சேலம் மாவட்ட திமுக.வில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களை, தேர்தல் தொடங்குவதற்கு முன்பிருந்தே நல்லரசு தமிழ் செய்திகளில் வெளியிட்டு வருகிறோம். சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, சேலம் மாவட்ட நிர்வாகிகளுக்கு இடையேயான ஈகோ பிரச்னையால் சேலம் மாவட்டத்தில் திமுக. மிகப்பெரிய சரிவை சந்திக்கும் என்றும் மொத்தமுள்ள 11 தொகுதிகளில் திமுக.வுக்கு 8 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு மிக, மிக குறைவு என்றும் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.
நல்லரசு தமிழ் செய்திகளின் பதிவை வாசித்த, திமுக.தலைமையிடத்தில் இரண்டாம் இடத்தில் உள்ள வாரிசு தலைவரின் மகன் மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு அந்த செய்தி கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அப்போது தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை வெளியே காட்டிக் கொள்ளாத திமுக தலைவர், இரண்டாம் கட்டமாக சேலத்தில் பிரசாரம் மேற்கொண்ட போது, சேலம் மாவட்டத்தில் உள்ள மூன்று மாவட்டச் செயலாளர்கள், டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், ஆர்.ராஜேந்திரன் மற்றும் திமுக எம்.பி.எஸ்.ஆர்.பார்த்திபன், மாவட்ட முன்னணி நிர்வாகிகளை அழைத்து, லெப்ட் அன்ட் ரைட் வாங்கியுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றிப் பெறவில்லை என்றால் மே 2 ஆம் தேதிக்குப் பிறகு யாரும் சென்னைக்கே வரமுடியாது என்று எச்சரித்துவிட்டு திரும்பினார் மு.க.ஸ்டாலின். அதன் பிறகும் கூட சேலம் மாவட்டத்தில் திமுக.வின் வாக்குச் சேகரிப்பு பணி விறுவிறுப்பு அடையவில்லை என்பதையும் நல்லரசு.வில் பதிவு செய்தோம்.
அதன் எதிரொலியாக, திமுக தலைவரின் மருமகன் சபரீசன், சேலம் சென்று அங்கே இரண்டு நாள் முகாமிட்டு திமுக முன்னணி நிர்வாகிகளை அழைத்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக எதிர்கொண்டுள்ள போராட்டம் குறித்து விரிவாக பாடம் நடத்தி, அவரவர் பொறுப்புக்கு ஏற்ப உண்மையாக உழைத்து, திமுக அமோக வெற்றிப் பெற கடுமையாக உழையுங்கள் என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் அறிவுரை வழங்கினார்.
தலைவர், மருமகன் விசிட்டுக்குப் பிறகு பிரசார பயணம் என்ற போர்வையில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் சேலம் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டு துவண்டு போயிருந்த திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். அதே சூட்டோடு, முறுக்கிக் கொண்டு நின்ற திமுக முன்னணி நிர்வாகிகளையும் அழைத்து அன்பாகவும், அதட்டலாகவும் பேசி, திமுக வெற்றிக்கு பாடுபடுங்கள் என்று கண்டிப்புடன் கூறிவிட்டு திரும்பினார்.
தலைவர், மருமகன், இளைஞரணி தலைவர் என மூவர் ஒரு குடும்பத்தில் இருந்து வந்து எச்சரித்துவிட்டு சென்ற பிறகும்,சேலம் மாவட்ட திமுக.முன்னணி நிர்வாகிகளின் புத்திக்கு உரைக்கவில்லை. அவரவர் பெரிய ஆள் என்ற மிதப்போடு வாக்குப்பதிவு நாளுக்கு முன்பு கூட அலட்சியமாக சுற்றி திரிந்துள்ளனர்.
வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக தலைமையில் இருந்து கொடுத்த பணத்தை கூட முறையாக வழங்காமல் ஆட்டையை போட்டுள்ளனர். அவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மூன்று மாவட்டச் செயலாளர்களும், சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்களும் ஏனோ தானோ என்றுதான் செயல்பட்டிருக்கின்றனர்.
சேலம் மாவட்டத்தை Drone Camera மூலம் வீடியோ எடுத்ததைவிட மேலாக, சேலம் மாவட்டத்தில் உள்ள நகரச் செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் என ஆயிரக்கணக்கானோரின் தேர்தல் நேர செயல்பாடுகளை அக்குவேர் ஆணிவேராக படம் பிடித்து, அறிக்கையாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்துவிட்டது ஐபேக் டீம்.
அதை பார்த்து செம டென்ஷனான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தல் முடிவு வெளியாகும் மே 2 ஆம் தேதி வரை கூட பொறுத்து இருக்க முடியாமல், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் ஏப்ரல் 8 ஆம் தேதி சென்னையில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார். அதனை கேட்டு உதறலாகி போன ஒட்டுமொத்த சேலம் மாவட்ட நிர்வாகிகளும் நேற்றிரவே சென்னையில் குவிந்துவிட்டனர்.
அண்ணா அறிவாலயத்தில் இன்று காலையில் இருந்து சேலம் மாவட்ட நிர்வாகிகளுக்கு சுளுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். யார், யார் என்னென்ன தவறு செய்தார்கள் என்பதை தனித்தனி பட்டியலாக வைத்துக் கொண்டு வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறாராம் மு.க.ஸ்டாலின்.
சேலத்தில் இருந்து விசாரணைக்காக சென்னை வந்துள்ள திமுக நிர்வாகிகள், ஊர் திரும்புவதற்குள் அவரவர் வகித்த கட்சி பதவியோடு சேலத்திற்கு வருவார்களா? என்று சந்தேகம் கிளப்புகிறார்கள் சேலத்தில் உள்ள அவர்களது ஆதரவாளர்கள்.