Sat. May 18th, 2024

கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

முதல்வர் பழனிசாமி, சில நாள்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட போது, இந்த மாவட்டத்தில் இருந்து ஒரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வைக் கூட தேர்ந்தெடுக்கவில்லை. அதிமுக.வை நீங்கள் புறக்கணித்ததால்தான் அரசுத் திட்டங்கள் எதுவும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரவில்லை” என்று கூறியிருக்கிறார்.

நீங்கள் நினைத்துப் பாருங்கள். அவர் தமிழ்நாட்டுக்கே முதலமைச்சர். அவர் சார்ந்த அதிமுக கட்சியைச் சேர்ந்த உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தையே புறக்கணித்ததாக சொல்லும் முதல்வரை நீங்கள் புறக்கணிக்க வேண்டாமா? என்பதுதான் என்னுடைய கேள்வி.

கன்னியாகுமரி மாவட்டத்திற்குதான் ஒன்றும் செய்யவில்லை. இதைவிட கேவலம் என்னவென்றால் அவரைத் தேர்ந்தெடுத்த எடப்பாடிக்கே எதுவும் செய்யவில்லை.

அந்த தொகுதிக்குச் நான் சென்றிருந்தபோது, அவரது பெயரோடு எங்கள் ஊரான எடப்பாடி பெயரைச் சேர்த்து சொல்லாதீர்கள்.அது எங்கள் ஊருக்கு கேவலம் என்று அங்கிருக்கிற மக்கள் சொன்னார்கள்.

உங்கள் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், டெல்லி பிரதிநிதியாக இருக்கிறார். அவருக்கு பெயர், தளவாய் சுந்தரம். முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் தொழில்ரீதியாக ஒரு பங்குதாரராக இருக்கிறார்.

குமரி முதல் கம்போடியா வரை அவருக்கு சொத்து இருக்கிறது. இவ்வளவு சொத்து சேர்த்தவர், குமரி மாவட்டத்திற்கு, உங்களுக்கு ஏதாவது நன்மை செய்திருக்கிறாரா?

ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட அவரை டெல்லி பிரதிநிதியாக்கியவர் சசிகலா. அவருக்கு துரோகம் செய்துவிட்டு பழனிசாமியிடம் ஒட்டிக் கொண்டிருக்கிறார். தேர்தல் தோல்விக்குப் பிறகு பழனிசாமிக்கும் துரோகம் செய்துவிட்டு பா.ஜ.க.வில் சேரப்போகிறார்.

தக்கலைக்கு கடந்த முறை நான் வந்தபோது, மத்திய அரசு புதிதாக அமைக்கவுள்ள பன்னாட்டு மாற்று முனையத்தால், மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று பேராயர்கள் வந்து என்னிடம் முறையிட்டனர்.

‘அப்போது அவர்களுக்கு நான் ஒரு உறுதியளித்தேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மாற்று முனையம் அமைப்பதற்கு அனுமதி தர மாட்டோம்’ என்று தெளிவுபட கூறிச் சென்றேன்.

அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு எந்த முதலமைச்சர் அனுமதி வழங்கினாரோ, அவரே சில தினங்களுக்கு முன்பு இங்கு வந்து, மாற்று முனையம் அமைக்க மாட்டார்கள் என்று கூறி நான் பொய் சொல்வதாக சொல்லி இருக்கிறார்.

மிஸ்டர் பழனிசாமி அவர்களே… நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என் கையில் ஆதாரம் இருக்கிறது. அதைவைத்துதான் மாற்றி மாற்றி நீங்கள் பேசுகிறீர்கள். உங்களுக்குதான் பொய் வந்த கலை என்று நான் கன்னியாகுமரி மண்ணில் நின்று குற்றம் சாட்டுகிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.