Sat. May 18th, 2024

திருச்சி மாவட்டம், குண்டூரில்திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி இன்று காலை வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார். ஏனெனில் சொல்வதை செய்வோம் செய்வதை சொல்வோம் என்று தேர்தல் வாக்குறுதிகளை கூறி நிறைவேற்றிய கலைஞர் மு.கருணாநிதியின் மகன்தான் அவர்.

பெண்களின் உரிமை தொகையாக மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். மே 2 ஆம் தேதிக்குப் பிறகு திமுக ஆட்சியில் அமர்ந்தவுடன் இந்த திட்டத்தை நிறைவேற்றி வைப்பார் மு.க.ஸ்டாலின்.

மேலும், பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் கட்டணம் கிடையாது. ஒரு கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் செ, பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறைக்கப்படும். முடங்கி கிடக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் திமுக ஆட்சிக்கு வந்ததும் அது செயல்பட தொடங்கும்.

ஆண்கள் தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். 5 சவரன் வரை அடகு வைத்துள்ள கடன் தொகை ரத்து, விவசாயக் கடன் தள்ளுபடி, வேலைவாய்ப்பில், 75 சதவீதம் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும்.

தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம் என்று அதிமுக அடிமை அரசு பிறப்பித்துள்ள அரசாணை ரத்து செய்யப்படும். பொன்மலை பணிமனையில் 80 சதவீதம் மற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதை கண்டித்து திருவெறும்பூர் எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி போராட்டம் நடத்தினார்.

பாஜக வேட்பாளர் பட்டியலிலேயே இந்தி இடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் இந்தியை திணிக்க முயலும் பாஜக அரசை எதிர்க்க, அதிமுக அரசுக்கு முதுகெலும்பு இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடனேயே காலி பணியிடங்கள் 3 லட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கு வழங்கப்படும். அன்பில் மகேஷ் பொய்யாமொழியை எதிர்த்து இந்த தொகுதியில் போட்டியிடும் அதிமுக முன்னாள் எம்பி குமார், திருச்சி மாவட்டத்திற்காகவும், தமிழகத்திற்காகவும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததே இல்லை.

இந்த தொகுதியின் வளர்ச்சிகாக, திமுக ஆட்சியில் இல்லாத காலத்தில் எம்எல்ஏவாக உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி எந்த வளர்ச்சித் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமானாலும் போராடித்தான் செய்ய வேண்டியுள்ளது.

டெல்லியில் தமிழகத்தை அடமானம் வைத்ததால் தான் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் படிப்பது தடைபட்டது. மத்திய அரசிடமிருந்தும், மாநில அதிமுக அரசிடமிருந்தும் தமிழ் நாட்டை மீட்டெடுக்க திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆக வேண்டும். உங்கள் ஆதரவை திமுக மற்றும் கூட்டணி கட்சிக்கு பெருவாரியாக வழங்க வேண்டும்.

இவ்வாறு கனிமொழி எம்.பி பேசினார்.