Fri. Nov 22nd, 2024

கட்டுரையாளர் பாண்டியன் சுந்தரம், மயிலாடுதுறை…

ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகைக்குக் கோயில் கட்டுகிறார்கள். இன்னும் சிலரோ கவர்ச்சி நடிகை கடித்த எச்சில் ஆப்பிளை பல்லாயிரம் ரூபாய் கொடுத்து வாங்க போட்டி போடுகிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தைக் காண பெங்களூருவில் இருந்து ரஜினி ரசிகர்கள் தனி விமானத்தில் சென்னை வந்து சென்றார்கள். ரசிக மனோபாவம் இன்றுமட்டுமல்ல, என்றுமே இப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. 140 ஆண்டுகளுக்கு முன்னர் நம் தமிழ் ரசிகர்கள் எப்படி இருந்திருக்கிறார்கள் எனப் பார்ப்போமா?

திரைப்படங்கள் வருவதற்கு முன்னர் நூற்று நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது, 1880 -களில், நாடக அரசியாக விளங்கிய பாலாமணி அம்மையாரின் புகழ், தமிழகமெங்கும் கொடிகட்டிப் பறந்தது. இவர் சொந்தமாக நாடகக் கம்பெனி வைத்து நடத்தி வந்தார்.அதில் நடித்தவர்கள் அனைவரும் பெண்களே. இவர் நடத்தும் நாடகத்துக்கு பெரிய மவுசு அப்போது. அந்த காலத்தின் கனவுக் கன்னியாக இருந்தார். பாலாமணியை நேரில் பார்த்தால் அதை பாக்கியமாகக் கருதினார்கள் ரசிகர்கள். “டேய் நான் பாலாமணியை நேரில் பார்த்தவண்டா” என்று ஆண்கள் அந்தக் காலத்தில் மார்தட்டிக் கொள்வார்கள்.கும்பகோணத்தில், நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்தார் இவர். நடிக்க மட்டும்70 பெண்கள், அவருடைய கம்பெனியில் இருந்தனர்.

திருமணம் செய்து கொண்டால், நாடகப் பணி பாதிக்கப்படும் என்று, கடைசி வரை, திருமணமே செய்து கொள்ளவில்லை பாலாமணி.நாடகங்களால் சம்பாதித்த பணத்தில், பெரும் பகுதியை கோவில் திருப்பணிகளுக்கும், ஆதரவற்ற பெண்களுக்குமே செலவிட்டார். குடந்தை கும்பேஸ்வரர் கோவிலிலுள்ள திருமண மண்டபம் இவர் பெயரில் உள்ளது.கும்பகோணத்தில், பாலாமணியின் வீடு பெரிய அரண்மனை போல இருக்கும். வீட்டில், ஆண்களும், பெண்களுமாக 60 பணியாட்கள் இருப்பர். கல்யாண வீடு போல தினமும் சமையல் நடக்கும்.நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட சாரட்டு வண்டியில் தான் பாலாமணி அம்மாள் போவார். வெல்வெட் திரைச் சீலைகளால் அதன் பக்கவாட்டுப் பகுதிகள் மூடப்பட்டிருக்கும்.

வண்டியைக் காண்பதன் மூலமே மானசீகமாக பாலாமணியைப் பார்த்தது போல இளைஞர்கள் மட்டுமல்ல, முதியவர்களும் பெருமூச்சு விடுவர்.அவரை நாடகங்களில் ஒப்பனையுடன் தானே பார்க்கிறோம்… நேராகப் பார்க்க வேண்டுமென்று நீண்ட தூர கிராமங்களிலிருந்து மக்கள் மாட்டு வண்டிகளிலும், கால்நடையாகவும் வந்து, அவர் வீட்டு வாசலில் இராப் பகலாக நின்று கொண்டிருப்பர். இப்படியே தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் நிற்பர்.பாலாமணியின் வீட்டு முன்புறம் மாடியில் ஒரு பெரிய உப்பரிகை இருக்கும். அங்கு சென்று பாலாமணி தன்னுடைய தலைக் கேசத்தைக் கோதி, அது காய்வதற்காக அங்குமிங்கும் நடப்பார். வாசலில் நின்று கொண்டிருக்கும் மக்கள், பாலாமணியை வானிலிருந்து இறங்கிய தேவதை என நினைத்து, திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருப்பர்.

