ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ணைக்கட்டு, காட்பாடி, வேலூர், குடியாத்தம், கே.வி.குப்பம், இராணிப்பேட்டை, அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார். .
சிறுபான்மையினர் பாதுகாவலர் என்பது போல் நாடகம் நடத்தும் பழனிசாமி, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்துவிட்டு, இப்போது அதனை நீக்க வலியுறுத்துவோம் என்று கூறுவதை மக்கள் நம்புவார்களா?” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
ஜோலார்பேட்டையில் திரண்டிருந்த ஆயிரக்கணககாக பொதுமக்களிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அவர் உரையின் விவரம் வருமாறு:
“நீங்கள் எல்லாம் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரவேண்டும்.
ஜோலார்பேட்டை வேட்பாளர் தேவராஜி ஆம்பூர் வேட்பாளர் வில்வநாதன் திருப்பத்தூர் வேட்பாளர் நல்லதம்பி வாணியம்பாடி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முகமது நயீம் ஆகியோருக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.
வேலூர் மாவட்டத்தில் அமைச்சர் ஒருவர் இருக்கிறார், வீரமணி. பழனிசாமி அமைச்சரவையில் மூன்று அருமையான மணிகள் இருக்கின்றனர். வேலுமணி, தங்கமணி, வீரமணி.
வேலுமணி அப்பட்டமாக ஊழல் செய்பவர். எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார். தங்கமணி மறைமுகமாக ஊழல் செய்வார். வீரமணி எப்படி ஊழல் செய்வார் என்பது உங்களுக்கு தெரியும். ஏன் என்றால் எல்லோருடைய பெயரிலும் ‘மணி’ இருக்கிறது அல்லவா, அதனால் அவர்கள் மணியில் தான் குறிக்கோளாக இருப்பார்கள். கரெப்ஷன் – கமிஷன் – கலெக்ஷன் இதுதான் அவர்களுடைய கொள்கை.
தன்னுடைய அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி இந்தப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு – இந்த மாவட்டத்தில் இருக்கும் மக்களுக்கு அவர் எதுவும் செய்யவில்லை. கொள்ளையடிப்பதுதான் அவருடைய தொழிலாக – அதில்மட்டுமே மும்மரமாக இருப்பவர்தான் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் வீரமணி.
நான்கு வருடத்திற்கு முன்பு வருமான வரித் துறையினர் வீரமணி வீட்டிலும் வீரமணியின் பினாமிகள் வீட்டிலும் சோதனை நடத்தினார்கள். அதில் என்ன நடந்தது? அதில் என்ன நடவடிக்கை? என்பது யாருக்கும் தெரியாது.
மத்தியில் மோடியின் தலைமையில் இருக்கும் பா.ஜ.க. அரசு, அம்மையார் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோரின் பினாமிகள், உறவினர்கள் வீட்டில் சோதனை நடத்தினார்கள்.
அவ்வாறு சோதனை நடத்தி அங்கிருந்த ஆதாரங்களைக் கைப்பற்றிக் கொண்டு அவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார்கள். அதேபோல சோதனை செய்து சில அமைச்சர்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார்கள். அதில் ஒருவர்தான் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த வீரமணி.
வீரமணியினுடைய வேலை, இடங்களை வளைத்து உரியவர்களை மிரட்டி, அதை அடிமாட்டு விலைக்கு வாங்குவது. அதில் மிகவும் கெட்டிக்காரர் அவர். பகுதிநேர வேலையாக அல்லாமல் முழுநேர வேலையாக அவர் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.
வேலூரில் மையமான ஒரு இடத்தை வளைக்கும் தகராறில் இவரே நேரடியாக சம்பந்தப்பட்டார். அது சம்பந்தமாக வழக்குப் பதியப்பட்டு உயர்நீதிமன்றம் வரைக்கும் அந்தப் பிரச்சினை சென்றது. அதை விசாரித்த நீதியரசர்கள், “நிலம் தொடர்பான விவகாரத்தில் அமைச்சர் வீரமணியின் தலையீடு தனிப்பட்டமுறையில் இருப்பதாலும், அமைச்சர் என்ற முறையில் இல்லை என்பதாலும் அவருக்கு எதிரான புகாரில் நடவடிக்கை எடுக்க அரசின் அனுமதி தேவையில்லை” என்று தீர்ப்பு வழங்கிய வரலாறு தான், அமைச்சராக இருக்கும் வீரமணியின் வரலாறு. அந்த நில விவகாரத்தில் சிக்கிய வீரமணியின் வீடியோ வெளியானது.
