Sat. Nov 23rd, 2024

ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரட்டை வேடம் போடுவது அம்பலமாகியுள்ளதாக தமிழ் தேசியத் தலைவர்கள்குற்றம் சாட்டியுள்ளனர்.
பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை கூடி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அதிமுக அரசு அனுப்பி வைத்தது. இந்த தீர்மானத்தின் மீது உடனடியாக முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தாக்கல் செய்த அறிக்கையில், பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை என்றும் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளதாக, அந்த அறிக்கையில் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆளுநர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பல்நோக்கு விசாரணைக்குழு விசாரணை முடியும் வரை பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தன்னால் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒ ரு விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையும், அதற்கு முற்றிலும் மாறுபட்ட முடிவை உச்சநீதிமன்றத்திலும் ஆளுநர் தரப்பில் அறிக்கையாக தாக்கல் செய்திருப்பதின் மூலம் ஆளுநரின் இரட்டை வேடம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டதாக தமிழ் தேசியத் தலைவர்கள் குற்றம் சாட்டினார்.
இதனிடையே, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், உச்சநீதிமன்றத்தல் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், இரண்டு நீதிமன்றங்களில் இருவேறு அறிக்கையை ஆளுநர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, உயர்நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பல்நோக்கு விசாரணை முடிவடையும் வரை என்னால் எந்த முடிவும் எடுக்க முடியாது என்ற அறிக்கையை தங்களுக்கு வழங்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இருதரப்பு வாதங்களுக்குப் பின்னர், நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், ஏற்கெனவே நிலுவையில் உள்ள பேரறிவாளன் தண்டனை நிறுத்தி வைப்பு வழக்குடன் சேர்த்து, அற்புதம்மாளின் புதிய மனுவும் இணைத்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.