மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தை விட, தற்போதைய பழனிசாமியின் நான்காண்டு ஆட்சியில் அதிகளவு ஊழல் நடந்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
வேப்பனஹள்ளி, ஊத்தங்கரை,பர்கூர், ஓசூர், தளி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
அதிமுக.,வில் அமைச்சர் பதவியில் இல்லாமலேயே அமைச்சர் போல அதிகாரம் காட்டிக் கொண்டு இருக்கிறார் கே.பி.முனுசாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவர் உண்ணாவிரதம் இருந்தார். பின்னர், அதிமுக.வில் இணைந்தவுடன் அவருக்கு கட்சியில் பதவியும், பொறுப்பும் கிடைத்தது.
அதனால், ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து இப்போதெல்லாம் வாயே திறப்பதில்லை. அரசு ஒப்பந்தங்களில் 30 சதவீதம் கமிஷனுக்கு பெயர் போன முனுசாமி, கூட்டணி பேச்சுவார்த்தையின் போது பாமக.,வின் ஏஜென்டாகவே செயல்பட்டார் என தேமுதிக புகார் தெரிவிக்கிறது.
முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி, பாஜக.வின் அடிமை ஆட்சியாக உள்ளது. நீர் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்த முடிந்ததா, இல்லை. ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை கேட்டு போராட முடிந்ததா, இல்லை. இந்த லட்சணத்தில் மோடி எங்கள் டாடி என்று கூறிக்கொண்டு திரியும் அதிமுக அரசை தூக்கியெறிய வேண்டும்/ஒரு அதிமுக எம்எல்ஏ வென்றாலும், அவர் பா.ஜ., எம்எல்ஏ.,வாகவே செயல்படுவார். என்று மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
முன்னதாக, கிருஷ்ணகிரி தொகுதி திமுக வேட்பாளர் செங்குட்டுவனை ஆதரித்து, கடை வீதி பகுதியில் நடந்து சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு திரட்டினார். பெண்கள், வணிகர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து திமுக.வுக்கு வாக்கு சேகரித்தார். இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்டோர் மு.க.ஸ்டாலினுடன் போட்டி போட்டுக் கொண்டு ஆர்வமாக செல்பி எடுத்துக் கொண்டனர்.
அங்கு திரண்டிருந்த மக்களிடம்பேசிய மு.க.ஸ்டாலின், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 1991-96 வரையிலான ஆட்சியை விட, பழனிசாமி தலைமையிலான இந்த அரசு தான் அதிகளவு ஊழல் செய்துள்ளது. ஊழல் செய்யாத நாளே இல்லை என்று சொல்லும் அளவிற்குதான் எடப்பாடி பழனிசாமியின் இந்த நான்காண்டு ஆட்சிக்காலம் உள்ளது.
கொரோனா தொற்று காலத்தில் பொதுமக்கள் வருவாயின்றி துன்பப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் மாஸ்க், துடைப்பம் வாங்குவதில் கூட அதிமுக அமைச்சர்கள் ஊழல் செய்தனர். உள்ளாட்சி துறையை ஊழல்துறையாக மாற்றிவிட்டார், அந்த துறையின் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
மே 2 ஆம் தேதிக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் பழனிசாமி முதல் அமைச்சர்கள் வரை அனைவர் துறையிலும் நடைபெற்றுள்ள ஊழல்களை கண்டுபிடித்து விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.20 தொகுதியில் பா.ஜ., சார்பில் யாரும் வெற்றிப்பெற போவதில்லை. அந்த கட்சிக்கு கிடைக்கும் முடிவு போலவே அதிமுக சார்பிலும் ஒரு எம்.எல்.ஏ கூட வெல்லக்கூடாது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.