தன்னுடைய கல்லூரிக்காக மணல் கொள்ளை, ஏலகிரி பெப்சி குடோன், சட்ட மீறல்கள் என்று பட்டவர்த்தனமாக எதையும் செய்வதில் கைதேர்ந்தவர்தான் இந்த வீரமணி. அப்படிப்பட்ட வீரமணியை இந்தத் தேர்தலில் நீங்கள் நிராகரிக்க வேண்டுமா வேண்டாமா? இந்தத் தேர்தலில் அவரைத் தோற்கடிக்க வேண்டுமா வேண்டாமா?
தேர்தல் நேரம் வந்துவிட்ட காரணத்தால் ஏதேதோ வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மையினர் மீது மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டவர்கள் போல நடித்துக் கொண்டிருக்கிறார்கள். தயவு செய்து சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
மாநிலங்களவையில் சிஏஎ சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க. எம்.பி.க்கள், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், என்.சந்திரசேகரன், முகமது ஜான், ஏ.கே.முத்துக்கருப்பன், ஏ.நவநீதகிருஷ்ணன், ஆர்.சசிகலா புஷ்பா, ஏ.கே.செல்வராஜ், ஆர்.வைத்திலிங்கம், ஏ.விஜயகுமார், விஜிலா சத்யானந்த் என்ற பத்து பேர். ஒரே ஒரு பா.ம.க. எம்.பி. அன்புமணி ராமதாஸ்.
இந்த பதினோரு பேரும் மத்திய அரசு கொண்டு வந்த சிஏஏ சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தினால் இந்தச் சட்டம் நிறைவேறிவிட்டது.
தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் அதை எதிர்த்து வாக்களித்தார்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மாநிலங்களவையில் ஆதரித்தவர்கள் 125 பேர். அதை எதிர்த்தவர்கள் 105 பேர்.
இந்த அ.தி.மு.க. – பா.ம.க.வை சேர்ந்த பதினோரு பேரும் எதிர்த்து வாக்களித்திருந்தால் இந்தச் சட்டமே நிறைவேறி இருக்காது.
இன்று நாடு முழுவதும் சிறுபான்மையினர் துன்பப்படுவதற்குக் காரணம் இந்த அ.தி.மு.க.வும் பா.ம.க.வும் என்பதைப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன். எனவே பழனிசாமியும் மருத்துவர் அய்யாவும் தான் இந்த சட்டம் நிறைவேறுவதற்கு காரணமாக இருந்திருக்கிறார்கள்.
ஆனால் இப்போது தேர்தலுக்காக நாடகம் போடுகிறார்கள். அவ்வாறு நாடகம் போடும் அவர்களை நீங்கள் நம்புகிறீர்களா?
இந்தச் சட்டத்தை எதிர்த்து தி.மு.க. பல முறை போராட்டம் நடத்தியது. அதுமட்டுமல்லாமல் இரண்டு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி குடியரசுத் தலைவரிடம் கொடுத்திருக்கிறோம்.
எனவே, இப்போது நான் உறுதியாக சொல்கிறேன். நாம்தான் ஆட்சிக்கு வரப் போகிறோம். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அது உறுதி… உறுதி… உறுதி… எனவே நாம் ஆட்சிக்கு வந்தவுடன், இந்த சிஏஏ சட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம். இது ஸ்டாலின் தரும் உறுதிமொழி.
சிறுபான்மையினருடனான உறவு என்பது தி.மு.க.வின் தொப்புள்கொடி உறவு. எனவே எப்போதும் சிறுபான்மையினர் சமுதாயத்திற்காக தி.மு.க. குரல் கொடுக்கும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.