நாமக்கல் அருகே திமுக சார்பில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு இன்று காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது. இதில், மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சித் தலைவர்கள், துணைத்தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் உள்பட ஆயிரக்கணக்கான உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
காலை 9 மணியளவில் மாநாட்டு மேடைக்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநாட்டு மேடையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த மறைந்த திக தலைவர் தந்தை பெரியார், திமுக தலைவர்கள் பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி ஆகியோரின் உருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து மாநாட்டில் திமுக முன்னோடிகள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். மத்தியில் கூட்டாட்சி:மாநிலத்தில் சுயாட்சி என்ற தலைப்பில் திமுக எம்பி ஆ.ராஜா உரையாற்றினார்.
அப்போது, பேரறிஞர் அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர், எங்களை தந்தை பெரியார் வழிக்கு தள்ளிவிடாதீர்கள். தனிநாடு கேட்க எங்களை விட்டு விடாதீர்கள், மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம் என்று ஆவேசமாக ஆ.ராஜா எம்பி கூறினார்.