தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு சட்டதிருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் மாநில பட்டியலில் உள்ள தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி, வாதிரியான் ஆகிய 7 உட்பிரிவுகளை பொதுப் பெயரான தேவேந்திர குல வேளாளர் என அழைக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட தலித் அமைப்புகள் வலியுறுத்தின.
இந்த கோரிக்கையை பரிசீலித்து, அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக, கடந்த 2019 மார்ச் மாதம், ஐஏஎஸ் அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் குழு ஒன்றை தமிழக அரசு நியமித்தது. அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்களை இனி தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரில் அழைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்கலாம் என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனை ஏற்று, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக 2020 டிசம்பரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்
தமிழக அரசின் த பரிந்துரையை ஏற்று, 7 பட்டியலின உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று பொதுப் பெயரிட வழி செய்யும் சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது. மேலும், இதுதொடர்பாக, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்படும் இந்த திருத்தம் தமிழகத்திற்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அரசு விழாவில் பங்கேற்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி சென்னை வந்திருந்த பிரதமர் மோடி,தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப் பெயரில் அழைப்பதன் மூலம் அந்த சமுதாய மக்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பெருமிதத்துடன் கூறினார்.
இந்நிலையில், இன்று மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
தேவேந்திர குல வேளாளர் மசோதா, பட்ஜெட் கூட்டத் தொடரின் அடுத்த அமர்வில் விவாதத்திற்கு வரும் என எதிபார்க்கப்படுகிறது அத்துடன், மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றபின் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.