Sun. May 5th, 2024

திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட ஆறு காவல் நிலையங்களில் உள்ள அதிகாரிகள் அஞ்சல் வாக்கு செலுத்துவதற்காக பணம் வழங்கப்பட்ட விவகாரம், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது, தமிழக அரசியலில் குறிப்பாக, திமுக தரப்பில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஞ்சல் வாக்கு செலுத்துவதற்காக சட்டவிரோமாக பணம் பெற்ற புகாரில், தில்லைநகர் காவல் ஆய்வாளர் சிவக்குமார், ஏட்டு சுகந்தி, அரசு மருத்துவமனை வளாக காவல் துணை ஆய்வாளர் மாதரசி ஸ்டெல்லாமேரி, சிறப்பு துணை ஆய்வாளர் பாலாஜி, நுண்ணறிவுபிரிவு சிறப்பு துணை ஆய்வாளர்கள் சங்கரன், கலியமூர்த்தி ஆகிய 6 பேரை திருச்சி மாநகர காவல் ஆணையர் கமிஷனர் லோகநாதன் பணியிடை நீக்கம் செய்தார்.

மேலும் காவல்துறை அதிகாரிகளுக்கு அஞ்சல் வாக்கு செலுத்துவதற்காக பணம் கொடுத்த புகாரில் திமுக வக்கில் மணிவண்ண பாரதி உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை மாநகர காவல்துறையிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த நேரத்தில்தான் நேற்றிரவு, மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதனும், தேர்தல் அல்லாத பணிக்கு அதிரடியாக மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதையடுத்து, புதிய பூகம்பம் கிளம்பியுள்ளது.

இந்த வழக்கின் ஒவ்வொரு நகர்வும் திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் கே.என்.நேருவை குறி வைத்தும், அவருக்கு நேரடியாக தொடர்பு இருக்கிறது என்பதை ஊர்ஜிதப்படுத்தி, மேற்கு தொகுதி தேர்தலை ரத்து செய்ய ஆளும்கட்சி முனைவதாக திமுக தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

சட்டமன்றத் தேர்தலையொட்டி, திமுக.வுக்கு தமிழக மக்களிடம் நாளுக்கு நாள் பெருகி வரும் அபரிதமான ஆதரவை பொறுக்க முடியாமல், ஆளும்கட்சியின் தூண்டுதலுக்கு பயந்து, சிபிசிஐடி.யிடம் இருந்த விசாரணை சி.பி.ஐ., க்கு மாற்றப்பட்டுள்ளதாக திமுக முன்னணி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 
இதனிடையே, இந்த வழக்கில், திமுக.வுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும வகையில் ஆளும்தரப்பினரின் தூண்டுதலால் நடைபெற்று வரும் நிகழ்வுகளை உரிய முறையில், நேர்மையான வகையில் விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு ஒன்று வழங்கியுள்ளார். 
திமுக அளித்துள்ள புகாரின் விவரம் இதோ......

திருச்சி காவல்துறை அதிகாரிகள் அஞ்சல் மூலம் வாக்களிக்கும் போது திமுக.வுக்கு சாதகமாக வாக்களிக்கும்படி கோரி, 2000 ரூபாய் வீதம் பணம் கொடுக்கப்பட்ட வழக்கில், திமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர்  கே.என்.நேருவை சிக்க வைக்கும் முயற்சியில் ஆளும்கட்சி ஈடுபட்டு வருகின்றனர்.  

மேலும், திமுகவின் முதன்மை செயலாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் ஆளும்கட்சி ஈடுபட்டுள்ளதாகவும், பணம் கொடுத்த விவகாரத்தில் காவல் ஆணையர் மேற்கொண்ட விசாரணையின் விவரம் முழுமையாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதன் பின்னணி என்ன? ஆளும்கட்சியின் ஆதரவு இன்றி காவல் ஆணையரின் விசாரணை அறிக்கை சமூக ஊடகங்களில் வெளியாவதற்கு சாத்தியமே இல்லை. 

காவல் ஆணையரின் விசாரணை முழுமையடைவதற்கு முன்பே, அதாவது கடந்த 27 ஆம் தேதி தினமலர் நாளிதழின் முதல் பக்கத்தில் திருச்சி மேற்கு மற்றும் திருவண்ணாமலை (எ.வ.வேலுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை) ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ரத்து செய்யப்படும் என்று யூகச் செய்தியை தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ளது. 
அதே நாளில், திருச்சி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட தில்லைநகர், உறையூர், அரசு மருத்துவமனை, எடமலைப்பட்டிபுதூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில் காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, ஆறு காவல் நிலையங்களிலும் கணக்கில் காட்டப்படாத 64,000 ரூபாய் கைப்பற்றப்படுகிறது. 
அதுபற்றிய தகவல் வெளியான அந்த நிமிடமே, திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.என்.நேருதான், காவல்துறை அதிகாரிகளுக்கு அஞ்சல் வாக்கு செலுத்துவதற்காக பணம் கொடுத்தார் என்ற செய்தியும் பரப்பப்படுகிறது. 

