மத்திய அரசு மேற்கொள்ளும் சட்டநடவடிக்கைகளில் இருந்து எல்லாம் உன்னை என்னால் காப்பாற்ற முடியுமா என்று தெரியாது.

மே 2 க்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறது. அதற்கு முன்பாக உன்னை காப்பாற்றிக் கொள்ள என்னவெல்லாம் செய்ய முடியுமா, அதையெல்லாம் செய்து கொள் என்று முதல்வர் அறிவுரை கூறுவதைப் போல பேசினாராம்.

முதல்வரின் பேச்சை கேட்டு சோர்ந்து போய் ஊருக்கு திரும்பினாராம் டாக்டர் விஜயபாஸ்கர். அவரின் கோலத்தைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்ட முதல்வர் இல்லத்தில் இருந்த கொங்கு பிரமுகர்கள், தென் மாவட்டங்களில் தாங்கள்தான் பெரிய சக்தி என்று தேவர் சமுதாய நிர்வாகிகள் எப்படியெல்லாம் குதித்தார்கள்.

இந்த தேர்தலில் அவர்களின் சப்த நாடியும் அடங்கி போகும் அளவுக்குதான் தேர்தல் முடிவுகள் இருக்கப் போகிறது. வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவே, அவர்களுக்கு கொங்கு மண்டல நிர்வாகிகளின் தயவு தேவை. மே 2 ஆம் தேதிக்கு பிறகு இன்னும் வேடிக்கை நிறைய இருக்கிறது. தென் மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம்தான் முதல்வர் வீட்டில் அதிகமாக இருக்கும் என்று சத்தமாகவே பேசியிருக்கிறார்கள்.

டாக்டர் விஜயபாஸ்கர் வந்தது முதல், சோகமாக திரும்பியது வரையும் கொங்கு பிரமுகர்களின் கிண்டல் பேச்சு வரை, டேப் ரிக்காடரில் பதிவு செய்தது போல அப்படியே ஒப்புவித்தது முதல்வர் வீட்டில் உள்ள நமக்கு அறிமுகமான பட்சி ஒன்று.

போடுங்கடா வெடியை….