தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனோ பாதிப்பு ஆயிரத்தை கடந்து நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. 2 வது அலையா, 3 வது அலையா என்றே தெரியாத வண்ணம், சென்னையில் மட்டுமின்றி மாவட்டங்களிலும் கொரோனோவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, கடந்த ஒரு வாரமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது.
கொரோனோ தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு உரிய சிகிச்சை வழங்க தமிழக அரசும், ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய தனிப்பிரிவுகளை தயாராக வைத்திருக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிலவிய பரபரப்பு போல, கடந்த ஒரு வாரமாக சுகாதார துறை அதிகாரிகளும் அவசர காலத்தில் பணியாற்றுவதைப் போலவே பணியாற்ற தொடங்கி இருக்கிறார்கள்.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 15 நாள்களே உள்ளே நிலையில், தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை உருவாகிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில்தான் இருக்கிறது தமிழக சுகாதாரத்துறையின் நடவடிக்கைகள்.
தமிழகத்தைப் போல சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள கேரள மாநிலத்திலும் கொரோனோ தொற்று பாதிப்பு தமிழகத்தை விட இருமடங்காக இருக்கிறது. இவ்விரு மாநிலங்களிலும் தேர்தல் காலம் என்பதால், கொரோனோ தொற்று பரவலை கட்டுப்படுத்த, மீண்டும் ஊரடங்கு அறிவிக்க, ஏப்ரல் 6 க்கு முன்பாக வாய்ப்பு இல்லை என்று தமிழக அரசு உயரதிகாரிகள் தெரிக்கிறார்கள்.
இந்தியாவில், அண்மைக்காலமாக கொரோனோ தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில், மகாராஷ்டிரா மாநிலம்தான் முதலிடத்தில் உள்ளது. கொரோனோ பரவலை தடுக்க, ராஜஸ்தான் மாநிலத்தில் 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமலுக்கு வருகிறது. குஜராத் மாநிலத்தில் புகழ்பெற்ற ஹோலி திருவிழா ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லாவுக்கு கொரோனோ தொற்று அறிகுறி நேற்று கண்டறியப்பட்டது. சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்றுதான் வெளியிடப்பட்டது.
இதனிடையே, கொரோனோ பரவலை கட்டுப்படுத்த, பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இப்படி தமிழகத்தைச் சுற்றியிருக்கிற மாநிலங்களும், கொரோனோ தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் முனைப்பு காட்டி வரும் நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என ஒருசாரார் கேள்விகளை எழுப்பத் தொடங்கிவிட்டனர்.
அதேசமயம், எதிர்க்கட்சித் தலைவர்களிடமும் ஊராடங்கு தொடர்பான ஒரு வித சந்தேகம் எழுந்துள்ளது. அதுதொடர்பாக வெளிப்படையாக அவர் பேச முன்வராவிட்டாலும் தேர்தலுக்கு முன்பாக (தே.மு) ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா அல்லது தேர்தலுக்குப் பிறகு (தே.பி) ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா என எதிர்க்கட்சியில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் தங்களுக்குள்ளாகவே விவாதிக்க தொடங்கிவிட்டனர்.
எப்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும், திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிக்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில், இந்த ஊரடங்கு அறிவிப்பை மத்திய பாஜக அரசு பயன்படுத்திக் கொள்ளுமா என்ற அச்சம், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த இரண்டாம் கட்ட தலைவர்களிடம் தற்போது விவாதமாக மாறியிருக்கிறது.
புதுச்சேரியில் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக நடைபெற்ற களேபரங்களை வைத்துப் பார்த்தால், கொரோனோவைக் காரணம் காட்டி, தமிழகத்திலும் அசம்பாவித நிகழ்வுகள் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அச்சமூட்டுகின்றனர், சமூக ஆர்வலர்கள்.