Sat. May 4th, 2024

சட்டமன்றத்திற்கான வாக்குப்பதிவு முடிந்த கையோடு, முதல்வர் பழனிசாமி, தனது தொகுதியான எடப்பாடியில் உள்ள சிலுவம்பாளைம் வீட்டில் மினி அமைச்சரவை கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார் என்று நல்லரசு தமிழ் செய்திகளில் சிறப்பு கட்டுரை வெளியிட்டிருந்ததோம். அதில், கலந்துகொண்ட 6 அமைச்சர்களில் வெல்லமண்டி நடராஜனும் ஒருவர் என்ற தகவல்தான் நமக்கு லேசாக பொறி தட்டியது. எப்போதுமே உயர்மட்ட அளவிலான ஆலோசனையில் ஜுனியர் அமைச்சரான வெல்லமண்டி நடராஜனுக்கு அழைப்பு இருக்காதே. இப்போது மட்டும் எப்படி என்ற சந்தேகம் நமக்கு எழுந்தது

அமைச்சரின் விசுவாசி ஒருவரை தொடர்பு கொண்டு பேசினோம். சார், சிலுவம்பாளையத்தில் நடந்த கதையே வேற. வெல்லமண்டி நடராஜனை நன்றாக வெளுத்து வாங்கவே, தனது சொந்த ஊருக்கு அழைத்திருக்கிறார் எடப்பாடியார். அங்கு சென்று வந்ததில் இருந்து சப்த நாடியும் ஒடுங்கி கிடக்கிறார் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் என்று கூறி கலகலவென சிரித்தார்.

சில நிமிட இடைவெளிக்குப் பிறகு சந்தோஷ குரலிலேயே பேச்சை தொடங்கினார், அவர். திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் 5 தொகுதிகளுக்கான தேர்தல் நிதியாக தலா 5 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 25 கோடி ரூபாய் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனிடம் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே அதிமுக தலைமை ஒப்படைத்துவிட்டது.

மணப்பாறையில் போட்டியிடும் சிட்டிங் எம்.எல்.ஏ. சந்திரசேகருக்கு முழுத் தொகையும் சென்றுவிட்டது. திருவெறும்பூரில் முன்னாள் எம்.பி. குமார்தான் வேட்பாளர் என்பதால் அவரிடம் நேரடியாக தேர்தல் நிதி ஒப்படைக்கப்பட்டது. இதேபோல, மணச்சநல்லூர் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி, ஸ்ரீரங்கம் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் ஆகியோரிடமும் தேர்தல் நிதி முழுமையாக ஒப்படைக்கப்பட்டுவிட்டது.

மற்ற தொகுதிகளுக்கான தேர்தல் நிதியை ஒப்படைப்பதில்தான் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சில தில்லுமுல்லுகளை செய்திருக்கிறார். தனது உள்ளடி வேலைகள், திருச்சி மாவட்டத்தை கடந்து அதிமுக தலைமைக்கு எட்டாது என்று அவர் நினைத்திருந்த நேரத்தில்தான், முசிறி எம்.எல்.ஏ., செல்வராசு மகன் ராமமூர்த்தி காரில் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட்டதால், காவல்துறை ஆணையர், ஆட்சியர் உள்பட பலர் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு உள்ளாகி, திருச்சி மாவட்ட அதிமுக.வின் பெயர் நாறிப்போனது.

அதன்பிறகும் திருந்தாமல், தேர்தல் நிதி விவகாரத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆடிய திருட்டு விளையாட்டை அதிமுக மேலிடம் மோப்பம் பிடித்துவிடடது. அதனையடுத்துதான், வெல்லமண்டி நடராஜனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு, சிலுவம்பாளையத்ல் வைத்து அமைச்சருக்கு வேப்பில்லை அடி கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.

