திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சியின் ஒருங்கிணைந்த பிரசாரப் பொதுக்கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தில் பாஜக.வால் நேரடியாக காலூன்ற முடியவில்லை, அதனால் அதிமுகவை மிரட்டி, அச்சுறுத்தி பணிய வைத்து அவர்களின் நிழலில் பயணம் செய்ய பாஜக.வினர் ஈடுபட்டுள்ளார்கள்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழகத்தில் நடந்த அனைத்து நிகழ்வுகளிலும் பாஜகவின் சதி இருக்கிறது என்பதற்கு உதாரணமாக இருப்பது, அவர்கள் அடிக்கடி தமிழகம் வருவதை வைத்தே தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகிறது.
மத்திய அரசு இணைந்து செயல்படுவதால் தமிழகத்திற்கு நிறைய நன்மைகள் கிடைத்துள்ளதாக முதல்வர் பழனிசாமி பொய் சொல்கிறார். ஆனால், நான்கு, ஐந்தாறு முறை புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு மிக குறைந்த அளவில்தான் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழகத்தில் அமைந்த கூட்டணி போல் இந்திய அளவில் மதச்சார்ப்பற்ற கூட்டணி அமைக்க ராகுல்காந்தி பொறுப்பேற்க வேண்டும். அப்போதுதான் மொழியால், மதத்தால், கலாச்சாரத்தால் இந்தியாவை பிளக்க முயற்சிக்கும் பாஜக.வின் கனவு தவிடி பொடியாக்க முடியும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.