திமுகவிடம் ஆதாயம் பெறுவதற்காக சில வழக்கறிஞர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கு கவர்களில் பணம் வைத்து வழங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  திருச்சி தில்லை நகர் காவல் நிலையத்தில் 12 கவர்களில் 24,000 ரூபாயும், திரிச்சி ஜி.எச் காவல் நிலையத்தில் 2o கவர்களில் 40,000 ஆயிரம் ரூபாயும்  பறிமுதல் செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. 
திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் நேர்மையான முறையில் விசாரணை நடத்தியிருந்தால், அவரின் விசாரணை தகவல் உடனுக்குடன் எப்படி சமூக ஊடகங்களில் வெளியானது என்பதற்கும், காவல்துறை தரப்பில் இருந்து தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை என்றால் யார் மூலமாக திமுக.வுக்கு களங்கும் ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்கள் தகவல் பரப்பின என்பது பற்றியும், திருச்சி மேற்கு மற்றும் திருவண்ணாமலை தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படும் என்று தினமலர் எப்படி செய்தி வெளியிட்டது என்பது குறித்தும் தேர்தல் ஆணையம் உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும்.
 
ஆளும் கட்சி பிரமுகர்களும், உள்துறையை தன் வசம் வைத்துள்ள முதல்வர் பழனிசாமியின் தலையீடு இலலாமல், வருவாய் துறை மற்றும் உயர் காவல்துறை அதிகாரியின் ரகசிய அறிக்கை விவரம் ஊடகங்களுக்கு வெளியாவதற்கு வாய்ப்பே இல்லை என்று திமுக சந்தேகப்படுகிறது. தற்போதைய தேர்தலில் திமுக.வுக்கு நாள் மக்களிடம் அமோக ஆதரவு பெருகுவதை பொறுத்துக் கொள்ள முடியாமலும், திருச்சி மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.என். நேருவின் வெற்றி உறுதியாகிவிட்டது என்பதை அறிந்து அதனை தடுக்கும் விதமாக, இந்த விவகாரத்தில் ஆளும்கட்சியின் தலையீடு உள்ளது.
 
மேலும், காவல் அதிகாரிகளுக்கு பணம் கொடுத்தது தொடர்பான விசாரணை அறிக்கை முழுமை அடைவதற்கு முன்பாகவே, கடந்த 27 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருச்சி மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் வி பத்மநாதன், காவல்துறையினருக்கு லஞ்சம் கொடுத்ததாக கே.என்.நேருவுக்கு எதிராக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்து, கே.என்.நேருவின் வேட்புமனுவை தகுதி நீக்கம் செய்ய கோரியதற்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம், இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக வழங்கியுள்ள புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.  


கே.என். நேரு மறுப்பு....

அஞ்சல் வாக்கு செலுத்துவதற்காக புகார் கொடுக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. திருச்சி மேற்கு தொகுதியில் இதற்கு முன்பு எந்தவிதமான மோசடிகளும் செய்யாமல், அதிக எண்ணிக்கையிலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று இருக்கிறேன். இதுதொடர்பாக, திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, எனக்கு உதவும் வகையில் திமுக வழக்கறிஞர் ஒருவர் காவல்துறை அதிகாரிகளுக்கு பணம் கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்தாக கூறியபோது, அதனை நான் மறுத்தேன். அந்த வழக்கறிஞர் யார் என்றே எனக்கு தெரியாது. 
அவர் எதற்காக பணம் கொடுத்தார் என்பது குறித்தும் எனக்கு எதுவும் தெரியாது. இந்த தொகுதியைச் சேர்ந்தவன் நான். ஏற்கெனவே பெற்ற வெற்றியைப் போல, தற்போதைய தேர்தலில் வியப்பிற்குரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளதாக தெரிவித்திருக்கிறேன். எனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்துவதற்காக ஆளும்கட்சி தரப்பில் செய்யப்படும் சதித்திட்டம் இது. இவ்வாறு 

கே.என்.நேரு பதிலளித்துள்ளார். 
கே.என்.நேருவுக்கு எதிரான இதுவரை நேரடியாக யாரும் புகார் தெரிவிக்காத நிலையில், காவல் துறை ஆணையர் லோகநாதன் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டிருப்பதும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி விசாரணையில் இருந்து அவசர, அவசரமாக சிபிஐ விசாரணைக்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது குறித்தும், திமுக தரப்பில் சந்தேகம் கிளப்பப்படுகிறது. 
இதுவரை, தமிழகத்தில் வாக்குக்கு பணம் கொடுத்த எந்தவொரு புகாரும் சிபிஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டதில்லை என்பதை சுட்டிக்காட்டும் திமுக சட்டத்துறை நிர்வாகிகள், கே.என்.நேருவை பழிவாங்குவதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது என்கின்றனர். 
 .