Fri. Apr 19th, 2024

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதம் நிறைவடைவதையொட்டி, குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் பழங்குடியினத்தைத் சேர்ந்த திரௌபதி முர்மு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரும் பாஜக மற்றும் தேசிய முற்போக்கு கூட்டணி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜகவில் மூத்த தலைவராக திகழ்ந்தவர் அக்கட்சியில் இருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தார்.

எதிர்க்கட்சிகள் ஒருமனதாக குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை முன்னிறுத்தி உள்ள நிலையில், அவரும் எதிர்க்கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

அதன் ஒருபகுதியாக இன்று இரவு யஷ்வந்த் சின்ஹா சென்னை வந்தார். விமான நிலையத்தில் திமுக எம்பி கனிமொழி அமைச்சர்கள் பலர் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை யஷ்வந்த் சின்ஹா சந்தித்து ஆதரவு திரட்டினார்.

அண்ணா அறிவாலயத்தில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் யஷ்வந்த் சின்ஹா கலந்துகொண்டார். அவரை ஆதரித்து கட்சித் தலைவர்கள் பேசினர். இந்தக் கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பலர் கலந்துகொண்டனர்.

நிறைவாக பேசிய சின்ஹா, ஆளுநர்களின் செயல்பாடு அரசியல் அமைப்பு சட்டப்படி இருக்க வேண்டும், ஆனால் தற்போது அப்படி இல்லை! அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பிரிவும் உடைக்கப்படுகிறது என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சின்ஹா, கடத்தல் அரசியல் செய்வது, பணம் கொடுத்து MLAக்கள் வாங்குவதுதான் BJP பழக்கம் என்று காட்டமாக தெரிவித்தார்.