Fri. Apr 19th, 2024

பிக் பாஸ் மூலம் பிரபலமானவர் மாடல் அழகி மீரா மிதுன். அழகி போட்டிகளில் சக போட்டியாளர்களுடன் மல்லுகட்டியதால், மிதுனுக்கு எதிராக பாதிக்கப்பட்டோர் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தனர். தனிமனித வாழ்வில் சாதனைகளைப் படைத்து உச்சத்திற்கு சென்ற பிரபலங்களை தாறுமாறாக பேசுவதாகவும், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அவதூறாக பேசுவதாகட்டும் மிதுனைப் போல ஒரு பெண்மணியை பார்க்க முடியாது என்று மாடல் உலகில் குற்றச்சாட்டு வாசிக்கின்றனர். இதனிடையே, திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்த மீரா மிதுன், பிரபல கதாநாயர்களைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் அவதூறு பரப்பினார்.
இப்படி ஒட்டுமொத்தமாக சர்ச்சை நாயகியாக வலம் வந்த மீரா மிதுனுக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுனை சென்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் நீண்ட சிறை வாசத்திற்குப் பின்னர் ஜாமீனில் வெளியே வந்த மீரா மிதுன், முதல் அமைச்சர் குறித்து அவதூறாக பேசிய வீடியோ ஒன்று வாட்ஸ் அப் குரூப்புகளில் வைரலானது. இதனைத்தொடர்ந்து, முதல்வர் குறித்து அவதூறாக பேசிய புகாரின் பேரில் மீரா மிதுனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த சென்னை போலீசார் அவரை கைது செய்யும் நடவடிக்கைகளில் முனைப்பு காட்டி வந்தனர்.
கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும் விதமான மீரா மிதுன், முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதன் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், அவதூறு பரப்புவதையும், உண்மைக்கு புறம்பாக கூறுவதையும் மீரா மிதுன் வாடிக்கையாக கொண்டுள்ளார் என ஆவணங்களை ஆதாரமாக முன்வைத்து வாதிட்டார்.
மீரா மிதுன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், காவல்துறையினர் தன்மீது பொய்யாக வழக்குப்பதிவு செய்துள்ளார் என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களைக் கேட்டு நீதிபதி, முன்ஜாமீன் கேட்டு மீரா மிதுன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன், அவரை கைது செய்து சட்டத்திற்குட்பட்டு விசாரணை மேற்கொள்ளும்படியும் காவல்துறைக்கு அறிவுரை வழங்கினார்.