Fri. Nov 22nd, 2024

THE HINDU SPECIAL CORRESPONDENT Ramakrishnan Thyagarajan…முகநூல் பதிவு…..

வங்கதேசத்தின் வயது 50! வங்கதேசத்தின் 50-வது ஆண்டு விழாக்களை கவனிக்கும்பொழுது, நான் அங்கு செப்டம்பர் 2004-ல் சென்ற ஞாபகம் வருகிறது. இரு நாட்டிலுள்ள இளம் பத்திரிகையாளர்களிடையே கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக டாக்காவிற்கு நான் சென்றிருந்தேன். அக்கலந்துரையாடலின் துவக்க நிகழ்ச்சியிலேயே இந்திய தூதுவருக்கும் வங்கதேசத்தின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் “லடாய்” வந்துவிட்டது. இச்சூழலில், எனக்கு அந்தக் கலந்துரையாடலில் பேசுவதற்கு, வாய்ப்பு இரண்டாவது நாளில் கிடைத்தது.

டிசம்பர் 1996-ல் இரு நாடுகளுக்கிடையே கையெழுத்திடப்பட்ட கங்கை நதி பங்கீடிற்கான ஒப்பந்தத்தைப் பற்றி எனது கருத்துகளை கூற அந்த வாய்ப்பு. ஐந்து நிமிடங்கள் கொடுத்தார்கள். ஆனால், மூன்று நிமிடத்திலேயே என்னுடைய வாதங்களை எடுத்து வைத்தேன். வங்கதேசத்தின் தரப்பில் பேசியவர்கள் அந்த ஒப்பந்தம் அவர்களுடைய நாட்டிற்கு பாதகமாக அமைந்திருக்கிறது என்றெல்லாம் கூறினார்கள். நான் என்னுடைய உரையை துவக்கும்பொழுது, வங்கதேசத்தினரைை மாதிரி நானும் ஒர் ஆற்றின் கடைமடைப்பகுதியை சார்ந்தவன் என்று கூறினேன்.

ஒப்பந்தத்திற்கு எதிராக வங்கதேசத்தை சார்ந்தவர்களின் கருத்துகள் ஒவ்வொன்றிற்கும் என்னால் பதில்சொல்லமுடியும். ஆனால், அவ்வாறு செய்யப்போவதில்லை எனபதை கூறிவிட்டு, ஒரு சில கருத்துகளுக்கு மட்டும் என்னுடைய பதிலை கூறினேன். கலந்துரையாடலின் அந்தப் பகுதிக்கு தலைவராக இருந்தவர் ஜகீர் ஷொபான் என்கிற வங்கதேசத்தின் பொருளாதாரமேதை. அவர் என்னைப் பார்த்து “நீங்கள் இன்னமும் பேசவேண்டும் என்று விரும்பினால் பேசலாம்” என்றார். நான் “இல்லை. சொல்லவேண்டியதை கூறிவிட்டேன்” என்று பதில் கொடுத்தேன்.

அக்கலந்துரையாடல் முடிந்த அன்று, அதை ஏற்பாடு செய்த பரூக் ஷொபான். என்னிடம் நீண்ட நேரம் பேசினார். அவர் வங்கதேசத்தின் வெளியுறவுத் துறையின் முன்னாள் செயலாளராக இருந்தவர். எவ்வாறு இருநாட்டு உறவுகளும் மேம்படுத்தமுடியும் என்பதைப் பற்றியும் வாஜ்பாய் பிரதமராக இருந்தபொழுது, வங்கதேசத்தின் பிரதமராக அப்பொழுது இருந்த காலிதா ஜியாவிடம் ஐரோப்பாவிலுள்ள மாதிரி ஆசியக் கண்டத்தில் பன்னாட்டு ஹைவே (நெடுஞ்சாலை) கட்டப்படவேண்டும் என்றும் அதற்கு வங்களாதேசம் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றும் அதற்காக வங்கதேசத்திற்கு இந்தியா அனைத்துவித உதவிகளையும் வழங்க தயாராக இருக்கும் என்று கூறினார் என்பதையும் நினைவுகூர்ந்தார் பரூக் ஷொபான்.

ஆனால், வாஜ்பாயிற்கு சரியான பதிலை கொடுக்கத்தவறிவிட்டார் காலிதா ஜியா என்றும் வருத்தப்பட்டுகொண்டார் பரூக். அன்று மாலை பழைய டாக்காவிலுள்ள தாக்கேஸ்வரி கோயிலுக்கு சென்றிருந்தேன் சென்னைக்கு திரும்பியபிறகு, இரு நாடுகளுக்கிடையே நதிநீர் பங்கீட்டைப்பற்றியான கட்டுரையை “தி இந்து”-வில் எழுதினேன். (https://www.thehindu.com/…/sharing…/article27679327.ece) அதற்கு, வங்கதேசத்தின் தூதரகத்திலிருந்து பாராட்டி இ-மைல் அனுப்பியிருந்தார்கள். அக்கட்டுரையை வங்கதேசத்தின் பெரிய தலைவர்கள் அனைவரும் படித்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்திருந்தார்கள். அடுத்தவருடமும் என்னை அம்மாதிரியான கலந்துரையாடலுக்கு அழைத்திருந்தார்கள். ஆனால், என்னால் போகமுடியவில்லை.

தற்பொழுது இந்திய-வங்கதேச உறவுகள் நல்ல நிலையில் உள்ளன. அதுனுடைய வெளிப்பாடு பிரதமரின் தற்பொழுதைய பயணம். இதை பயன்படுத்தி, இந்திய அரசு வாஜ்பாய் கனவு கண்ட “ஆசிய ஹைவேயை” வங்கதேசத்தின் ஒத்துழைப்பை பெற்று கட்ட முன்வரவேண்டும். அப்படிப்பட்ட ஹைவே வருமேயானால், மியான்மார் மற்றும் பல தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மிக அதிக அளவில் மக்கள் செல்லமுடியும். உணவுப் பொருள் உள்ளிட்டவற்றின் பரிமாற்றம் மற்றும் வர்த்தகமும் செழிப்பாக அமைய முடியும்.

இந்த ஹைவேயின் ஒரு பகுதியாக, இலங்கையை மற்ற நாடுகளுடன் இணைக்க ராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையே ஒரு பெரிய பாலத்தை கட்டலாம். தென் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாட்டு மக்களை இணைக்கும் “பாலமாக” இந்த ஆசிய ஹைவே அமையும். பிரதமர் நரேந்திர மோதி, இதற்கான முயற்சிகளை எடுக்கவேண்டும். இவையெல்லாம் உடனடியாக நடக்கின்ற விடயங்கள் அல்ல. ஆனால், இப்பொழுது அதற்கு விதையை போட்டால், 10-15 ஆண்டுகளுக்குப்பிறகு அது பிரம்மாண்டமான மரமாக வளரும். வளரமுடியும். அதற்கான ஏற்பாடுகளை இந்தியாதான் செய்ய முன்வரவேண்டும்.