தாராச சங்கம் என்ற நாடகத்தில் சந்திரன், தாரை என்ற பெண்ணை அடிமையாக வைத்திருப்பார். சந்திரன் எது சொன்னாலும் தாரை கேட்பாள். ஒரு முறை “நீ எனக்கு நிர்வாணமாக வந்து எண்ணெய் தேய்ந்து விடு” என்பார் சந்திரன். அவர் பேச்சைத் தட்டமுடியாத தாரா, அப்படியே செய்வார். இந்தக் காட்சி பாலாமணி நாடகத்தில் இடம்பெற்றது. சந்திரனாக ஒரு பெண் நடிக்க தாரையாக பாலாமணி நடித்தார். உடலில் மெல்லிய வெள்ளை ஆடை (தற்போதைய லெக்கின்ஸ் ஆடை போன்றது) அணிந்து சந்திரனுக்கு எண்ணெய் தேய்த்து விடுவார். அப்போது மின்சாரம் கிடையாது. தீப்பந்தம் வெளிச்சம்தான். அதில் இந்தக் காட்சி அவர் நிர்வாணமாக தோன்றுவது போலவே இருக்கும். இந்தக் காட்சிக்காகவே அந்த நாடகம் வருடக் கணக்கில் நடந்தது.

கும்பகோணத்தில் நாடகம் இரவு ஒன்பதரை மணிக்கு ஆரம்பமாகும். மாயவரத்திலிருந்து இரவு எட்டு மணிக்கு ஒரு ரயில் கும்பகோணத்திற்கு வரும். அதேபோல எட்டரை மணிக்கு திருச்சியிலிருந்து ஒரு ரயில் வரும். அந்த ரயில்கள், கும்பகோணத்தில் நின்று விட்டு, இரவு மூன்று மணிக்கு மீண்டும் புறப்பட்டு, மாயவரத்துக்கும், திருச்சிக்கும் போய்விடும். பாலாமணி நாடகங்களைப் பார்க்க ரசிகர்களுக்காகப் பிரத்யேகமாக விடப்பட்ட காரணத்தால் அந்த ரயில்களை, ‘பாலாமணி ஸ்பெஷல்’ என்று அழைத்தனர்.

மகாராணி போல் வாழ்ந்த பாலாமணி அம்மாளின் கடைசிக் காலம், கலைஞர்களுக்கே உள்ள சாபக்கேடு போல மிகவும் சோகமாக அமைந்து விட்டது. சம்பாதித்த பணத்தில் கடைசி காலத்துக்கு என்று காலணா கூட சேமித்து வைத்துக் கொள்ளவில்லை. நோய்வாய்ப்பட்டு மதுரைக்குச் சென்று ஒரு சிறிய குடிசை போன்ற இடத்தில் தங்கினார். நாடகக் குழுவில் உடனிருந்த மற்ற பெண்கள் எல்லாம் அவரவர்களுக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்து, எங்கெங்கோ சிதறிச் சென்று விட்டனர்.பாலாமணி இறக்கும் போது, அவருக்கு, 65 வயது. சி.எஸ்.சாமண்ணாதான் விஷயம் தெரிந்து, மதுரையில் இருந்த நாடக நடிகர்களிடம் இரண்டணா, நாலணா என்று வசூலித்து, பிரேத அடக்கத்திற்கு ஏற்பாடு செய்தார்.

இவற்றையெல்லாம் பழம்பெரும் நடிகர் எம்.கே.ராதா, ஒரு கட்டுரையில் எழுதி இருக்கிறார்.

78Sindhu Baskar, Kavithuli Saktheeswaran மற்றும் 76 பேர்12 கருத்துக்கள்20 பகிர்வுகள்விரும்புகருத்துத் தெரிவிபகிர்