அமைச்சர் வெல்லமண்டியிடம் தொகுதிகளுக்கு தலா 5 கோடி ரூபாய் என தரப்பட்ட பணத்தில் மூன்று நான்கு தொகுதிகளுக்கான பணத்தில், ஒன்றிரண்டு கோடியை அமைச்சர் சுருட்டி விட்டார். அந்த வகையில், முசிறி தொகுதிக்கான தேர்தல் நிதியை அமைச்சரிடம் பெற்றுக் கொண்டு மூன்று கார்கள் புறப்பட்டுச் சென்றன. ஒவ்வொரு காரிலும் ஒரு கோடி வீதம் பணம் அனுப்பி வைக்கப்பட்டது. இரண்டு கார்கள் எவ்வித சிக்கலும் இன்றி முசிறிக்கு சென்றபோது, எம்.எல்.ஏ.மகன் காரில் சென்றவர்கள், தேர்தல் நிதியான ஒரு கோடி ரூபாயை தங்களுக்குள் பங்கு பிரிப்பது தொடர்பாக வழியிலேயே சண்டை போட்டுள்ளனர். இந்த விவகாரத்தை அந்த சாலை வழியாக சென்றவர்கள் பார்த்து, வருவாய் துறைக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். வருவாய் துறையினரும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இந்த விவகாரத்தில்தான் தனது திருட்டு மூளையை பயன்படுத்தி மேலும் பல கோடி ரூபாயை அமுக்கிவிட்டார் அமைச்சர் வெல்லமண்டி. திருச்சி மேற்கு, லால்குடி, துறையூர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் நிதியான 15 கோடி ரூபாயில், 10 கோடி ரூபாய் அளவுக்கு திருச்சியில் உள்ள பிரபல ரவுடி ஒருவர் கொள்ளையடித்துவிட்டார் என்ற நாடகத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி வெளியுலகத்தை நம்ப வைத்துவிட்டார் அமைச்சர். அவரின் திரைக்கதைக்கு ஏற்ப, அந்த ரவுடிக்கு நெருக்கமான 6 பேரை கைது செய்து சிறையிலும் அடைத்துவிட்டனர், அமைச்சருக்கு நெருக்கமான காவல் துறை அதிகாரிகள்.

ஆனால், இந்த விவகாரத்தை பூதக்கண்ணாடி வைத்து பார்த்த அதிமுக மேலிடம், தேர்தல் நிதியில் சுளையாக 10 கோடி ரூபாயை அமைச்சர் வெல்லமண்டி சுருட்டிவிட்டதை அறிந்து ஆத்திரத்தின் உச்சிக்கே போய்விட்டது. மேலும், திருச்சி மேற்கில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவுக்கு எதிராக வலுவான வேட்பாளரை நிறுத்தாதது மட்டுமின்றி, அவரை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு அந்த தொகுதிக்கு அதிமுக தலைமையில் இருந்து வழங்கப்பட்ட தேர்தல் நிதியில் 75 சதவிகிதம் அளவுக்கு செலவே செய்யவில்லை என்பதையும் புகாராக அந்த தொகுதிக்குட்பட்ட அதிமுக நிர்வாகிகள், முதல்வர் இ.பி.எஸ்.ஸுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த இரண்டு விவகாரங்களிலும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீது கடும் கோபத்தில் இருந்த முதல்வர் எடப்பாடியார், நேரில் வரவழைத்து, அவரை வெளுத்து வாங்கியுள்ளார். வாழ்வா, சாவா போராட்டத்தில் இருக்கும் போது, தேர்தல் நிதியாக நாங்கள் கொடுத்த பணத்திலும் திருடி விட்டீர்களே.. உங்களை எல்லாம் எப்படி நம்புவது..அமைச்சர் பதவியை வைத்து பல நூறு கோடி ரூபாயை சம்பாதித்து கொண்டீர். உங்கப் பணத்தையா செலவு செய்ய சொன்னோம்.

திருச்சி மேற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணமே கொடுக்கவில்லை. அங்கு தேர்தல் வேலை பார்த்த அதிமுக நிர்வாகிகளுக்கும் சரியாக செலவுக்கு பணம் கொடுக்கவில்லை. நீங்கள் என்ன மனுஷர்.. கீழ்மட்டத்தில் இருக்கிற நிர்வாகிகள்தான் பணத்திற்கு ஆசைப்படுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அமைச்சராக இருக்கிற உங்ககிட்டேயே நேர்மை இல்லையோ.. நீங்கள் செய்த தில்லுமுல்லு எல்லாவற்றுக்கும் மே 2 ஆம் தேதிக்குப் பிறகு தண்டனை கிடைக்கப் போகிறது என்று கொந்தளித்துள்ளார் முதல்வர் எடப்பாடியார்.

இ.பி.எஸ்.ஸின் இன்னொரு முகத்தை பார்த்து வெலவெலத்து போய்விட்டார் வெல்லமண்டி. மே 2 ஆம் தேதிக்குப் பிறகு என்ன நடக்குமோ என்ற பயத்தில்தான் இப்போது இருக்கிறார் அமைச்சர் என்று முடித்தார், அந்த திருச்சி அதிமுக நிர்வாகி.

இன்னும் என்னென்ன கூத்துகள் எல்லாம் வெளியே வரப்போகிறதோ?