Sat. Nov 23rd, 2024

மே 2 ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றிய திமுக, தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்து, மின்னல் வேகத்தில் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் செயல்பட்டு வருகிறது. ஆளும்கட்சியாக இருந்து பிரதான எதிர்க்கட்சியான அதிமுக.வில், அக்கட்சியின் சட்டமன்றக் குழுத்தலைவர் யார் என்பதில் சுமூகமான முடிவு எடுக்க முடியாமல், பலமணிநேரம் நடந்த ஆலோசனைக் கூட்டம், எந்த முடிவு எடுக்க முடியாமல், வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தது, அரசு விளம்பரங்களில் இ.பி.எஸ், தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கொள்ள அனுமதித்தது போன்ற பல்வேறு அம்சங்களில், முடிந்தளவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டேன். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஒருபோதும் விட்டுத்தர மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார், அதிமுக.வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம்.

ஆனால், அவருக்கு அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவர் பதவியை எக்காரணம் கொண்டும் விட்டுத் தரமாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறார் இ.பி.எஸ்., உள்ளிட்ட கொங்கு மண்டல முன்னணி தலைவர்கள்.

இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடியது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக ஓ.பி.எஸ்., காருக்கு கட்டட அலுலகத்தில் இடம் ஒதுக்கப்படவில்லை என்ற பிரச்னையை கிளப்பி ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் சவுண்ட் விட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இ.பி.எஸ்., ஆதரவாளர்களும் கொதித்து எழுந்தனர்.

அதிமுக கட்டட வளாகத்தில் இரு கோஷ்டிகளாக அதிமுக நிர்வாகிகள் பிரிந்து நின்று ஆவேசமாக மோதிக் கொண்டதின் எதிரொலி, ஆலோசனைக் கூட்டத்திலும் பிரதிபலித்தது. கூட்டணி பேச்சுவார்த்தையின் போது இ.பி.எஸ். எடுத்த தவறான முடிவுகளால்தான் தென் மாவட்டங்களில் அதிமுக.வுக்கு மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டது என்றும், வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கியது, தேவேந்திரர் குல வோளாளருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியது போன்ற காரணங்களால்தான், தென் மாவட்டங்களில் பிற சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிமுக.வுக்கு எதிராக திரும்பி விட்டனர்.

அதிமுக.வை சரிவில் இருந்து மீட்க வேண்டும் என்றால் ஓ.பி.எஸ்.ஸுக்குதான் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் குரல் கொடுக்க, கொங்கு மற்றும் வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,கள் இந்த தேர்தலில் அதிமுக கௌரவமான வெற்றிப் பெற்றிருக்கிறது என்றால் அதற்கு இ.பி.எஸ்.ஸின் தேர்தல் வியூகங்களும், அவர் மேற்கொண்ட சூறாவளிப் பிரசாரமும்தான் முக்கிய காரணம். எனவே, கட்சிக்கு இனிமேல் இரட்டை தலைமை வேண்டாம். ஒற்றை தலைமையே போதும். அதுவும், இ.பி.எஸ்.ஸின் தலைமையை ஏற்று செயல்படுவதுதான் எதிர்கால அதிமுக.வுக்கு பலனிக்கும் என்று சத்தமாகவே குரல் எழுப்பினர்.

இதனால், இரண்டு தரப்பிலும் வாக்குவாதம் முற்றி, குழப்பமே எழுந்தது. இதனையடுத்து, எம்.எல்.ஏ.க்களை தவிர்த்து, ஓ.பி.எஸ். இ.பி.எஸ்., பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மட்டும் தனித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போதும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை. இதனால், 4 மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

வரும் திங்கட்கிழமை மீண்டும் கூடி ஆலோசித்து முடிவு எடுப்பது என்ற முடிவோடு, இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ். தரப்பினர் கலைந்து சென்றனர். கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ.க்கள் சிலர், இருவருமே விடாக்கண்டன், கொடாக்கண்டன் மாதிரிதான் நடந்து கொள்வார்கள். இருவரிடம் உள்ள ஈகோ, அதிமுக.வை அழித்துவிடுமோ என்ற அச்சம் உள்ளது. பாஜக தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன் சொன்ன மாதிரி, எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை பாஜக மேலிடம்தான் முடிவு செய்யும் என்று சுட்டிக்காட்டியதைப் போல, அதிமுக உட்கட்சி பஞ்சாயத்தை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கொண்டு சென்றுவிடுவார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது என்று வருத்தப்பட்டு பேசினர்.

எதிர்க்கட்சித்தலைவர் பதவியை ஓ.பி.எஸ். எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்க மாட்டார் என்பதை தேர்தலுக்கு முன்பாகவே நல்லரசு தமிழ் செய்திகளில் விரிவாக விவரிக்கப்பட்டிருந்தது. அதில் குறிப்பிட்டிருந்த அம்சங்கள்தான், இன்றைய அதிமுக கூட்டத்திலும் பிரதான விவாதமாக அமைந்துள்ளது. இதைவிட சிறப்பு அம்சமாக, தேர்தலுக்கு முன்பாக சசிகலாவையும், டிடிவி தினகரனையும் இ.பி.எஸ். ஒதுக்கி வைத்ததை ஜீரணிக்க முடியாத ஓ.பி.எஸ், இப்போது எதிர்க்கட்சித்தலைவர் பஞ்சாயத்தை பெரிதாக்கி, சசிகலாவும், டிடிவி தினகரனும் அதிமுக.வில் மீண்டும் நுழைவதற்கு வழி ஏற்படுத்தி தர திட்டமிட்டிருக்கிறாரோ என்று இ.பி.எஸ். ஆதரவாளர்கள் சந்தேகத்தை கிளப்புகின்றனர்…

நல்லா வேடிக்கை காட்டுங்கப்பா…..திமுக .வில் கொண்டாட்டம் பெருகட்டும்….