Thu. Nov 21st, 2024

திமுக சார்பில் நாமக்கல் பொம்மகுட்டையில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு இன்று காலை தொடங்கியது. இதில், மாநகராட்சி மேயர்கள், நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டின் நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகத் தான் மக்களுக்கு நேரடியாகத் தொண்டாற்றுவதற்கான பயிற்சியைப் பெற முடியும்

அந்த வகையில் மக்களுக்குத் தொண்டாற்றுவதற்கான- மக்கள் தொண்டுக்கு பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. அதற்கான பயிற்சிப் பாசறையைத் தான் நாமக்கல்லில் நடத்திக் கொண்டு இருக்கிறோம்

மக்களிடம் நல்ல பேர் வாங்குவது தான் அனைத்திலும் கஷ்டமானது. ஐம்பது ஆண்டுகளாக மக்களைச் சந்தித்து வருகிறேன். மக்கள் மனதில் இருப்பது என்ன என்பதை அவர்களது முகத்தை பார்த்தாலே தெரிந்துவிடும். கூட்டமாக நின்றாலும் எந்த ரியாக்‌ஷனும் இல்லாமலும் இருப்பார்கள் மக்கள். நம்மை நோக்கி மலர்ச்சியுடன், மகிழ்ச்சியுடன் வந்தால் தான் அது பாசிட்டிவ் ஆன மனோபாவம் ஆகும்.

இத்தகைய மனோபாவத்தை மக்களிடம் இருந்து நீங்கள் பெற வேண்டும். மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு உதவிகள் செய்தால் நிச்சயம் உங்களை நோக்கி மக்கள் வரத்தான் செய்வார்கள். அதே நேரத்தில் நீங்கள் தவறு செய்தால் உங்களை விட்டு மக்கள் விலகுவார்கள். உங்களைப் புறக்கணிப்பார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.

மாநகராட்சி மேயர் முதல் பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் வரை அனைவரும் எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் நடந்து கொள்ள வேண்டும். இந்த மாநாட்டின் அடிப்படையான நோக்கமே இதுதான். சட்டப்படி – விதிமுறைப்படி – நியாயத்தின் படி – மக்களுக்காக நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நான் எச்சரிக்கிறேன். கட்சி ரீதியான நடவடிக்கை மட்டுமல்ல – சட்டரீதியான நடவடிக்கையே எடுக்கப்படும்.

நான் அதிகப்படியான ஜனநாயகவாதியாக ஆகிவிட்டேன் என்று எனக்கு நெருக்கமான சில நண்பர்கள் சொல்கிறார்கள். அனைவர் கருத்தையும் கேட்டு – அவர் கருத்துக்கும் மதிப்பளித்துச் செயல்படுவதுதான் ஜனநாயகமே தவிர – யாரும் எதையும் செய்யலாம் என்பது ஜனநாயகமல்ல. அப்படி நான் மாறிவிடவுமில்லை.

ஒழுங்கீனமும் – முறைகேடும் தலைதூக்குமானால் நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என்பதை உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மட்டுமல்ல அனைவர்க்கும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சிக்கு சும்மா வந்துவிடவில்லை. தங்கத் தாம்பாளத்தில் வைத்து தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவி எனக்குத் தரப்படவில்லை. ஐம்பதாண்டு காலமாக உழைத்த உழைப்பின் பலன் இது.

கோடிக்கணக்கான தி.மு.க.தொண்டர்களின் உழைப்பின் பயன் இது. என்னை நம்பி, கோடிக்கணக்கான தொண்டர்கள் இந்தக் கட்சியை என்னிடம் ஒப்படைத்துள்ளார்கள். என்னை நம்பி, கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் இந்த ஆட்சியை ஒப்படைத்திருக்கிறார்கள். இன்னும் சொன்னால் தமிழ்நாட்டின் எதிர்காலம் என்பதே தி. மு.க. என்ற இயக்கத்தின் கையில் தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவற்றுக்கு களங்கம் ஏற்படுத்தும் காரியத்தை யாரும் செய்துவிடக் கூடாது. யாரோ ஒருசிலரின் தவறான செய்கையின் காரணமாக, தமிழ்நாட்டின் முதலமைச்சரான நானும் – கோடிக்கணக்கான தொண்டர்களும் அவமானத்தால் தலைகுனியும் நிலையை யாரும் உருவாக்கிவிடக் கூடாது

மேயரும் துணை மேயரும் பேசமாட்டார்கள் – நகராட்சித் தலைவருக்கும் – கவுன்சிலர்க்கும் ஆகாது – பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு உள்ளேயே பஞ்சாயத்து தான் – என்பது போன்ற செய்திகள் எனக்கு வரக்கூடாது. ஒற்றுமையாக இருங்கள்.

ஊருக்காக உழையுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். சமூகநீதி – சுயமரியாதை – பகுத்தறிவு – சமத்துவம் – சகோதரத்துவம் -பெண் விடுதலை – மொழிப்பற்று – இன உரிமைகள் – மாநில சுயாட்சி – கூட்டாட்சி கொண்ட இந்தியா ஆகிய அடிப்படைத் தத்துவங்களைக் கொண்டது தான் திராவிட இயக்கம்.

சாலைகள் போடுவதும் – பாலங்கள் கட்டுவதும் – தண்ணீர் தொட்டி கட்டுவதும் – கழிவு நீர் கால்வாய்கள் அமைப்பதுமான – பணிகளோடு உங்களது பணிகள் முடிந்துவிடவில்லை. சமத்துவப் பாதைகள் அமைப்பதும் உங்களது கடமை. சகோதரத்துவப் பாலங்கள் அமைப்பதும் உங்களது கடமை. சமூகத்தின் கழிவுகளைத் துடைக்க வேண்டியதும் உங்கள் கடமைகள் தான். அதனால் தான் இதனை திராவிட மாடல் ஆட்சி என்கிறோம்.

அனைவருக்குமான வளர்ச்சி – அனைத்துத் துறை வளர்ச்சி – அனைத்து மாவட்டத்து வளர்ச்சி – என்ற வரிசையில் அனைத்து சமூகங்களின் வளர்ச்சி என்று நான் சொல்லி வருவது இதுதான்.

அனைத்துச் சமூகங்களையும் வளர்க்காமல் அனைவருக்குமான வளர்ச்சியை நீங்கள் உருவாக்கி விட முடியாது. அனைத்து சமூகங்களையும் வளர்க்காமல் – வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று நீங்கள் பேச முடியாது. அனைத்து சமூகங்களையும் வளர்க்காமல் – கீழடியில் 3200 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் வாழ்ந்தான் என்று பேச பெருமை கொள்ள முடியாது.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.