தமிழகத்தில் நேற்று முளைத்த மக்கள் நீதி மய்யம் கூட, அரசியல் நடத்துவதையும், பிரசாரத்தை மேற்கொள்வதையும் ஹை டெக் தொழில் நுட்பத்திற்கு கொண்டு வந்துவிட்டது. ஆளும் கட்சியும் சரி, ஆண்ட கட்சியும் சரி, தேர்தல் வியூகங்களை வகுப்பதற்கும், பிரசாரத்தை வடிவமைப்பதற்கும், தொழில் நுட்ப வல்லுநர்களை கூலிக்கு அமர்த்திவிட்டது.
வீடு வீடாக வந்து வாக்கு கேட்கும் காலம் எல்லாம் மலையேறி கையடக்க கைபேசியில் வாட்ஸ் அப், டிவிட்டர் என தலைவர்கள் பிரசாரம் செய்வதை சில நேரங்களில் கேட்கிறார்கள். பல நேரங்களில் டெலிட் செய்து விடுகிறார்கள் பொதுமக்கள். குறிப்பாக குடும்பத் தலைவிகள், சாம்பர் வைப்பது எப்படி என்பதையும், சீரியல், சினிமா நடிகர், நடிககைகளின் கிசுகிசு தொடர்பான யூ டியூப்பிலும் நாள் முழுவதையும் செலவழித்துக் கொண்டிருக்கின்றனர். இளசுகளோ, அவரவருக்கு விருப்பமானவர்களுடன் பகல், இரவு என வித்தியாசம் இல்லாமல், பொழுதை கழித்துக் கொண்டிருக்கின்றனர்.
இப்படிபட்ட மக்களிடையேதான், திமுக.வை தொடங்கிய அண்ணா காலத்தில் மேற்கொண்ட பிரசாரம் போல, திண்ணைப் பிரசாரத்தை கையில் எடுத்திருக்கிறார் சேலத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி அப்பா. அழகாபுரத்தில் வசித்து வரும் இவர், சேலம் மாநகராட்சியின் திமுக முன்னாள் உறுப்பினராவார். மகளிர் சுயமரியாதை அறக்கட்டளையை நிர்வகித்து வரும் இவர், திமுக.வின் வெற்றிக்காக சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் ஒற்றை ஆளாக புறப்பட்டுச் சென்று, கிராமம் மற்றும் நகரப்பகுதிகளைச் சேர்ந்த பெண்களைச் சந்தித்து, ஆற அமர உட்கார்ந்து, உள்ளூர் நிலவரம் முதல் உலக நிலவரம் வரை பகிர்ந்து கொள்கிறார்.
திமுக.வுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும். அதிமுக.வுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது என்று காரணங்களை விரிவாக எடுத்துக் கூறி அதிமுக மனநிலையில் உள்ள பெண்களின் மனதை கூட கரைத்து வருகிறார். தான் சென்ற ஊர்கள், சந்தித்து பேசி பெண்களின் எண்ணிக்கை, அவர்கள் கூறிய குறைகள், கோரிக்கைகள் என அனைத்து அம்சங்களையும் தொகுத்து ஒரு அறிக்கையாக தயாரித்து, சேலத்திற்கு பிரசாரத்திற்கு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார் புவனேஸ்வரி.
அண்ணா காலத்து திண்ணைப் பிரசாரத்தை மீண்டும் நினைவூட்டியதுடன், பிரதிபலன் பாராமல் திமுக வெற்றிக்காக தனியொரு மனுஷியாக உழைத்து வரும் புவனேஸ்வரியை வெகுவாக பாராட்டினாராம் மு.க.ஸ்டாலின்.
11 தொகுதிகளிலும் சுற்றிவந்து, ஆயிரக்கணக்கான பெண்களிடம் பேசி, அவர்களின் குறைகளை கேட்டதுடன், அவர்களின் சூடான விமர்சனங்களுக்கு பதிலளித்தது போன்ற அனைத்து விதமான பணிகள் மூலம் கிடைத்த மனநிறைவைவிட, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த பாராட்டுகள்தான், மீண்டும் மீண்டும் மக்களை தேடி ஓடி, திமுக.வுக்கும் உதயசூரியனுக்கும் வெற்றியைத் தேடி தர வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக நெகிழ்ச்சியோடு கூறுகிறார் புவனேஸ்வரி…
கடமையைச் செய்…பலனை எதிர்பார்க்காதே….என்று சொல்லாமல் சொல்லியிருப்பாரோ, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…